(வைகாசி 11, 2045 / 25 மே 2014 இதழின் தொடர்ச்சி)

20. சென்றோர் அன்பிலர் – தலைவி

 தலைமகன் பிரிந்த பின்னர், தலைவியை நோக்கிக் கூறுகின்றாள்.

– சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 thidhiyan01

தோழி! அவர் அன்பு அற்றவர் என்றுதான் நினைக்கிறேன். உயர்ந்து வளர்ந்துள்ள அடிமரங்களுடைய சிவந்த தளிர் பொருந்திய இருப்பை மரங்களிலிருந்து, தந்தத்தைக் கடைந்து செய்தால்போன்ற பூக்கள் உதிர்ந்துகிடக்கும் அவர் செல்லும் வழிகளில், அங்குக் கரடிக்கூட்டம் – குட்டிகளை ஈன்ற பெண் கரடிகள் –   ஆட்டு மந்தையைப் போல் திரண்டுவந்து அப்பூக்களைத் தின்னும். அவை தின்ற போக மிஞ்சியவற்றை, அப்பக்கங்களில் உள்ள வேடர் மகளிர் பொறுக்கி, மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்துக் கொண்டு ஊர்கள்தோறும் விற்பர். இவ்வாறான ஊர்களைத்தான் அவர் கடந்து செல்வர்.இன்னும்  வெப்பம் மிக்கப் பாலைநில வழியோ மிகக் கொடியது. திதியன் எப்பேர்ப்பட்டவன் தெரியுமா? அவன் நாள்தோறும் நாள் ஓலக்கத்தில் வீற்றிருந்து கள்ளுண்டு களித்து இசைத்துறையில் தேர்ந்த பாணர்க்கெல்லாம் பல அணிகலங்களை அவர்கள் மகிழ்ந்து ஆரவாரிக்குமாறு அளித்து மகிழ்வான்.

இக்கதை எல்லாம் எதற்கு? அவர் நம்மை விட்டுச் சென்றுள்ளார்; அன்பு அற்றவர் என்று கூறுவதைத்தவிர நாம் வேறு என் செய்ய முடியும்? இவ்விதம் நாம் வருந்த  நம்மை விட்டுப் பிரிந்தவர் அன்பிலரே.

அகநானூறு  331. பாலை

[தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.]

 நீடுநிலை அரைய செங்குழை இருப்பைக்

கோடுகடைந் தன்ன கொள்ளை வான்பூ

ஆடுபரந் தன்ன ஈனல் எண்கின்

சேடுசினை யுரீஇ உண்ட மிச்சில்

5.            பைங்குழைத் தழையர் பழையர் மகளிர்

கண்டிரள் நீளமைக் கடிப்பிற் றொகுத்துக்

குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகுமஞ்

சீறூர் நாடு பலபிறக் கொழியச்

சென்றோர் அன்பிலர் தோழி என்றும்

10.          அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப்

பாணர் ஆர்ப்பப் பலகலம் உதவி

                நாளவையிருந்த நனைமகிழ் திதியன்

வேளிரொடு 1பொரீஇய கழித்த

வாள்வாய் அன்ன வறுஞ்சுரம் இறந்தே.

உரைநடைப்படுத்தல்: ‘தோழி’ (அடி 9) என்று தொடங்கி, ‘நீடுநிலை’ என்று எடுத்து ‘நாடுபல பிறக்கு ஒழிய’ (அடி8)என்று முடிக்க; ‘என்றும்’ (அடி 9)என்று தொடங்கி, ‘வறுஞ்சுரம் இறந்தே’ (அடி 14) என்று கொண்டு  ‘சென்றோர் அன்பிலர்’ (அடி 9) என்று முடித்தல் வேண்டும்.

சொற்பொருள்:

தோழி! (அடி 9)

அடிகள் (1-8)

நீடு நிலை -நீண்டு நிலைத்து நிற்கும், அரைய – அடிமரத்தினையுடைய, இருப்பை – இருப்பை மரங்களின், கோடுiruppai_maram01 – தந்தங்களை, கடைந்தன்ன-கடைந்ததை ஒத்த, கொள்ளை – மிகுதியான, வான் பூ – உயர்ந்த கிளைகளில் உள்ள பூக்களில், ஆடு பரந்த அன்ன – ஆடுகள் நிறைந்தால் ஒத்த, ஈனல்- குட்டிகளை ஈன்ற, எண்கின் –  பெண் கரடிகளின், சேடு -கூட்டம், சினை-கிளைகளின்றும், உரிஇ-உருவி விழுந்தனவற்றை,  உண்டமிச்சில்- உண்டதுபோக  ஒழிந்த மீதியை, பைம்குழைத்தழையர்-பசிய இளம்தளிர்களும்  இலைகளுமாய உடையை விளையாட்டுப் போக்கில் உடுத்துள்ளவரான, பழையர் மகளிர்- வேடர் மகளிர், கண்திரள் – கணுக்கள் திரண்டுள்ள, நீள் அமைக்கடிப்பில்- நீண்ட மூங்கில் கோலாகிய குழாயில், தொகுத்து . திரட்டி, குன்று அகம்- குன்றின்கண் உள்ள, சிறுகுடி- சீறூர், மறுகுதொறும்-தெருக்கள் தோறும்,மறுகும்-சுழன்று சுழன்று விற்குத்திரியும், அம் – அழகிய, சீறூர்-சிறிய ஊர்களையுடைய, நாடு பல – பல நாடுகள், பிறக்கு ஒழிய- தனக்குப் பின்னே நீங்க நடந்துபோய்

(அடிகள் 9-14)

என்றும் – எப்பொழுதும், அரும் துறை – அரிய இசையில் பலதுறை இலக்கண நெறிகளில், முற்றிய- நன்கு  கற்றுத் தேர்ந்து கலையறிவில் முதிர்ந்துள்ள,கரும் கோட்டு- கரிய நிறமான தண்டினையுடைய, சீறியாழ்ப்பாணர்- சிறிய யாழை மீட்டும் சிறு பாணர் என்பார், ஆர்ப்ப – மகிழ்ச்சியால் ஆரவாரிக்க, பலகலம் – பல அணிகலங்களை( கைகளை) உதவிக் – கொடுத்து, நாள் அவை- அன்று செய்ய வேண்டிய அலுவல்களைப் புரிவதற்கு வீற்றிருக்கும் மன்றத்தில் இருந்த – வீற்றிருந்த, நனை-தேனை (உண்டு) மகிழ் – மகிழ்ச்சிமிக்க. திதியன் – திதியன் என்பான், வேளிரொடு – குறுநிலமன்னர்களோடு. பொரீ இய-போர் செய்ய, கழித்த -உறையினின்றும் நீக்கிய, வாள் வாய்-வாளின் வாயை, அன்ன – ஒத்த, வறும் சுரம் – ஆள் இல்லாதபாலை நிலவழியை, இறந்தே – கடந்து.

(அடி கூ)

சென்றோர் – போனவர், அன்பில:- அன்பில்லாதவர் ஆவார்.

ஆராய்ச்சிக்குறிப்பு:

உவமைநயம்: இருப்பைப்பூ தந்தத்தைக் கடைந்து செய்ததுபோல் காணப்படுகின்றது என்பதும்: கரடிக் கூட்டத்திற்கு ஆட்டு மந்தையை ஒப்பிடுவதும். ஆள் வழக்கற்ற வெப்பமிகுந்த பாலைவனத்தை, வாளின் வாய்க்கு ஒப்பிடுவதும் அறிந்து மகிழத் தக்க நயங்களாம்.

திதியன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்து வாழ்ந்த சிற்றரசர்களுள் ஒருவன். இவனும், இவன் அனைய ஆறு சிற்றரசர்களும் நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டமை, மதுரைக் காஞ்சியினும் அகநானூற்றுப் பாடல்களிலும் கூறப்படுகின்றது. சிற்றரசன் ஆயினும் தனது அவைக்கு வரும் பாணர்க்குப் பரிசில்கள் வழங்கும் இயல்பினன் என்று இப்பாடல் அறிவிக்கின்றது. இவனும் பிற சிற்றரசர்களோடு பொருதசெய்தியும் கூறப்படுகின்றது.

(கள் மகிழ்திதியன் என்று சிறப்பிக்கப் படுவதால், கள்ளுண்டு களித்தல் அக்காலத்தில் குற்றமாகக் கருதப்படவில்லை என்று அறிய வேண்டியுள்ளது.)

யாழ்ப்பாணர்: இசைத்துறையில் சிறந்து விளங்கியவர்களைப் பாணர் என்று அழைத்தனர். இவர்கள், இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பலதிறப்படுவர். யாழ்ப்பாணர், சிறுபாணர் பெரும்பாணர் என இருவகைப்படுவர். யாழ், ‘சீறியாழ்’, ‘பேரியாழ்’ என இருவகைப்படும். சீறியாழ் (சிறுயாழ்) உடையவர் சிறுபாணர் என்றும் பேரியாழ் (பெரும்யாழ்) உடையவர் பெரும் பாணர் என்றும் அழைக்கப்பட்டமை சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்ற நூல்களால் அறியலாம்.

iruppai_puu01

திதியன் படம் :நன்றி-சிறகு