தலைப்பு-கலித்தொகையின் கவின்மிகு சிந்தனை, இ.சூசை :thalaippu-kalithokai,susai

இளங்காலைப் பொழுதில் சுறுசுறுப்புடன் இயங்கும் வானொலி நேயர்களே!

வணக்கம்.
நம் முன்னோர்கள் காதல் இலக்கியங்களில் கூட அறம் உணர்த்திய ஆன்றோர்கள் ஆவர். கலித்தொகை என்ற கவின்மிகு இலக்கியத்தில் இதனை நுகர முடிகிறது.

தலைவன் பொருளுக்காகப் பிரிந்து செல்கிறான். தலைவி வாடுகிறாள். அப்போது தோழி சொல்கிறாள்.

“இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவு”

ஒரு ஆண்மகனிடம், “இல்லை! ஈகை செய்யுங்கள்” எனக் கேட்கும்போது அவன் “இல்லை” என வறுமையில் வாடுவது அவனுக்கு இழிவு. உன் தலைவன் உழைத்துப் பொருள் ஈட்டட்டும் என்கிறாள்.

“இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவு
ஐய! தொலைவாசி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவு”

என்பன கலித்தொகை தொடர்கள். “ஐயா! முன்பு யாம் பொருள் மிகப் பெற்று இருந்தேன். இன்று இழிநிலை அடைந்தேன்” என ஒருவர் கேட்கும் போது ஈவதே ஆண்மகன் கடமை.

“வேறு எவரையும் எனக்குத் தெரியாது; உதவுங்கள்” எனக் கேட்டு இழிந்து நிற்பதும் இழிவு. அப்போது உதவாமை அதனினும் இழிவு என்கிறது கலித்தொகை.

பாலைநிலத்தில் மரம் இலைதழைஇன்றி மெலிந்து நிழல்தர இயலாத நிலையில் உள்ளது.

“வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்
சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழல்இன்றி
யார் கண்ணும் இகந்து செய்து இசைகெட்டான் இறுதிபோல் 
வேறொடு மரம் வெம்ப”

என்கிறது கலித்தொகை.

வறுமையாளனைப் போன்ற கிளை, சேர்ந்தவர்க்கு உதவாது இந்த மரமும் நிழல்தராது. ஈகை செய்யாதவன் செல்வம் பயனற்றது. ஈகைசெய்யாதவன் புகழின்றி அழிவதுபோல் மரம் வீழ்ந்து கிடந்த பாலை நிலம்.
பாலைநில வருணனையில் மரத்தின் ஒல்லியநிலைக்கு ஈயாதான் செல்வம் உவமையாக்கப்படுகிறது.
செல்வத்துப்பயன் ஈதல்” இவண் கூறப்படுகிறது.

கொடுமையான பாலைநிலம் ஒரு மன்னன் கொடுங்கோலன், கொடிய அமைச்சர்கள் வரிவசூலித்து அச்சுறுத்தி மக்களைப் பிழிகின்றனர். அவன் அழிந்தது போன்ற பட்டுபோன மரங்கள்.

“அலவுற்று குடிகூவ, ஆறிடுன்றி பொருள்வெஃஇ
கொலை அஞ்சா வினைவரால் கோல்கோடி அவன்
நிழல் உலகு போல் உலறிய வெஞ்சுரம்”

ஆட்சியாளர்கள் மக்களுக்குத் துயிரின்றி ஆண்டிட பாலைநில வருணனையில், காதல் கவிதையில் அறிவுரை கூறுகிறது கலித்தொகை.

தலைவனின் பொருட்டு பிரிவு நீங்கியது எனக் காதல் பேசும்போதும், மன்னன் மக்களை வஞ்சித்தலும், ஈகை செய்யாதவன் புகழன்றி மடிதலும் கொடுமையான பாலைநிலத்திற்கும் அடிபெயர்ந்து வீழ்ந்த மரத்திற்கும் உவமையாயின.

“விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்இயல்பு அன்றே”

என்ற கற்புநெறியும் கலித்தொகையில் காணமுடிகிறது. உலகத்தையே தந்தாலும் கொண்ட கொழுநனுடன் (கணவனுடன்) வாழும் உயர் பண்பாடு வலியுறுத்தப்படுகிறது. குடும்ப நிறுவனம் வலிமையானது. ஈராயிரம் ஆண்டு அறம் நம் அகஇலக்கியங்களில் வலியுறுத்திக் கூறப்படுகிறது.

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளைச் செறாஅமை
அறிவு எனப்பது பேதையார் சொல்நோன்றல்.
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை 
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

என்ற தோழிக் கூற்றில் தலைவனைப் பக்குவப்படுத்தும் உயர்விழுமியங்கள் கூறப்படுகின்றன.

 

இ. சூசை, இ.சூசை :i.susai-thamizhsusai

இணைப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

தூய வளனார் கல்லூரி, திருச்சி-620002.
திருச்சிராப்பள்ளி வானொலி உரை  15.10.2046 / 01.11.2015