இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 10 – சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 09 தொடர்ச்சி]
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 10
சிறுமியர் தினைப்புனங் காத்தலும் ஆடவர் வேட்டையாடுதலும் உணவைத்தரும் பொழுதுபோக்காக ஆயின. தினைப்புனம் காக்கும் இளமகளிரை வேட்டையாடும் ஆடவர் கண்டு காதலிப்பதும், பின்னர்ப் பல்வகை நிகழ்ச்சிகளால் காதல் கடிமணத்தில் நிறைவேறுவதும் குறிஞ்சி நிலத்திற்குரிய சிறப்பு நிகழ்ச்சிகளாக இலக்கியங்களில்இடம் பெற்றன.
மருத நிலத்தில் வாழ்ந்தோர் கடவுளை வேந்தன் என்று கூறி வழிபட்டனர். வேந்தன் என்றால் விருப்பத்திற்குரியவன் என்று பொருள். `வெம்’ என்ற அடியிலிருந்து தோன்றிய சொல்லாகும். கடவுள் மக்கள் விருப்பத்திற்குரியவர் ஆதலின், அவ்வாறு அழைத்தனர் போலும். முதலில் அச் சொல் தம் நாட்டுத் தலைவராம் அரசரைக் குறித்தது. பின்னர் உலகத் தலைவராம் கடவுளுக்கும் அப் பெயரை இட்டுள்ளனர். இறை, கோ என்ற சொற்கள் அரசரையும் கடவுளையும் குறிக்கும் ஒற்றுமை காண்க.
மருதநிலம்தான் நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணையாகும். உழுதொழில் சிறந்து உணவும் பிறவும் நிறையப் பெற்று ஓய்வும் வாய்க்கப் பெற்றவர்கள் மருத நிலத்தோரே. குடிகள் தழைத்துக் கோன் உயர்ந்து புலவர்கள் நிறைந்து கலையும் இலக்கியமும் கடவுள் வழிபாடும் விழாவும் இங்கே பல்கிப் பெருகின. வடமொழியாளர் கூட்டுறவு ஏற்பட்ட பின்னர் வடமொழி நூல்களில் கூறப்பட்ட இந்திரனும், தமிழர்கள் போற்றிய வேந்தனும் ஒருவனே என்று கருதினர். பின்னர், இந்திரன் என்ற பெயர் தேவர்களுடைய தலைவனுக்குரியதாகிப் பல கதைகள் தோன்றிக் கடவுளைக் குறிக்கும் பொருளை இழந்து விட்டது.
இந் நிலத்தோர் உணவுப் பொருளாகச் செந்நெல்லையும். வெண்ணெல்லையும் கொண்டனர்; விலங்குகளாக ஆவும் எருமையும் பெற்றிருந்தனர்.
சிறப்பு மரங்களாக வஞ்சியும் காஞ்சியும் மருதமும் வளர்ந்தோங்கின. பறவைகளில் தாராவும் நீர்க்கோழியும் இங்குச் சிறப்புப் பெற்றன. மண முழவும் நெல்லரிகிணையும் இப் பகுதியினரின் சிறப்பு இயங்களாகும். இப் பகுதியினர் விரும்பிப் போற்றிய பண் மருதம் என்றே அழைக்கப்பட்டது. யாழும் மருதயாழ் என்ற பெயரைப் பெற்றது. இங்குள்ள மக்கள்தாம் உழுதொழிலையே சிறப்பாகச் செய்தனர்.
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு
(ஒளவையார் : நல்வழி : 14)
என்று உலகை நோக்கி ஓங்கி மொழிந்தனர். மக்கள் வாழும் பகுதிக்கு ‘ஊர்’ என்ற பெயர் இங்குத்தான் தோன்றியது. ‘ஊர்’என்றால் ‘குடியேறு’, ‘பரவு’ என்னும் பொருளதாகும். மக்கள் விரும்பிக் குடியேறுவதற்குரிய பகுதியென்றும், சிறிது சிறிதாக விரிவடையும் பகுதியென்றும் பொருள் தரும்.
நீர்வளம் மிக்க பகுதி இதுதான். ஆறும் குளமும் கிணறும் எங்கும் மக்களைப் புறந்தூய்மை பெறச் செய்து அகத் தூய்மையுடன் வாழத் துணைபுரிந்தன.
நெய்தல் நிலத்தோர் கடவுளை வண்ணன் என்று அழைத்தனர். அது பின்னர் வருணன் என்று ஆயது. ‘வண்ணம்’ வருணம் என்று ஆனதுபோல, உலகிற்கு வடிவையும் நிறத்தையும் கொடுத்தவர் கடவுளேயாதலின் கடவுள் ‘வண்ணம்’ என்று அழைக்கப்பட்டார். பின்னர் வடமொழி நூல்களில் கூறப்பட்ட மழைக் கடவுளாம் வருணனும் தமிழ்நாட்டு வண்ணனும் ஒருவனாகக் கருதப்பட்டனர். வருணன் என்ற சொல் ஆட்சியில் நிலைத்துவிட்டது. இங்கு வாழ்ந்தோர் நெடுங்கடலில் சென்று மீன் பிடித்தனர்; உணவுக்கு இன்றியமையாத உப்பு விளைவித்தனர். இவற்றை வெளியிடங்கட்குக் கொண்டு சென்று விற்று வாழ்ந்தனர். வெளியிடங்கட்குக் கொண்டு செல்வதற்குப் பகடுகள் பயன்பட்டன. வண்டிகளிலும் கொண்டு சென்றனர்.
‘இரங்கல்’ உணர்வை எழுப்பும் நெய்தல் பண்ணில் பற்றுகொண்டனர். அவர்கள் பெற்றிருந்த யாழும் நெய்தல் யாழ் எனும் பெயரைப் பெற்றது. மீன் பிடிப்பதற்குத் துணையாகப் பறைகளை முழக்கவும் அறிந்திருந்தனர். அப் பறை மீன் கோட்பறை என அழைக்கப்பட்டது.
புன்னை, ஞாழல், கண்டல் இங்கு மிகுதியாக வளர்ந்தன. அன்னமும் அன்றிலும் அவர்கள் விருப்பத்திற்குரிய பறவைகளாயின. கடலே வெளிநாட்டு வாணிபத்தைப் பெருக்குவதற்குத் துணை புரிந்தது. கடற்கரைகளில் வாணிபச் சிறப்பால் நகரங்களும் ஊர்களும் உண்டாயின. அவை பட்டினம் என்றும் பாக்கம் என்றும் அழைக்கப்பட்டன.
‘பாலை’ என்ற நிலப்பிரிவு பண்டு தமிழகத்தில் இருந்திலது. முல்லைநிலமும் குறிஞ்சிநிலமும தட்பவெப்ப மாறுபாடுகளால் வேறுபட்டுப் பாலை நிலமாக உருப்பெற்றன. அங்கு மக்கள் வாழ்தல் இயலாது. பிரிவுத் துன்பத்தை மிகுத்துக் காட்டுவதற்கு இலக்கியங்களில் ‘பாலை’த் திணையை அமைத்து அழகுறப் பாடுதல் உண்டு. அவ்வாறு பாடுங்கால் அந் நிலத்தைப்பற்றிய செய்திகளில் கொள்ளற் பாலனவற்றை உரையாசிரியர்கள் தொகுத்துக் கூறியுள்ளனர்.
(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்
Leave a Reply