(வைகாசி 25, 2045 / 08 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)

seran_flag_imayam01

உஉ. “செய்வினை அவர்க்கே வாய்க்க”

(தலைவனைப் பிரிந்த தலைவியும் தோழியும்)

– சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

தோழி: அம்ம! உன்னுடைய அழகு முழுவதும் இன்று எங்கு மறைந்தது? உன்மேனி பசலை (தேமல்) படர்கின்றதே. எல்லாம் அவர் பிரிவினால் அல்லவா?

தலைவி: ஆம் தோழி. என் செய்வது? தெருவில் உள்ளோரும், ஊரில் உள்ளோரும் பேசும் பேச்செல்லாம் நம்மைப்பற்றிதான். அவர்கள் உரையாடல்கள் சேரலாதன் முரசுபோல் முழங்குகின்றன.

தோழி: கடல்நடுவே வாழ்ந்த கடம்பர்களை வென்று அவர்கள் காவல்மரமாகிய கடம்ப மரத்தால் செய்யப்பட்ட முரசைப்போல என்று கூறு.

தலைவி: ஆம். ஆம். சேரிப் பெண்டிரும் ஊர்ப் பெண்டிரும் கொடிய பழி மொழிகளைக் கூறிக் கொண்டிருந்தாலும் குற்றமில்லை. அவர் மேற்கொண்ட செயலில் வெற்றி பெறட்டும். செய்வினை வாய்த்துத் திரும்பிவரட்டும்.

தோழி: அவர் போயிருக்கிற இடத்தின்  தன்மை எப்படியோ?

தலைவி: எப்படி? மழை பெய்யாது, மூங்கில்கள் எல்லாம் கருகிக் காய்ந்துகிடக்கும். புலிகளும் யானைகளும் மிகுதியும் உண்டு.

தோழி: ஓ. ஒரு காட்சி கூட நினைவுக்கு வருகின்றது. அவர் கூறியதுதான். புலி யானை மீது பாய்ந்ததாம்.

யானை பெருமுழக்கமிட்டதாம். அருகில் நின்ற பிடி அஞ்சி ஓடியதாம். அச்சத்தால் வெருண்டு கன்றையும் மறந்து ஓடியதாம். பின்னர்க் கன்றை நினைத்துக் கொண்டு கையைத் தலையில் வைத்துக் கொண்டு கலங்கி நின்றதாம்.

elephant_pidi01தலைவி: ஆம். அவர் கூறியது எனக்கும் நினைவில் இருக்கின்றது. அவ்விதம் கன்றைவிட்டுப் பிரிந்து நிற்கும் பிடியின் நிலைமை குழந்தையைப் பிரிந்து வருந்தும் தாயின் நிலைமை போன்றது என்று கூறினாரே.

தோழி: அவ்வழிகளில் செல்கின்றவர்க்கு இக்காட்சியைக் கண்டதும் குடும்ப நினைவு உண்டாகும் அல்லவா?

தலைவி: உண்டாகாமல் என்ன? ஆயினும் மேற்கொண்ட செயலில் வெற்றி பெற்றுத் திரும்பிவரட்டும். செய்வினை சிறந்து திரும்புவாராக.

உஉ. பாடல்

அகநானூறு     347                   பாலை

தோளும் தொல்கவின் தொலைய, நாளும்

நலம் கவர் பசலை நல்கின்று நலிய,

சால்பெரும் தானைச் சேரலாதன்,

மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய

பண் அமை முரசின் கண் அதிர்ச்சி அன்ன

கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி

அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழியச்

சென்றனர் ஆயினும் செய்வினை அவர்க்கே

வாய்க்கதில்! வாழி! தோழி! வாயாது

மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து

ஒண் கேழ் வயப்புலி பாய்ந்து எனக் குவவு அடி

வெண்கோட்டு யானை முழக்கு இசைவெரீஇக்

கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப்பிடி

கைதலை வைத்த மையல் விதுப்பொடு

கெடுமகப் பெண்டிரில் தேரும்

நெடுமர மருங்கின் மலையிறந்தோரே.

பொருள் முடிபு:

க. வாயாது …..மலையிறந்தோர் (அடிகள் கூ – ககூ)

உ. தோளும்….வாழி தோழி (அடிகள் க-கூ)

க (அடிகள் கூ-ககூ)

வாயாது: தக்க காலத்தில் கிடைக்கப்பெறாது, மழை – மழையானது, கரந்து ஒளித்த – அற்றுப்போய் மறைந்த, கழை – மூங்கில்கள், திரங்கு – வாடிக்காய்கின்ற, அடுக்கத்து – மலைப்பக்கத்தில், ஒண்கேழ் – விளக்கமான நிறமுடைய, வய – வலிமைமிக்க, புலி – புலியானது, பாய்ந்து என – பாய்ந்ததாக, குவவு அடி – பருத்துத்திரண்ட அடிகளையும், வெண்கோடு – வெண்மையான தந்தத்தினையும் உடைய, யானை – யானையானது. முழக்கு இசை – முழக்கமிட்ட ஒலியை, வெரீஇ – அஞ்சி கன்று ஒழித்து – தன் கன்றை விட்டுவிட்டு, ஓடிய – ஓடிப்போன, புன்தலை – வலிமையிலாத தலையினை உடைய, மடப்பிடி – இளம் பெண்யானை, கை – தன் துதிக்கையை, தலைவைத்த – தலையின் கண்வைத்த, மையல் – மயங்கிய, விதுப்பொடு – விரைவுடன், கெடு மகவு – தன் குழந்தையை இழந்து, காணாது (வருந்தும்), பெண்டிரின் – பெண்ணைப் போல், தேரும்-தன் கன்றைத் தேடியலையும்,நெடுமர – உயர்ந்து வளர்ந்துள்ள மரங்கள் மிக்க, மருங்கின் – பக்கம் பொருந்திய, மலை – மலையை, இறந்தோர் – கடந்து சென்றோர் (ஏ – அசை)

உ (அடிகள் க-கூ)

தோளும் – தோள்களும், தொல்கவின் – பழமையாகப் பொருந்திய அழகு, தொலைய – நீங்கவும், நாளும் – நாள்தோறும், நலம் – அழகினை, கவர் – கெடுக்கின்ற, பசலை – பசலை என்று சொல்லப்படும் மேனியில் தோன்றும் நிறவேறுபாடு, நல்கின்று – அழகைத்தருதல் இல்லாமல், நலிய – அழகைக்கெடுத்து வருத்தவும்,

சால் – நிறைந்து கொண்டே இருக்கும், பெருந்தானை – பெரிய படைகளையுடைய, சேரலாதன் – சேரல் ஆதன் என்னும் சேர அரசன், மால்கடல் – பெரிய கடலின்கண், ஓட்டி – பகைவர்களை ஓடச்செய்து, கடம்பு அறுத்து – அப்பகைவர்களின் காவல்மரமாகிய கடம்ப மரத்தை வெட்டி, இயற்றி – செய்யப்பட்ட, பண் அமை – அடித்தால் இனிய ஓசையைத் தரும், முரசின் – முரசு என்ற இசைக்கருவியின், கண் அதிர்ந்து அன்ன – பக்கம் துழங்கினால்போல, கவ்வை – பிறரைப்பற்றிய பழியினை, தூற்றும் – பலர் அறிய எடுத்துக் கூறும் வெம்வாய் – கொடிய சொற்களைப் பேசும், பெண்கள் மிகுந்த, சேரி – தெருவின்கண், அம்பல் – மறைவாகச் சிலர் கூடிப்பேசும் உரையும், மூது ஊர் – பழமையான ஊரின் கண், அலர் – அனைவரும் ஆங்காங்குக் கூடிப்பலர் அறிய மொழியும் பழியும், நமக்கு ஒழிய நமக்கே உரித்தாக நம்மிடத்தைவிட்டு விட்டு, சென்றனராயினும் நம்மைப் பிரிந்துபோனார் ஆனாலும், செய்வினை – அவர் மேற்கொண்டு செய்யும் வினையின் பயன், அவர்க்கே வாய்க்க அவருக்கே கை கூடுக. (தில்: விருப்பத்தைக் காட்டும் அசைக் சொல்.)

ஆராய்ச்சிக் குறிப்பு:

சேரல் ஆதன்: இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்றும் அழைக்கப்படுவான். இவன் தன் ஆட்சிக்கு Neduncheralaathan_01வடக்கு வரம்பாக (எல்லையாக) இமயமலையைக் கொண்டிருந்ததனால், இமயவரம்பன் என்று அழைக்கப்பட்டான், இவனுடைய வெற்றிச் சிறப்பையும், கொடைச் சிறப்பையும் பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தில் குமட்டூர்க்கண்ணனார் என்ற பெரும்புலவர் விரிவாகக் கூறியுள்ளார்.

மேற்கடல் தீவினுள் கடம்பர் என்ற ஒரு கூட்டத்தார் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தியதாகவும், அவர்களையே இச்சேரலாதன் வென்றதாகவும் கூறப்படுகின்றது.

இன்னும் வடநாட்டு ஆரியரை வென்று, இமயத்தில் தன் விற்கொடியை நாட்டியதாகவும், யவனர் என்ற மேலை நாட்டினரை வென்று சிறைசெய்து, அவர்கள் தலையில் நெய்யை ஊற்றி கைகளைப் பின்னேவைத்துக் கட்டியதாகவும் கூறப்படுகின்றது.

அமைவரல் அருவி இமையம் வில்பொறித்து

இமிழ்கடல் வேலித்தமிழ் அகம் விளங்கத்

தன் கோல் நிறீஇத் தகை சால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி

நயனில் வன் சொல் யவனர்ப் பிணித்து

நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ”

என்று கூறப்படுவதை நோக்குங்கள்.

அன்று இமயம்வரையில் ஆட்சி செலுத்திய தமிழர் மரபில் தோன்றிய நாம் இன்று எந்நிலையில் உள்ளோம் என்பதை நினைக்கும்தோறும் உள்ளம் குமுறுகின்றதல்லவா? அந்தநாள் இனி வருமா? இமயம்வரையில் படையெடுத்துச் செல்லாவிடினும், தமிழ்நாட்டிலேனும் பிறநாட்டார்க்கு அடிமையாய் இராமல் வாழும் தமிழ் அரசாவது தோன்றுவதற்குத் தமிழர்கள் உழைத்தல் வேண்டும்.

இமயவரம்பனநெடுஞ் சேரலாதனின் தந்தையின்  பெயர் உதியன்சேரல்; தாயின் பெயர் நல்லினி. மனைவியின் பெயர் நற்சோனை. மக்கள்: செங்குட்டுவன், இளங்கோ அடிகள். செங்குட்டுவன் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பதால், இமயவரம்பன்காலம் கி.பி. 80-140 என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

காவல்மரம்:- பழங்காலத்தில் ஒவ்வொரு அரச குடும்பத்தினரும், தத்தமக்கு ஒரு மரத்தை உரிமையாக வளர்த்துவந்தனர். பகையரசர்கள் படையெடுத்து வருங்கால் இம்மரத்தை வெட்டுவதையே குறியாகக் கொண்டு போர் புரிவர். மரத்திற்குரியோர், பகைவர் தம் மரத்தை அணுகவொட்டாது தடுத்துக் காவல் புரிவர். மரம்  வெட்டப்பட்டால், மரத்திற்குரிய அரசர் தோற்று விட்டதாகக் கருதப்படுவர். பகையரசர் அந்த மரத்தினால் முரசு செய்து தம் வெற்றிக்குரிய நினைவுப் பொருளாக வைத்துக் கொள்வர்.

தலைவியின் உளம்:- தலைவன் தன்னை வருந்துமாறு விட்டு விட்டுச் சென்றாலும், அவன் மேற்சென்ற  வினையில் வெற்றி பெறட்டும் என்று தலைவி விரும்பி வாழ்த்துதலின் நயம் அறிந்து இன்புறத்தக்கது. மேற்கொண்ட வினையில் வெற்றி பெறின் விரைவில் திரும்புவர் என்ற கருத்துப்போலும்.

கன்றைநீங்கிய பிடி:-களிற்றின்மேல் புலி பாய்ந்தது. களிறு பெருமுழக்கமிட்டது. அருகில் நின்ற  பிடி தன் கன்றையும் பாராது அஞ்சி ஓடியது. பின்னர் கன்றின்  நினைவு வந்தது. கையைத் தலையில்வைத்து மயங்கிநின்று தேடியது. இக்காட்சியைக் கண்டோர்,  குழந்தையைக்  காணாமல் போக விட்ட தாய் ஒருத்தி தன் தலையில் கையை வைத்துக் கொண்டு வருந்துகின்ற நிலையைத்தான் நினைப்பர் அன்றோ. ஆகவே மாமூலனாரும், கன்றை நீங்கிய பிடிக்கு, சேயை நீங்கிய தாயை உவமை கூறுகின்றார்.ilakkuvanar01

(தொடரும்)