(சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி)

ககூ. நம்மிற்சிறந்தோர்

இம்மை யுலகத்து இல்

(பிரிவின்கண் வேறுபட்ட தலைவியும் தோழியும்)

– சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

door01

தலைவி: தோழி! அவர் அன்று கூறிய உரைகள் நினைவில் இருக்கின்றனவா?

தோழி: ஆம் அம்ம! ஒரு தடவையல்ல; பல தடவை கூறியதாகக் கூறினீர்களே! அவ்வுரைகள்தாமே!

தலைவி: ஆம், “நம்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல்” என்பதுதான்.

தோழி: “நம்மைவிட அன்பில் சிறந்தவர்கள் இந்த உலகத்தில் இல்லை” என்று அவர் கூறியது உண்மைதான். அவர் உங்களிடத்திலும் நீங்கள் அவரிடத்திலும்  கொண்ட அன்பு மிகவும் சிறந்தது அல்லவா? உங்களைப் போன்ற ஒத்த அன்புடையவர்களை இவ்வுலகத்தில் காணமுடியாதுதான்.

தலைவி: அவர் அன்புகனியக் கூறியதும், அன்பால் நெகிழ்ந்த உளத்தோடு, நம் நெற்றியில் பரந்தமயிரைத் தடவிக் கூட்டியதும் மறக்க முடியுமா?

தோழி: அதுமட்டுமல்ல. அவர் இங்கு வருங்கால் பரிசிலர் போலக் கூசிக்கூசி வருதலும், வந்து கடைப்புறத்தே ஒதுங்கிநின்று. காவலர் உறங்கிய நடு இரவில் கதவைத் திறந்துகொண்டு வந்து நுழைவதும் என் கண்களை விட்டு அகலவில்லையே.

தலைவி: அப்படி வந்து கூடியவர்தாம் இன்று இங்கு இன்னும் வரவில்லை.

thalaivi-thozhi+1

தோழி: “விரைவில் வந்துவிடுவேன்: வருந்தாதே” என்று அருள்மொழி கூறிவிட்டுச் சென்றவர் காலம் தாழ்க்கமாட்டார். வருந்தற்க. அவரை விரைவில் வீட்டுக்குத் திருப்பும் சில நிகழ்ச்சிகளும் அங்கு உண்டு:

தலைவி: என்ன நிகழ்சசிகள்?

தோழி: புல்லி என்பவன் ஆளுகின்ற வேங்கட மலையைத் தாண்டித்தான் செல்வார். அங்கு இடையர்கள் (முல்லைநில மக்கள்) வருந்திவரும் புதிய மக்கட்கு விருந்தளிப்பர்.

தலைவி: காட்டில் விருந்தா?

தோழி: ஆம், மூங்கிற் குழாய்களில் புளிச்சோறு அடைத்து, காளைகளின் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டிருப்பர். அச்சோற்றை எடுத்துப் பசியால் வருந்தியோர்க்கெல்லாம் தேக்கு இலையில் வைத்துக்கொடுப்பர். பசியால் உண்டான காது அடைப்பு நீங்கிக் களைப்புத் தீரும் வரையில் கொடுப்பர்.

தலைவி: ஓ, ஓ இக்காட்சியைக் கண்டவுடன் இல்லறத்தின் நினைவு வந்துவிடும் என்று கூறுகின்றாயா?

தோழி: ஆம், இல்லற வாழ்க்கையின் சிறந்த குறிக்கோள்களுள் ஒன்று வருந்தி வந்தோர் அரும்பசி களைதல் அல்லவா? இக்காட்சியைக் கண்டதும், நாமும் அவ்விதம் வருந்தி வந்தோர் அரும்பசி களைதல் வேண்டாமா என்று நினைத்து ஓடோடியும் வருவர். வருந்தாதே.

****

ககூ. பாடல்

அகநானூறு 311  பாலை

 

இரும்பிடிப் பரிசிலர் போலக் கடைநின்று

அருங் கடிக்காப்பின் அகல் நகர் ஒரு சிறை

எழுதியன்ன திண்நிலைக் கதவம்

கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து எனத்

திறந்து நம்புணர்ந்து நம்மின் சிறந்தோர்

இம்மை உலகத்து இல் எனப் பல்நாள்

பொம்மல் ஓதி நீவிய காதலொடு

பயம் தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப

வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்

 

மழவிடைப் பூட்டிய குழா அய்த்தீம்புளி

செவிஅடைதீரத் தேக்கு இலை பகுக்கும்

புல்லி நல்நாட்டு உம்பர்ச் செல்லரும்

கரம் இறந்து ஏகினும் நீடலர்

அருள்மொழித் தேற்றி நம் அகன்றிசினோரே.

கருத்துமுடிபு:-

“பொம்மல் ஓதி நீவியகாதலொடு” என்ற அடிக்குப் பின்னர் “அருள்மொழித் தோற்றி நம் அகன்றிசினோர்” என்ற கடைசி அடியைச் சேர்த்துப் படித்தால் ஆற்றொழுக்காகப் பொருள் செல்லும்.

சொற்பொருள்

க. (அடிகள் க-எ)

  இரும்பிடி- பெரிய (கரிய) பெண்யானைகளைப் பரிசிலாகப் பெறும், பரிசிலர் போல – புலவர் பாணர், பொருநர் முதலிய பரிசிலர்கள் போல, கடைநின்று – நமது வீட்டின் கடைவாசலில் நாணிக் கூசிநின்று, அரும் கடிக்காப்பின் – பிறர் எளிதில் வராதபடித்தடுக்கும் அரியகாவலையுடைய, அகல் நகர் – பெரிய வீட்டின், ஒருசிறை – ஒரு பக்கத்தில் உள்ள, எழுதி அன்ன-ஓவியத்தில் எழுதினால் போன்ற பலவகையிலும் சிறந்து விளங்குகின்ற, திண் நிலைக்கதவம் – வலிய நிலையினை உடைய கதவினை,  கழுது வழங்கு – பேய் வழங்கும் (என்று சொல்லப்படும்), அரைநாள் – நள்ளிரவில், காவலர் மடிந்து என – காவலர்கள் சோர்ந்திருக்க, அச்சமயத்தில், திறந்து – மெதுவாகத்திறந்து உள்ளே வந்து, நம் புணர்ந்து – நம்முடன் கூடி, நம்மின் சிறந்தோர் – நம்மைவிட அன்பில் சிறந்தவர்கள், இம்மை உலகத்து – இவ் உலகத்தில், இல் என – இல்லை என்று, பல் நாள் – ஒரு நாள் அல்ல பலநாள், பொம்மல் ஓதி – நெற்றியில் பரந்துள்ள கூந்தலை, நீவிய – தடவிய, காதலொடு – அன்போடு.

உ. ( அடி கச)

  அருள்மொழி:- “உன்னைவிட்டு நீங்கேன்; நீங்கினால் நான் உயிர்வாழேன்” என்ற அருள் நிறைந்த சொற்களைக்கூறி, தேற்றி – நம்மைத் தெளிவித்து, நம் அகன்றிசினோர் – நம்மை விட்டுப்பிரிந்தோர்.

ங (அடிகள் அ- கங)

  பயம் தலை பெயர்ந்து – பயன் அற்றுப் போக, மாதிரம் – திசைகள் எல்லாம், வெப்ப – வெப்பத்தால் வாட, (அவ்வமயத்தில்) வரும்வழி – வழியில் வருகின்ற, வம்பலர் – புதியவர்களை, , பேணி-விரும்பி ஏற்று, கோவலர் – இடையர்கள், மழவிடை – இளமை மிக்க காளைகளின் கழுத்துகளில், பூட்டிய – கட்டப்பட்டுள்ள, குழா அய் – மூங்கில் குழாய்களில் உள்ள, தீம்புளி – இனியபுளிச் சோற்றை, செவி அடை – வந்தவர்களின் களைப்பால் உண்டான காதுஅடைப்பு, தீர – நீங்க, தேக்கு இலைகளில், பகுக்கும் – பங்கிட்டுக் கொடுக்கும், புல்லி – புல்லி என்னும் சிற்றரசன், ஆளும், நல் நாட்டு உம்பர் – நல்ல நாடாகிய வேங்கடநாட்டிற்கு (திருப்பதிக்கு) அப்பால், செல்லரும் – செல்வதற்கு அருமையான, சுரம் இறந்து – பாலை நிலவழியைக்கடந்து, ஏகிலும் – சென்றாலும் நீடலர் – நீட்டித்துத் தங்கார்.

ஆராய்ச்சிக்குறிப்பு:-

  எழுதியன்ன திண்நிலைக்கதவம்: பண்டைத் தமிழர்கள் கலையுணர்ச்சி மிக்கராய் சிறந்த நாகரிகத்தோடு வாழ்ந்தார்கள். அவர்கள் கலைத்திறனை உடுத்திய உடையினும், கட்டியவீட்டினும் கவினுறக் காணலாம். கதவினும் கதவு நிலையிலும் கண்கவர் ஓவியங்கள் தீட்டி சிற்ப வேலைப்பாடுகளும் சிறப்புற அமைந்தனர் சேய்மையினுள்ளோர்க்குச் சிறந்த ஓவியம்போல் காணப்படும் வாயிலும் அதன் கதவும், ஆகவே, ‘எழுதியன்ன கதவு’ என்கின்றார்.

அரை நாள்: நள்ளிரவு அரை நாள் என்று குறிப்பிடப்படுகின்றது. தமிழர்கள் நண்பகல் தொடங்கி மறுநாள்navalar-somasundara-bharahiyar01 நண்பகல் வரையில் ஒரு நாள் என்று கணக்கிட்டதாக நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ‘நள்ளிரவை’ அரைநாள் என்பது அதை வலியுறுத்துகின்றது. நள்ளிரவிலிருந்து மறுநாள் இரவு வரையில் ஒருநாள் என்று ஆங்கிலேயர் கணக்கிடும் முறையும், ஞாயிற்றுத் தோற்றம் தொடங்கி மறுநாள் ஞாயிற்றுத் தோற்றம் வரையில் கணக்கிடும் இன்றைய முறையும், பண்டைத் தமிழர் முறையுடன் ஒப்பிடுமிடத்து, குறைபாடுடையன என்று தெள்ளிதில் விளங்கும்.

தீம்புளி: ‘புளிச் சோறு’ இன்றும் தமிழர்கட்குப் புதியது அன்று. புளிச்சுவையுடைய சோற்றை, ‘புளி’ என்பது ஆகு பெயர். சிவப்பு நிறமுள்ள மாட்டைச் சிவப்பு என்பது போல. கோவலர்கள் அச்சோற்றை மூங்கில் குழாயில் அடைத்து காளையின் கழுத்தில் கட்டிக்கொண்டு செல்லும் முறையும், அதை வருவோர்க்குப் பங்கிட்டு  வழங்கும் முறையும் அறிந்து இன்புறத்தக்கது. கட்டுச் சோற்றையும் பிட்டு வழங்கும் தமிழரின் விருந்தோம்பல் இன்றும் சிற்றூர்களில் காணலாம், இவ் அளவுகடந்த விருந்தோம்பல் பண்புதான், வேற்று நாட்டாரை நம்நாட்டில் நிலைபெறச் செய்து தமிழரை அடிமைகள் ஆக்குவதற்கு உதவியது என்பர் ஆராய்ச்சியாளர்.

 paalai01
(தொடரும்)