மாமூலனார் பாடல்கள் – 4
– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)
ங. அவர் பிரிந்தார் என்று கூறுவார் இலரே!
தலைவி : தோழி”!
“அம்ம!”
“ஊரிலுள்ள பெண்கள் என்ன சொல்லுகின்றார்கள் தெரியுமா?”
“அறிவேன் அம்ம! ஆடவர்க்குத் தொழில்தானே உயிர்; ஏதோ அலுவலாகத் தலைவர் சென்றால், தலைவி சில நாட்களுக்கு அவர் பிரிவைக் கருதி வருந்தாது பொறுத்திருத்தல் வேண்டாமா? இப்படியா வருந்துவது?” என்கின்றனர்.”
“தோழி! அவர்கள் இரக்கமற்றவர்கள். உண்மை நிலை உணராது கூறுபவர்கள். ‘ஒரு பெண்ணை வீட்டில் வருந்த விட்டு விட்டு, அவர் இப்படிச் செல்லலாமா?’ என்று கேட்பதை விடுத்து நான் பொறுத்திருக்கவில்லையே என்று கூறுவது பொருந்துமா?”
“அவர்கள் ஆராயாது கூறுபவர்கள். தாங்கள் இதற்காக வருந்துதல் கூடாது அம்ம!”
“தோழி! அவர் சென்றுள்ள வழியைப்பற்றி அறிவாயா? இக்காலம் வெயில் மிகுந்த கோடைக்காலம்; ஞாயிறு(சூரியன்) நெருப்புப் பந்துபோல் காணப்படுகின்றது. வயல்களில் உள்ள பயிர்கள் தீய்ந்து கருகிவிட்டன. வெயில் எரிப்பதைப் பார்த்தால் இன்றுதான் உலகம் அழியும் கடைசி நாளோ என்று நினைக்க வேண்டியுள்ளது. மழை பெய்து பல நாட்கள் ஆகிவிட்டன. அவர் செல்லக்கூடிய வழிகளில் ‘யா’ மரங்கள் என்ற ஒருவகை மரங்கள் உண்டு. அவற்றில் இலைகளைக் காணமுடியாது. அந்த மரங்களில் கழுகுக்கூடுகள் மிகுதியும் உண்டு. அக் கூட்டில் உள்ள குஞ்சுக்கு இரை எப்படி கிடைக்கின்றது தெரியுமா? அங்குள்ள மக்களில் சிலர் அவ்வழியே போவார் வருவாரை அம்பால் எய்து கொல்லுதலையே பொழுதுபோக்காகக் கொண்டிருப்பர். கொல்லப்பட்டு வீழ்ந்து கிடக்கும்போது அவர்களைச் சுற்றிலும் செந்நீர் (இரத்தம்) சூழ்ந்து ஓடிக் காய்ந்து தோன்றும். அவர்களுடைய உடலிருந்து வெளிப்பட்ட நிணம்(தசை) அவர்களைச் சுற்றியிருக்கும் தோற்றம், செவ்வலரி மாலை அணிந்திருப்பது போல் தோன்றும். இந்தக் கழுகுகள் அவர்களுடைய கண்களைக் குத்திக் குத்தி, ஊனை எடுத்துச் சென்று தம் குஞ்சுகளுக்கு ஊட்டும். என்ன அஞ்சுதற்குரிய வழி! அங்குள்ளவர்கள் எல்லாம் வில்லால் பகைவர்களை அழித்து அவர்கள் அஞ்சிக் கொடுக்கும் பொருளை வாங்கி உண்டு காலம் கழிப்பார்கள். அவ்விடங்களில் உள்ள மக்கள் எல்லாரும் தமிழர் அல்லர். இத்தகைய வழிகளையுடைய பல மலைகளைக் கடந்து செல்லுதல் வேண்டும்.”
“கழுகுள் மிக்க காடுகள், கொடியோர் மிக்க மலைகள்; இவை தமிழ்நாட்டைச் சார்ந்தனவா? யார் ஆட்சிக்கு உட்பட்டன அம்ம!”
“இவ்விடங்களில் இருப்பவர்கள் தமிழர் அல்லர்; ஆனால் அவர்கள் நாட்டை நம் தமிழ் வேந்தர்கள் இப்பொழுதுதான் தம் ஆணைக்குக் கீழ் கொண்டு வந்துள்ளனர்.”
“தமிழ் மன்னர் ஆணைக்கு உட்பட்ட இடமல்லவா? இனி அஞ்சுதல் வேண்டா.”
“இல்லை தோழி! இத்தகைய கொடிய வழிகளில் தலைவர் சென்றுள்ளாரே என்று நாம் வருந்துகின்றோம்; நாம் இவ்விதம் வருந்த அவர் பிரிந்து போய்விட்டார் என்று கூறுவார் ஒருவர் கூட இலரே!”
இவ்வாறு தலைவனைப் பிரிந்த தலைவியும் தோழியும் உரையாடுகின்றனர். தலைவியின் உரையை அழகிய தமிழில் பாடியுள்ளார் நம் புலவர். அதைப்படித்துப் பாருங்கள்!
ங பாடல்
அகநானூறு 31 பாலை
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி
நிலம்புடை பெயர்வது அன்றுகொல் இன்றுஎன
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து
5 இலையில ஓங்கிய நிலையுயர் யாஅத்து
மேற்கவட்டு இருந்த பார்ப்புஇனங் கட்குக்
கல்லுடைக் குறும்பின் வயவர் வில்லிட
நிணவரிக்கு உறைந்த நிறத்த அதர்தொறும்
கணவிர மாலை இடூஉக் கழிந்து அன்ன
10 புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண் உமிழ் கழுகின் கானம் நீந்திச்
சென்றார் என்பிலர்; தோழி! வென்றியொடு
வில் அலைத்துண்ணும் வல்லாண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
15 மொழி பெயர் தே எத்த பன்மலை இறந்தே.
– மாமூலனார்
பதவுரை:
நெருப்பு என – நெருப்பு என்று சொல்லுமாறு சிவந்த – செந்நிறமாகக் காணப்படும், உருப்பு – வெப்பம், அவிர் – விளங்கும், மண்டிலம் – ஞாயிறு (சூரியன்), புலம் கடை – வயலில் உள்ள பயிர்கள், மடங்க – காய்ந்து அழிய, தெறுதலின் – அழித்தலின், ஞொள்கி – குறைந்து, நிலம் – இந் நிலவுலகம், புடைபெயர்வது – அழிவதாகிய, அன்றுகொல் – அந்தநாளோ, இன்று என – இந்த நாள் என்ற யாவரும் சொல்ல, மன் உயிர் – இங்குத் தங்கியுள்ள உயிர்கள், மடிந்த – அழிந்த, மழைமாறு – மழை இல்லாத, அமையத்து – காலத்தில், இலை இல ஓங்கிய – இலைகள் அற்று உயர்ந்துள்ள, நிலைஉயர் – நேராக வளர்ந்து உயரும், யா அத்து – யாமரத்தின் , மேற்கவட்டு – மேல் உள்ள கிளைகளில், இருந்த – கூடுகளில் தங்கியிருந்த பார்ப்பு, இனங்கட்கு – குஞ்சுக் கூட்டங்களுக்கு, கல்லுடை – மலையில் உள்ள குறும்பின் – சிறு ஊரில் உள்ள, வயவர் – வலிமையுள்ள வேடர், வில்லிட – வில்லால் அம்பினை எய்ய, நிணவரிக்கு – உடம்பில் தோன்றிய ஊனால், உறைந்த – உறைந்து தங்கிய, நிறத்த – நிறம் பொருந்திய, அதர் தொறும் – வழி தோறும், கணவிரமாலை – செவ்வலரி மாலை, இடுஉ – இடப்பட்டு, கழிந்து அன்ன – இறந்துகிடந்த பிணத்தை ஒப்ப, புண் உமிழ் – புண்சொரியும், குருதி – இரத்தம், பரிப்ப – சூழ, கிடந்தோர் – வீழ்ந்து கிடந்தோரின், கண் உமிழ் – கண்ணைத் தோண்டி எடுத்துக்கொண்டு போய் உமிழும், கழுகின் – கழுகுகள் மிக்க, கானம் – காடுகளை, நீந்தி – கடந்து., சென்றார் – போனார், என்பிலர் – என்று கூறுவார் இலர், தோழி – தோழியே! வில் அ லைந்து – வில்லால் பகைவர்களை அழித்து, வெற்றியோடு – வெற்றியால் கிடைக்கும் பொருள்களை, உண்ணும்- உண்ணுகின்ற, வல் ஆண் – வலிய ஆண்மை பொருந்திய, வாழ்க்கை – வாழ்க்கையினையுடைய (பன்மலை), தமிழ்கெழு – தமிழ்நாட்டை ஆளும், மூவர் – சேர சோழ பாண்டியர். காக்கும் – காப்பாற்றும், மொழி பெயர் – மொழி வேறுபட்ட, தே எத்த – தேயங்களில் உள்ள, பன்மலை – பல மலைகளையும் இறத்தே – கடந்தே.
இயைபு: தோழி! மண்டிலம் தெறுதலின், அமையத்து, கானம் நீந்தி, பன்மலை இறந்து, சென்றார். என்பிலர்.
குறிப்பு :
பார்ப்பு: பறவைக் குஞ்சைப் பார்ப்பு என்பது பழங்கால வழக்கு. இன்று குழந்தையைக் குறிக்கும் “பாப்பா” என்ற சொல் அதிலிருந்து வந்ததே.
தேஎம்: தேம் (விருப்பம்) என்ற சொல் “தே எம்” என்று அளபெடுத்து, ‘தேயம்’ என்று மாறிப் பின் ‘தேசம்’ என்று ஆயிற்று.
‘யா’: ‘யா’ என்ற மரம் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப் படுகின்றது. அது இப்பொழுது எப்பெயரால் எங்கு இருக்கின்றது என்று தெரியவில்லை.
தமிழ்: இத் தமிழ் என்ற சொல் இப்பாடலில் காணப்படுகின்றதால் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் தோன்றிய “திராவிட” என்ற சொல்லே “தமிழ்” என மருவிற்று என்ற கூற்றுப் பொருந்தாப்பொய் என்று அறியலாம்.
(தொடரும்)
Leave a Reply