ஒரு மாதத்திற்கு முன் சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையில், ஓர் உவமையைப் படித்தேன். இந்தக் காலத்தில் கற்பனை நிலை எவ்வளவு தூரம் கயமைத்தனத்திற்குப் போயிருக்கிறது என்பதை ஊகித்தேன். வேறுபாட்டைப் பாருங்கள்!
இந்தக் காலத்துப் புலவர்கள் எந்தக் கருத்தை ஓர் அந்தாதி மூலமாகவோ, வெண்பா மூலமாகவோ விளக்குவார்களோ, அதைக் குறுந்தொகை ஆசிரியர் ஒரே அடியில் கூறி விட்டார். அந்த அடிதான் ‘கையில் ஊமன்’ என்பதாகும்.
ஒரு தோழன் காதலிலே ஈடுபடுகிறான். உவமையின் நேர்த்தியைப் பாருங்கள்! கட்டுங்கடங்காத காளை; இருந்தாலும் கட்டுப்படுகிறான் இரு கண்களுக்கு. மனத்தில் ஏதோ நினைக்கிறான், அதை எதிரேயுள்ள கட்டழகியிடம் சொல்ல முடியவில்லை; எதைப்போல் என்றால் – காலை நேரம் காட்டிலே ஒரு பாறையிலே வெண்ணெய் இருக்கிறது; கையில் ஊமையன் இதற்குக் காவல். காலைக் கதிரவன் காலையில் எழுந்து தனது இளங்கதிர்களைப் பாய்ச்சுகிறான்.
பார்த்ததும் ‘ஐயோ! வெண்ணெய் உருகுகிறதே’ என்று கூறலாம். ஆனால் வாயில்லை. நேரே ஓடிப்போய் எல்லாம் உருகுவதற்குள் எடுக்கலாம்; ஆனால் கையில்லை. கதிரவன் இந்தக் கையில் ஊமையனின் கதியற்ற நிலையை அறியான். அவன் அவனது வேலையைச் செய்கிறான். அவன் பிரபஞ்சத்திற்கும் சொந்தம்.
காவலாளிக்குக் கையில்லை; வாய் ஊமையே தவிரக் கண்
மாத்திரமிருக்கிறது. இந்தக் கோரக் காட்சியைக் காண.
அதைப்போலவே கண்மாத்திரம் இருக்கிறது. கட்டழகியைக் காண.
ஆனால் ‘சுயமரியாதை’ இல்லாததாலோ, சுதந்திர உணர்ச்சி
இல்லாததாலோ கையில்லை. (கையில் துணிவில்லை) அவளது கரத்தைப்பிடிக்க. அந்த வடிவழகியைக் கண்டு ஏதோ பேச வேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் சமுதாயக் கட்டுப்பாடுகள் அவனது வாயை மூடி விட்டன; எவ்வளவு அருமையாக ஒருவன் ஒருத்தியைச் சமுதாயக் கட்டுப்பாடுகளால் தொடமுடியாமல் கட்டப்படுகிறான் என்பதை ஒரு சிறு அடியில் விளக்குகிறார். “கையிலூமன் வெண்ணெய் உருகாது கண்ணால் பாதுகாத்தாற் போன்று” என்று.
சங்க இலக்கியங்களின் இன்பங்களைச் சொல்லிக் கொண் டிருந்தால், இன்று முழுவதுஞ் சொல்லிக் கொண்டிருக்கலாம். கற்பனைக் கொலை இன்று நாடக மேடைகளில் நடக்கிற வள்ளித் திருமணத்திற்கும். அதிலிருந்துதான் இது கற்பனையானதோ என்று எண்ணும்படியான ஓர் இயற்கை நிகழ்ச்சி சங்க இலக்கியத்தில் வருணிக்கப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள். பண்டைக் காலப் புலவர்களின் கள்ளங்கபடமற்ற உள்ளத்தையும், இடைக்காலத்திலே இரட்டைவாழ்க்கையினிடையே புராண மெத்தையில் புரண்ட புலவர்களின் உள்ளத்தையும், இந்தச் சிறு படப் பிடிப்புத் தெளிவாக்கும் என நம்புகிறேன்.
ஒரு தலைமகன் காட்டுக்கு வேட்டையாடச் செல்கிறான். தன் வேல் தைத்த யானை எப்பக்கம் ஓடிவிட்டது என்று தேடிக் கொண்டு வந்தவன் முன் ஓர் ஆரணங்கு எதிர்ப்படுகிறாள். நல்ல
அழகி; பக்கத்திலேயே பளிங்கு நீரோடை. கட்டழகன் அந்த
மங்கையை மணந்து கொள்ள இச்சைப் படுகிறான். மணந்து
கொள்வதென்றால் இந்தக் காலத்தைப் போலப் பொருத்தம் பார்க்க ஐயரைத் தேடுவது தேவையில்லாதிருந்த காலம் அது. காதலர் இருவரும் கண்களால் பேசினார்கள். வாய் அச்சுப் பதுமை போலிருந்த போதிலும் அருகே சென்றான். வஞ்சி அஞ்சினாள்.
“அஞ்சாதே அஞ்சுகமே” என்றான். ஆனால், சற்று நேரத்தில் ஓர்
அலறல் கேட்கிறது. அது என்னவென்று கேட்கிறாள், அந்த
ஏந்திழையாள். அது “என் வேல் வலிக்குத் தாங்க முடியாமல் பிளிறும் யானையின் குரல்” என்கிறான். பாவைக்கு யானை என்றால் பயம் போலிருக்கிறது; ‘ஐயோ யானையா! அச்சமாயிருக்கிற’ தென்றாள். ‘அச்சமானால் அருகே வா’, என்றான்; வந்தாள். அணைத்துக் கொண்டான். திருமணம் முற்றிற்று!!
இந்த ஒரு நிகழ்வைப் பிற்காலத்தில் வள்ளி கதையாக்கி, அந்த
என்று சொல்லி, வளையற்காரனாக்கி விட்டார்கள். வைதீகத்தைப் புகுத்தி, மூடநம்பிக்கையை வளர்க்கும் பகுத்தறிவிற் கொவ்வாத ஏடுகள் இருக்குமானால் அவை குற்றம் என்று கருதப்பட்ட காலம். இதனால் அந்தக்காலத்திற்குத் தகுந்தாற்போல், அப்போது கவிதைகள் எழுந்தன. இடைக் காலத்திற்குத் தகுந்தாற்போல், இன்றைய வள்ளிகதை போன்றவை இயற்றப்பட்டன. இப்படி காலத்திற் கேற்றவாறு தான் கவிதைகள் இயற்றியிருக்கிறார்கள் என்றால் காலம் என்னும் சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்ளாதவன் சிறந்த கவியாக மாட்டான். அவன் முறைமன்றங்களில் உள்ளவர்களைப்போல, ஒரு காலத்தில் நடந்த
நிகழ்ச்சிகளைத் தொகுத்து வைக்கும் பதிவர்(ரிகார்டு) பேர்வழி. அவன்! அழகாக நெல்மணிகளைச் சேகரித்துப் பண்ணையாருக்குக் கொடுக்கும் பண்ணையாள். அவன் சிறந்த கவியாகமாட்டான். படைப்பாளியாகமாட்டான். எக்காலத்திலும் உயிர்ப்புடன் இருக்கும் உயிர்க்கவியாகமாட்டான்.
காலமெனும் சிறை
இடைக்காலக் கவிகளும் அதற்குப் பின்னால் ஏற்பட்ட அநேக
கவிகளும் காலமெனும் சிறையிலே தங்களைத் தாங்களே ஒப்படைத்து விட்டார்கள். அவர்கள் அதினின்றும் வர முயன்றால், அதைச் சுற்றி உள்ள மதமெனும் மண்டபச் சுவரை ஏறிக் குதிக்க வேண்டும். ஆதலால்தான் அந்தக் கவிகளுக்கு ஆண்டவனின் அவதார லீலைகளைப் பற்றியும், கயிலைக்கும் திருப்பதிக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும், தேவாதி தேவர்களைப் பற்றியும் தேவாதி தேவன் கௌதமர் ஆசிரமத்திலே செய்த ஆபாசத்தைப் பற்றியும் எழுத எண்ணம் பிறந்ததே ஒழியக் காடுகளைப் பற்றியோ, மாடுகளைப் பற்றியோ, மலைகளைப் பற்றியோ, கவிதை செய்யவில்லை. செய்யவில்லையா? அடாது! காலைக் கதிரவனைப் பற்றியும் மாலை மதியத்தைப் பற்றியும் பாட்டுக்களில்லையா? இதோ பார் என்று சொல்லலாம்; இருக்கின்றன. ஆனால் வைதிகமெனும் குறுக்குச் சங்கிலியுடனே பிணைக்கப்பட்டிருக்கின்றன. கவிதா ரசத்துடனேயே அவை கல்லூரி மாணவர்களின் நெஞ்சில் நஞ்சைப் பாய்ச்சுகின்றன.
Leave a Reply