[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி]  தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ]

  1. இதழாயுதம் ஏந்திய போராளி

 போராளிப் பணி ஒரு துறையுடன் முடிவடைவதில்லை. போராளிக்கு ஓய்வேது? ஒழிவேது? பேராசிரியரும் கல்விநிலையம் சார்ந்த பணியுடன் நின்று விடவில்லை. இதழ்ப்பணி மூலமாகத் தம் தொண்டினைத் தமிழ் உலகம் முழுவதும் விரிவு படுத்தினார். தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே தமிழைச் சிதைக்கும் பல அமைப்புகள்போன்ற ஒரு குழு (வட்டத்தொட்டி) நடத்திய கூட்டத்தில் ‘சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்’என்று முழங்கினர். இதை அறிந்த பேராசிரியர் இலக்குவனார், தமிழ் இலக்கியத்தை அழிப்பது என்பது தமிழ்க்கலையை – தமிழ்ப் பண்பாட்டை – தமிழ் நாகரிகத்தை – அழிப்பதன் மூலம் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் அழிப்பது என்ற உணர்வின்றி முழங்குகின்றனரே என உள்ளம் நைந்து கொதித்து எழுந்தார். ஏதோ பேசுகிறார்கள்; பேசட்டும் என்று விட்டுவிடவில்லை.  அல்லது மறுப்பு சொல்லிவிட்டு வாளா இருப்போம் என அமைதி காக்கவில்லை. சங்க இலக்கியப் பகைவர்களால் ஏற்பட்ட மாசினைத் துடைக்க வேண்டும் எனப் பேராசிரியர் இலக்குவனார் விழைந்தார்; ‘சங்கத் தமிழ் பாடித் தமிழர் புகழ் வளர்ப்போம்’ என முழங்கிச் சங்க இலக்கியப் பரப்புரையைத் தொடர்ந்தார். ‘சங்க இலக்கியம்’ என்னும் வார ஏட்டினைத் தொடங்கிச் சங்க இலக்கியங்களை எளிமையாக விளக்கினார். கதை கூறும் முறையில் புதுமையாக அவர் சங்க இலக்கியப்பாடல்களை விளக்கியமைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. கதைகளைப் படிக்கும் ஆர்வம் மிகுந்தவர்களுக்குக் கதை வடிவில் இலக்கியத்தைச் சுவைப்பது இன்பமாக இருந்தது. சங்க இலக்கியம் பெரும் புலவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் மாறி மக்களுக்கான இலக்கியம் என்ற எண்ணம் வேரூன்றியது. ‘இரும்புக்கடலை என இகழப்பட்ட பாடல் இன்சுவை அமுதமாகக் கருதப்பட்டது’ எனப் பேராசிரியரே இது குறித்துக் கூறி உள்ளார்.

 தாம் மட்டும் சங்க இலக்கியத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டால் போதாது எனக் கருதினார் பேராசிரியர் இலக்குவனார். எனவே, பிற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் என அனைவருக்கும் “சங்க இலக்கியக் காலம் நம்பொற்காலம். சங்கஇலக்கியங்களை மக்களிடையே பரப்பவேண்டும்”எனக் குறிப்பிட்டுச் சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு பேசுமாறும் எழுதுமாறும் மடல்கள் எழுதினார். அதன் பயனாக அறிஞர் மு.வ. முதலான பிற படைப்பாளிகள் சங்க இலக்கிய அடிப்படையில் புதினங்கள் எழுதிய நிகழ்வுகளும் விளக்க ஓவியங்கள் அமைத்த நேர்வுகளும் சொற்பொழிவுகளும் நிகழ்ந்தன. அன்றைக்குப் பேராசிரியர் இலக்குவனார்  அந்த முயற்சியை மேற்கொண்டிராவிட்டால் சங்க இலக்கியம் மறைந்து போயிருக்கும். அறிஞர்கள் சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதனார் ஆகியோர் மீட்டுக் கொடுத்த சங்க இலக்கியங்களைத் தமிழ்ப் பகைவர்கள் புதைகுழிக்குள் அனுப்பி இருப்பர். பழந்தமிழ் இலக்கியங்கள் யாவுமே மக்கள் நலனுக்கானவையே என்பதை மெய்ப்பித்து இலக்கியப்போராளியாக வாகை சூடினார் பேராசிரியர் இலக்குவனார்.

 சங்க இலக்கியம் வார ஏட்டின் மூலம் இலக்கியப்பணி ஆற்றுவதோடு    நின்றுவிடவில்லை பேராசிரியர் இலக்குவனார். ‘தமிழர்களின் தேசிய மொழி தமிழே’ என்பதை உரைத்து வந்த பேராசிரியர் ‘சங்க இலக்கியம்’இதழ் வாயிலாகவும் அதனை உணர்த்தினார். இந்தியம் என்றும் திராவிடம் என்றும் இல்லாத இயங்களைப் பிறர் இயம்பப் பேராசிரியரோ தமிழ்த் தேசியம் என்பதை வலியுறுத்தினார்.

 இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே

 “உரிமை ஞாயிறு தோன்றுகின்றது. உறங்காதே தமிழா!

 உன்றன் நாடும் உரிமை பெற்றிட உழைத்திடு தமிழா! ”

 என்று தமிழக விடுதலை உணர்வைப் பரப்பினார்.

 “தமிழரின் அரசை ஆக்குவோம்! – இனித்

 தமிழகம் சிதைவதைத் தாக்குவோம்!

 தமிழகம் உலகத்தின் தாயகம்! – இதைத்

 தரணியோர் மதித்திடச் செய்குவோம்!”

 என்று தமிழகமே உலகத்தின் தாயகம் என்பதை உலகோர்க்கு உணர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். அதனை நம்மில் பெரும்பான்மையர் உணரத் தவறியதால்தானே தாய்மண்ணில் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாகச் சாகடிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது.

 “தமிழா சிந்தனை செய்! வீரத்தமிழா வீறிட்டெழு! முன்னை நிலையை உன்னிப் பார்!

 நாடு – பரந்த தமிழகம் குறைந்ததேன்?

 மொழி – உலகாண்ட உன் மொழியை ஒடுக்குவதேன்?

 வீரம் – இமயம் கொண்ட ஏற்றம் எங்கே?

  ஆட்சி – பாவலனைப் போற்றிய காவலனெங்கே?

 வாணிகம் – கப்பலோட்டிய கண்ணியம் எங்கே?

 கொடை – பெருந்சோறளித்த பெருமைதான் எங்கே?

 தாமொழி உயரத் தாய்நாடு உயருமே!”

 என மொழி, இனம், நாடு, பண்பாடு, கொடை, வணிகம், ஆட்சி எனப் பலவகையிலும் தனித்து விளங்கிய தமிழர்களின் பெருமையை நினைவுறுத்தித் தமிழ்த்தேசிய உணர்வைத் தட்டி எழுப்புகிறார்.

 “அமுதம் ஊறும் அன்பு கொண்டு அரசு செய்த நாட்டிலே

 அடிமை என்று பிறர் நகைக்க முடிவணங்கி நிற்பதோ?

 இமயம் தொட்டு குமரி மட்டும் இசைபரந்த மக்கள் நாம்

 இனியும் அந்தப் பெருமை கொள்ள ஏற்றம் யாவும் செய்குவோம்!

 என இமயம் முதல் குமரிவரை வாழ்ந்த நாம் மீள்பெருமை பெற உழைக்க வேண்டுகின்றார்.

 “தமிழ் ஆய்ந்த தமிழர்களே தமிழ்நாட்டின் தலைவர்களா விளங்கும் காலம்

 இமிழ்கடல் சூழ் இவ்வுலகில் எவர்க்கும் நாம் பின்னடைந்து வாழ்தலில்லை!”

 எனத் தமிழர்களைத் தமிழர்களே ஆள வேண்டும் என்னும் தமிழ்த் தேசிய உணர்வை மலரச் செய்கிறார்.

 இந்தியவிடுதலைக்கு முன்னரே தமிழக விடுதலையை வலியுறுத்திய பேராசிரியர் இலக்குவனார் அதற்குப் பின்னரும்  மொழிவழித் தேசியக் கூட்டமைப்பையே வலியுறுத்தி வந்துள்ளார். தொடர்ந்து அவர் நடத்திய இதழ்களில் அதனை வலியுறுத்தி வந்ததற்குச் சான்றாக ஒன்றை மட்டும் பார்ப்போம். ‘திராவிடக் கூட்டரசு’இதழில் (31.10.52) ‘மொழி வழி நாடுகள் முன்னின்று அமைப்போம்’என்னும் தலைப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

 “மொழி வழியாக நாடுகள் அமைய வேண்டுமென்று கூறுகின்றோம். மாகாணங்கள் அல்ல. இன்று சிலர் மொழிவழியாக மாகாணங்கள் அமைந்து தில்லி ஆட்சியின் அடிமை யுறுப்பாய் இயங்க வேண்டுமென்று முயல்கின்றனர். ஆந்திரப் பிரிவினைக் கிளர்ச்சிக்காரர்கள்கூட ஆந்திர மாகாணம்தான் வேண்டுமென்றும் தில்லித் தலைமைக்குக் கட்டுப்பட்டுக் கிடப்போம் என்றும்தான் கூறி வருகின்றார்கள். அதை நாம் வெறுக்கின்றோம். தனி உரிமையுள்ள மொழி வழி நாடுகள் அமைய வேண்டுமென்றுதான் நாம் கூறுகின்றோம். எங்கேயோ உள்ள தில்லிக்கும் நமக்கும் தொடர்பு எதற்காக?… ஆகவே, மொழிவழி நாடுகள் அமைய முன்னின்று உழைப்போம். ஆனால் அந்நாடுகள் ஆரிய நாட்டாட்சியின் அடிமை மாகாணங்களாய் இருத்தல் கூடாது”

 இன்றைய தமிழ்த்தேசியவாதிகள் உரைப்பதை அன்றைக்கே தொலைநோக்குடன் பேராசிரியர் இலக்குவனார் உணர்த்தி உள்ளார்.

 இந்தவகையில் தமிழ்த்தேசிய முன்னோடிப் போராளியாகத் திகழ்கிறார் பேராசிரியர் எனலாம்.

 போராளிகளுக்கான  முதன்மை ஆயுதம் எழுத்து. எழுத்தினை ஒரே நேரத்தில் பலர் அறிய உதவும் கருவி இதழுலகம். தமிழுலகைச்  செதுக்கப் பேராசிரியர் எடுத்த கூராயுதமே இதழ்ப்பணியாகும். தமிழ் நலன் காக்கத் தொடர்ந்து இதழ் நடத்திய ஒரே பேராசிரியராகப் பேராசிரியர் இலக்குவனார் திகழ்கிறார்.

 இசைத்தமிழ் வளர்ச்சியில் பெரிதும் ஈடுபாடுடையவர் பேராசிரியர் இலக்குவனார்.

 தெலுங்குதமிழ் நாட்டினிலேன்? செத்தவட மொழிக்கிங்கே என்ன ஆக்கம்?

 இலங்கும் இசைப் பாட்டுகள் பிறமொழியில் ஏற்படுத்த இசைய லாமோ?        (பாவேந்தர் பாரதிதாசன்)

 என இசை என்றால் தமிழ்நாட்டில் தமிழிசைதான் என எழுதியும் பேசியும் வந்தார்.  இசைப்பாடல்கள் இயற்றிச் சிலவற்றைச் சங்க இலக்கிய இதழ்களில் வெளியிட்டும் பிறவற்றை இசைமணி சங்கரனார் பண்ணமைப்பில் மேடைகளில் பாடச்செய்தும் பேராசிரியர் இலக்குவனார் தாமும் முன்முறையாகத் திகழ்ந்து தமிழிசை எழுச்சிக்கு உதவினார்.

 (தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்