புறநானூற்றுச் சிறுகதைகள்

 நா. பார்த்தசாரதி

1. ஒரு சொல்

  உறையூரில் சோழன் நலங்கிள்ளியின் அரண்மனை. ஒருநாள் மாலைப் பொழுது நலங்கிள்ளியின் தம்பியாகிய மாவளத்தானும் தாமப்பல் கண்ணனார் என்ற புலவரும் பொழுது போகச் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

தாமப்பல் கண்ணனாருக்குச் சொக்கட்டான் விளையாட்டில் அதிகமான பழக்கமோ திறமையோ கிடையாது. ஆனால், அவரோடு விளையாடிக் கொண்டிருந்த மாவளத்தானுக்கோ அடிக்கடி அந்த விளையாட்டை விளையாடி விளையாடி நல்ல பழக்கமும் திறமையும் ஏற்பட்டிருந்தன. சாதாரணமாக இம்மாதிரித் திறமையால் ஏற்றத் தாழ்வு உடையவர்கள் எதிர் எதிரே உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் தொடக்கத்திலேயே தகராறுகள் பெருகி முறிந்து போய்விடுவது வழக்கம்!

  ஆனால் இங்கே மாவளத்தானுக்கும், தாமப்பல் கண்ணனாருக்கும் இடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் பண்பும், நட்பும், அன்பும் இருந்ததனால் விளையாட்டை முதன்மையாகக் கருதி அதிலேயே அழுந்தி வெறி கொண்டு விடாமல், ஏதோ பொழுது போக்காக ஆடிக் கொண்டிருந்தார்கள். வேறொருவர் இந்த விளையாட்டுக்கு அழைத்திருப்பாரானால் கற்றறிந்த பேரறிஞராகிய தாமப்பல் கண்ணனார் இதை ஒரு பொருட்டாக மதித்து விளையாட உட்காருவதற்கே உடன்பட்டிருக்க மாட்டார். சோழன் தம்பியும், தன் அன்புக்குரியவனுமாகிய மாவளத்தானே விளையாடுவதற்கு அழைத்ததனால், ‘மறுத்தால் அவன் மனம் புண்படுமே’ – என்பதற்காகத்தான் அவர் விளையாடுவதற்கு முற்பட்டிருந்தார்.

  சொக்கட்டான் விளையாட்டு நடந்துகொண்டிருந்தது. நேரம் ஆக ஆகப் பொழுது போக்குக்காக விளையாட்டு என்ற நிலை மாறி, விளையாட்டுக்காகப் பொழுது போக்கு என்ற அளவிற்கு இருவருக்குமே ஆட்டத்தில் அக்கறையோடு சுறுசுறுப்பும் ஏற்பட்டுவிட்டது. இரு சாராருடைய சொக்கட்டான் காய்களும் வேகமாக இடம் மாறலாயின. ஆட்டம் சுவையம்சத்தின் எல்லையிலே போய் நின்றது. இரண்டு பேரும் சுற்றுப்புறத்தை மறந்து, நேரத்தை மறந்து, – அவ்வளவேன்? – தங்களையே மறந்து விளையாட்டில் இலயித்துப் போய் இருந்தார்கள்.

 தொடக்கத்தில் இருந்த ஈடுபாடின்மை(அசுவாரசியம்) நீங்கி, ‘என் வெற்றி, என் தோல்வி’- என்று இருவரும் தத்தம் வெற்றி தோல்விகளை உணர்ந்து கவனத்தோடு விளையாடத் தொடங்கியிருந்தார்கள். இப்போது, புலவருக்காக மாவளத்தானோ, மாவளத்தானுக்காகப் புலவரோ விட்டுக்கொடுக்க விரும்பாத அளவு இருவரும் தமக்காகவென்றே விளையாடினார்கள்.

 எவ்வளவுதான் உணர்ந்து விளையாடினாலும் தாமப்பல் கண்ணனார் அந்த விளையாட்டிற்குப் புதியவர்தாமே? ஆகையால், மாவளத்தானுடைய கையே ஓங்கியிருந்தது. ஆட்டந் தவறாமல் புலவருடைய காய்களை ஒவ்வொன்றாக வெட்டி வென்று வந்தான் மாவளத்தான். புலவர் தாமப்பல் கண்ணனார் எவ்வளவோ முயன்று பார்த்தும் ஒர் ஆட்டத்தில்கூட அவரால் மாவளத்தானை வெல்ல முடியவில்லை. சொல்லி வைத்தாற்போல் ஆட்டத்திற்கு ஆட்டம் அவருடைய தோல்வியும், மாவளத்தானுடைய வெற்றியுமே முடிவான நிகழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து வெற்றி மாவளத்தானை மேலும் மேலும் வெற்றி கொள்ளச் செய்திருந்தது. தாமப்பல் கண்ணனார் தோல்வி ஏக்கத்தில் வீழ்ந்து தவித்துக் கொண்டிருந்தார்.

  சந்தர்ப்பம் மனிதர்களைக் கெட்டவர்களாக்கி விடுகிறது என்பது பொய்யன்று. எப்படியாவது ஒரு தடவையேனும் மாவளத்தானை வென்றுவிடவேண்டும் என்ற ஆசையால் புலவர் நேர்மையற்ற முடிவு ஒன்றைத் தமக்குள் செய்துகொண்டார். அந்த முடிவின் விளைவு என்ன ஆகும் என்பதை அப்போது அவர் உணர்ந்து கொள்ளவில்லை. சூதாட்டத்தில் தாம் வெற்றிபெற மறைமுகமான குறுக்கு வழி ஒன்று அவருக்குத் தெரிந்துவிட்டது. ஆம்! மாவளத்தானுக்கு வெற்றியைத் தரும் காய்களில் ஒன்றைத் தன் மேலாடையில் அவனறியாமல் எடுத்து மறைத்துக் கொண்டு விட்டார். திடீரென்று அவர் இப்படித்திருட்டுத்தனம் செய்ததைச் சிறிது நேரத்தில் மாவளத்தான் கண்டுவிட்டான்.

  அந்த ஒரு கணத்தில் அவனுக்கு ஏற்பட்ட அளவிட முடியாத ஆத்திரத்தினால் தன் எதிரே உட்கார்ந்து விளையாடுபவர் தன்னுடைய மதிப்பிற்குரிய புலவர் என்பதையே மறந்துவிட்டான். கோப மிகுதியினால் என்ன செய்கிறோமென்று புரியாமல் தன் கையிலிருந்த மற்றோர் காயால் புலவர் மண்டையைக் குறிவைத்து எறிந்துவிட்டான் அவன். சூதுக்காய் புலவர் மண்டையில், நெற்றியின் மேல் விளிம்பில் ஆழமாகத் தாக்கி இரத்தம் கசிந்துவிட்டது.

  அவன் இப்படிச் செய்வான் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. தாம் செய்தது குற்றமாயினும், அவன் செய்த வன்செயல் அவருக்கு ஆத்திரத்தை உண்டாக்கிவிட்டது. குருதி கசியும் நெற்றியை வலதுகையால் அமுக்கிக்கொண்டே, “நீ சோழனுக்குப் பிறந்த மகன்தானா?” என்று அவனை நோக்கி இடி முழக்கம் போன்ற குரலில் கேட்டார். அவருடைய இந்த ஒரு சொல்லின் பொருள், சோழன் தம்பி அவர்மேல் எறிந்த சொக்கட்டான் காயைவிட வன்மையாக அவனை வருத்தக்கூடியது.

  அரச மரபிலே பிறந்த வேறொருவனைப் பார்த்துப் புலவர் இதே கேள்வியைக் கேட்டிருந்தாரேயானால் அவர் தலை அந்தக் கணமே தரையில் உருண்டிருக்கும்! ஆனால் மாவளத்தான் அவருடைய அநாகரிகமான, பண்பில்லாத இந்த வினாவைக் கேட்டும் சீறி எழாமல், நாணித் தலைகுனிந்து வீற்றிருந்தான். காரணம்…? ஆத்திரத்தால் தான் செய்துவிட்ட செயல் புலவரின் கேள்வியைவிட அநாகரிகமானது என்பதை, அவர் மேல் சொக்கட்டான் காயை விட்டெறிந்த மறுகணமே அவன் தானாகவே உணர்ந்து கொண்டான். அவன் நாணி வீற்றிருந்ததும் தன் பிழைக்காகவே ஆகும். “அடே! நீ குலத்தில் பிறந்தவன் தானே?” என்று அவ்வளவு கடிய முறையில் கேட்டும்கூட மாவளத்தான் பதில் பேசாமல் நாணித் தலைகுனிந்து வீற்றிருந்தது புலவர் தாமப்பல் கண்ணனாருக்கு வியப்பை அளித்தது! அவர் அவனையே உற்று நோக்கினார்.

 அப்படிப் பார்த்த, அப்போதுதான் அவரும் ஆற அமரச் சிந்தித்தார். “இவ்வளவும் நடப்பதற்குக் காரணமாக இருந்த முதற் குற்றம் நான் அவனுடைய சொக்கட்டான் காயைத் திருடியதுதானே? ஆத்திரத்தில் அவன்தான் எறிந்துவிட்டான் என்றால் அதற்காக நான் இவ்வளவு நாகரிகமற்ற ஒரு வார்த்தையை வீசியிருக்க வேண்டாம். நானே குற்றத்தைச் செய்து விட்டு அவனைப் போய்த் தூற்றுவது எவ்வளவு அறியாமை? என்னுடைய அறியாமையால் அவன் தலைகுனிய நேர்ந்து விட்டதே!” இவ்வாறு சிந்தித்துத் தம்மை உணர்ந்த தாமப்பல் கண்ணனார் மாவளத்தானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்பினார். இந்த எண்ணம் தோன்றியதும் அவர் தலை குனிந்திருந்த அவனருகில் சென்று அவன் கைகளைப்பற்றிக் கொண்டு உருக்கமான குரலில் கூறினார்.

“வளவா! என்னை மன்னித்துவிடு. உன்னை நோக்கி ஆத்திரத்தில் விடுத்த பண்பற்ற அந்தச் சொல்லை நீ மனத்திற் கொள்ளக்கூடாது. குற்றத்தை முதலில் செய்தவன் நானாக இருக்கவும் நீயே குற்றம் செய்தவன் போல நாணமடைகிறாய். இது அல்லவா உயர் குடியிற் பிறந்தார் பண்பு! உன்னுடைய இந்த உயரிய பண்பு காவிரி மணலைக் காட்டிலும் பன்னாள் வாழ்க!”

 அவர் கூறி முடித்த அதே சமயத்தில் மாவளத்தானும் அவரிடம் குழைவான குரலில் தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்டான்.

“புலவர் பெருமானே! இந்தப் பாவி காட்டுமிராண்டியையும்விடக் கேவலமாக உங்களிடம் நடந்து கொண்டுவிட்டேன். உங்கள் நெற்றியில் வழியும் குருதி இந்தப் பாவியின் ஆத்திரத்தால்தானே நேர்ந்தது:”

 “நான் ஆசையால் தவறு செய்தேன். நீ ஆத்திரத்தால் தவறு செய்தாய். ஆனால் இருவருமே தவறுகளை உணர்ந்து கொண்டோம்” என்றார் புலவர். தவறுகளை மறைப்பதா பண்பாடு? உணர்வதுதானே?

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுபுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை யுரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி வார்கோல்
கொடுமர மறவர் பெரும கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்
ஆர்புனை தெரியல்நின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது
நீர்த்தோ நினக்கென வெறுப்புக் கூறி
நின்யான் பிழைத்தது நோவா யென்னினும்
நீபிழைத் தாய்போல் நனி நாணினையே
தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக்

காண்தகு மொய்ம்ப காட்டினை ஆகலின்
யானே பிழைத்தனென் சிறக்கநின் ஆயுள்
மிக்குவரும் இன்னீர்க் காவிரி

எக்கர் இட்ட மணலினும் பலவே.

(புறநானூறு – 43)

[அலமரம் = துன்பம், கனலி= சூரியன், கால் = காற்று, கொட்கும் =திரியும், ஏறு=எறிதல், தபுதி=அழிவு நேரார் =பகைவர், கொடுமரம் =வில், ஆர் = ஆத்தி, நீர்த்தோ = தன்மையையுடையதோ, பிழைத்தது = குற்றம் செய்தது, செம்மல் = தலைமை, எக்கர் இட்ட = கொழித்து இடப்பட்ட]

தீபம் நா. பார்த்தசாரதி