சங்க இலக்கியங்கள் இயற்கை இன்பம் தருவன! புராணங்களோ பொருந்தாப் பொய்கள் நிறைந்தன! – அண்ணா
சங்க நூல்களிலோ யானை அலறக் கேட்டு அஞ்சிய தலைமகளை, அஞ்சற்க என்று கூறி ஆதரித்த தலைமனைக் காண்கிறோம். பிறகோ, அண்ணலை யானைøயாக்கி அனுப்பி வள்ளியைப் பயமுறுத்தி மணம் புரியும் வேலன் கதை வீடுதோறும் காண்கிறோம். சங்க நூல் சித்திரம் சிலருக்கே தெரியும். புராணமோ, தெரியாதவர் மிகமிகச் சிலரே. சங்க நூல்களிலே, மந்திக்குக் கனிபறித்தீயும், காதற்கடுவனைப் பற்றிய சித்திரம் காண்கிறோம். பிறகோ, சஞ்சீவி பர்வதத்தைப் பெயர்ந்தெடுக்கும் சர்வ பண்டிதனாரம் அனுமனைக் காண்கிறோம். உண்மை உவமையை உரைத்த உயர்நூலை அறிந்தோர் சொற்பம்; புராணக் கதையைப் போற்றிடுவோரே பெருந்தொகையினர்.
ஆண்மான் பெண்மானுக்குக் துணை நிற்கும் அழகிய காதலறத்தைக் காட்சியாக்கிய கவிதை படித்த தமிழனுக்கு, மாரீசனின் மாயமான் கதை கலையாக்கப்பட்டு விட்டது. முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம், பாலை எனும் நிலப்பண்பு தெரிந்து இன்புற்ற இயல்பு முன்பு. பிறகோ,
1. நாலு வருணம் என்னும் நச்சுப் பொய்கையில் நெளியும் நிலைமை.
2. நறுமலர்க் கூடையிலே நச்சரவு இருந்திடின், மலர் தேடும் கையிலே நச்சுப் பல் அன்றோ தீண்டும்.
3. பழைய காப்பியத்திலே பாசம் அதிகரித்தால், திராவிடப் பண்பு பாழ்படத்தான் வழி இருக்கிறது என்பதறிந்தே, நம்மை மாய்க்க வந்தவர்கள், கலைப்படிப்பை ஆதரித்துப் பல்லவி பாடுகின்றனர்.
– பேரறிஞர் அண்ணா: “”அண்ணாவின் சிந்தனைகள்”: தொகுப்பாசிரியர் புலவர் இளஞ்செழியன்: பக்கம்: 87-88
Leave a Reply