(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

ச. உண்ணா நோன்பு கொண்டு உயிர்விட்டான்!

இதைக் கேட்ட சான்றோரும் உயிர்விட்டனர்!

என் மகளைப் பிரிந்த யானோ?

– தாய்karikalvalavan1

கரிகால்வளவன் தமிழ் நாட்டில் சோழநாட்டை ஆண்டபேர் அரசன்; ஆற்றல் மிக்கவன்; படைகள் நிறைந்தவன்; கடலிலும் நிலத்திலும் பல போர்கள் புரிந்து வெற்றி பெற்றவன்.

பெருஞ்சேரலாதன் சேர நாட்டை ஆண்ட பேர் அரசன்; இவனும் எல்லா வகையிலும் சிறந்து விளங்கினான். சோழ நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க்கொண்டு வர நினைத்தான்: படை எடுத்துச் சென்றான்.

சோழநாட்டில் வெண்ணி என்ற இடத்தில் இருவர் படைகளும் அணிவகுத்து நின்றன. இரண்டு பேர் அரசர்களும் அவரவர் படைக்குத் தலைமை தாங்கினர்.

போர் – பெரும்போர் நிகழ்ந்தது.

யார் வெற்றிபெறுவார் என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தன. கரிகால்வளவன் தன் நாட்டினுள் வந்த அரசானை உயிருடன் விடுவதா என்று நினைத்தான். நாழிகை பல சென்றும் வெற்றி கிட்டாததை எண்ணி னான்; வீறு கொண்டான்; எடுத்தான் ஓர்அம்பை; அவன் மார்பில் குறிவைத்து எய்தான்; அம்பு அவன் மார்பில் தைத்து ஊடுருவிச் சென்றுவிட்டது.  சேரன் ஆண்மையோடு தாங்கினான். அம்பு விட்ட விசையால் ஊடுருவிச் சென்றாலும், அவன் உயிர் துறக்கவில்லை. ஆயினும் அன்று வெற்றியடைந்தவன் கரிகால்வளவனே.

சேரன் தோல்வியுற்றான்; மறுபடியும் படை திரட்டிக்  கொண்டுவந்து பொரலாம். ஆனால். முதுகில் புண்பட்டு விட்டது. மார்பில் உண்டாகும் புண் – அதனால் உண்டாகும் வடு – வீரர்க்கு அணிகலன் – வெற்றிப்பதக்கம் போன்றது. அதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் முதுகில் ‘வடு’ என்றால் தமிழ் வீரன் உயிர் வாழான். பண்டைத் தமிழ்நாட்டில் போர்க்களத்தில் வெற்றி பெற்றால்தான், வீடு திரும்புவர் இல்லையேல், போர்புரிந்து இறப்பர். புறங்காட்டிச் செல்லும் வழக்கம் இல்லை. அப்படிப்புறங்காட்டிச் சென்றால் அவனை வீரனாகக் கருதார்; அம்பும் எய்யார். ஆனால் இங்கு நிலைமை வேறு; மார்பில் ஏற்ற அம்பால் முதுகில் புண் ஏற்பட்டது; ஆயினும் புண்; புண்தானே, அது விரைவில் ஆறினாலும், தழும்பு மாறாது. “கண்டோர் என்ன நினைப்பார்” என்று எண்ணினான்; ஏங்கினான்; வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான்.

வடக்கிருத்தல் என்றால், மானம்கெட வருமிடத்து உயிர் விட விரும்பியோர், ஓரிடத்து வடக்கு நோக்கி உட்கார்ந்து, உணவு கொள்ளாது, பட்டினியிருந்து உயிர் துறப்பதாகும்.

பெருஞ்சேரலாதனும் வடக்கிருந்தான். அவன் மானம் மிக்க வீரனாதலின் வாளைக் கையில் வைத்துக்கொண்டே உண்ணாது உயிர்விட்டான்.

war scene poar1சேர நாட்டில், அன்று ஒருவரும் ஒன்றும் செய்யவில்லை. அரங்குகளில் நடைபெற்ற இசையும் கூத்தும் நின்றன; மத்தளம் அடிப்பாரின்றிக் கிடந்தது. தயிர் கடையப்படாமல் பானை கவிழ்ந்து கிடந்தது; உழவர்கள் உழவில்லை; எங்கும் வேலைநிறுத்தம். இதைக் கழாஅத்தலையார் என்ற புலவர் அருமையாகப் பாடியுள்ளார். ஞாயிறு மிக்கு விளங்கும் பகல்கூட, பகலாகத் தெரியவில்லை என்கின்றார்.

தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த

புறப்புண் நாணி மறத்தகை மன்னன்

வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு

நாள் போல் கழியல ஞாயிற்றுப்பகலே (புறம் 65)

சேரனால் புரக்கப்பட்ட சான்றோரும் உயிர்விட்டனர்.

இந்நிகழ்ச்சிகள் மாமூலனார் நினைவிற்கு வருகின்றன.

ஒரு தலைமகள் தான் விரும்பியவாறு தன் காதலனை மணப்பதற்குப் பெற்றோர் உடன்படவில்லை. உயிரினும் நாண் சிறந்தது. நாணினும் கற்புச் சிறந்தது. பெற்றோர் அறியாமல் மணம் ஆகாமுன் காதலனுடன் செல்லுதல் நாணத்திற்கு இழுக்கேயாயினும், உயிரினும் சிறந்த கற்பைப் பாதுகாக்கவேண்டி அவ்விதம் சென்றுவிட்டாள். செவிலி – வளர்ப்புத்தாய் வருந்துகின்றாள். அவளுக்கும் சேரலாதன் பட்டினியிருந்து உயிர்விட்ட நிகழ்ச்சியும் அப்போது அவன் பிரிவைத் தாங்காது உயிர்விட்ட பெரியோர்கள் செயலும் நினைவுக்கு வருகின்றன.

“ஓர் அரசன் இறக்க அவனோடு நெருங்கிய தொடர்பு இல்லாத மற்றையோர் இறந்தனர். என் மகளைப் பிரிந்த நான் இன்னும் வாழ்கின்றேன். என்ன கொடுமை!” என்று எண்ணுகின்றாள்.

தலைவி சென்ற வழியை, நினைக்கின்றாள். “வெயில்கொடுமை மிகுதி; மலையும் வெடிக்கும்; அப்பொழுது பறந்து செல்லும் பறவைகளும் வாடி வருந்தும். வழியோ பருக்கைக் கற்கள் நிறைந்தது. அவை உளியைப்போல் கூர்மையாக நீட்டிக் கொண்டிருக்கும். மூங்கில் கரிந்துபோகும் காட்டில் இன்னநேரத்தில் இன்ன துன்பம் வரும் என்று சொல்ல முடியாது. இத்தகைய வழியில் அவள் எப்படிச் சென்றாள்?”

ஆயினும் வலிமைமிக்க ஆண்யானையை ஒத்த காளைபோன்றவனோடு சென்றுள்ளான் என்ற நினைவும் வருகின்றது.

“அவளைக் கனவில் கண்டு மகிழ்வதற்குத் துன்பமிகுதியால் உறக்கம்கூட வரவில்லையே,” என்று வருந்துகின்றாள். இந்நிலையில் மாமூலனார் சொல்லோவியப்படுத்துகின்றார். அதைப்படித்து மகிழுங்கள்.

அகநானூறு 55 பாடல் பாலை

காய்ந்து செலல் கனலி கல் பகத் தெறுதலின்

நீந்து குருகு உருகும் என்றூழ் நீள்இடை

உளி முக வெம்பரல் அடி வருத்துறாலின்

விளிமுறை அறியா வேய் கரி கானம்

வயக்களிற்று அன்ன காளையொடு என் மகள்

கழிந்ததற்கு அழிந்தன்றோ இலனே; உழிந்து யான்

ஊது உலைக்குருகின் உள்உயிர்த்து அசைஇ

வேவது போலும் வெப்ப நெஞ்சமொடு

கண்படை பெறேஎன் கனவ; ஒண்படைக்

கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்

பொருது புண் நாணிய சேரலாதன்

அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென

இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்

அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்

பெரும் பிறிதாகியாங்குப் பிரிந்து இவண்

காதல் வேண்டி என் துறந்து

போதல் செல்லா என் உயிரொடு புலந்தே

பதவுரை

காய்ந்து – கொடுமையான வெயிலால் சுட்டு, செலல் – செல்லும், கனலி – ஞாயிறு (சூரியன்), கல் – மலை, பக-பிளக்குமாறு, தெறுதலின் – எரித்தலின், நீந்து – வானத்தில் பறக்கும். குருது – பறவைகள், உருகும் – வாடும், என்றூழ் -வெயில், நீள்இடை – மிக்க இடத்தே, உளிமுக – உளியைப் போல் கூர்மையான, வெம்பரல் – கொடியகற்கள், அடி-கால் அடிகளை, வருத்துறாலின்- நோவச்செய்தலினால், விளிமுறை- சாகும் இடன், அறியா – இன்ன இடம் என்று அறியாத துன்பம் மிக்க, வேய்  – மூங்கில் , கரி – வெயிலால் கருகுகின்ற, கானம் – காட்டில், வயம் – வலிமை மிக்க, களிற்று அன்ன – ஆண்யானையை ஒத்த, காளையொடு – காளை போன்ற தலைவனோடு, என் மகள் – எனது மகள், கழிந்ததற்கு – சென்றதன் பொருட்டு, அழிந்தன்றோ – வருந்தி இறந்தேன், இலனே – இல்லையே, ஒழிந்து – உயிர் விடாது இவ்வுலகில் தங்கி இருந்து, யான் – நான், ஊது – ஊதுகின்ற, உலை – கொல்லன் உலைக்களத்தில் உள்ள, குருகின் – துருத்தி போல, உள் உயிர்த்து – பெருமூச்சுவிட்டு விம்மி, அசை இ – வருந்தி, வேவது போலும் – நெருப்பில் பட்டு அழிவது போன்ற, வெப்ப – தாங்கமுடியாத துன்பம் மிக்க, நெஞ்சமொடு – மனத்துடன், கண் படை – உறக்கம், பெறேன் – அடையேன், கனவ – கனவில் காண்க. ஒண்படை – ஒளி பொருந்திய போர்க் கருவிகள் மிக்க, கரிகால்வளவனோடு – கரிகால்வளவன் என்னும் அரசனோடு, வெண்ணிப் பறந்தலை – வெண்ணி என்ற ஊரில் நடந்தபோர்க்களத்தின் கண், பொருது – சண்டை செய்து, புண் – மார்பில் அம்பு பட்டு ஊடுருவிச் சென்றதால் முதுகில் உண்டான புண்ணை, நாணிய – வெட்க முற்ற, சேரலாதன் – பெருஞ் சேரலாதன் என்னும் சேர அரசன், அழிகளம் மருங்கில் – தான் பெருமை இழந்த போர்க்களத்தில், வாள் வடக்கு – வாளோடு வடக்கு நோக்கி உண் ணாது, இருந்தென – இருந்தனனாக, இன்னா – இறந்தான் என்ற துன்பம் தரும், இன் – உயிரை விடுத்து மானம்  காத்தான் என்ற இனிய, உரை – சொல்லை, கேட்ட – கேள்வியுற்ற, சான்றோர் – பல நற்குணங்களால் நிறைந்த பெரியோர், அரும் பெறல் உலகத்து – அரிதாகப்பெறும் வீட்டுலகத்திற்கு. அவனொடு செலீஇயர் – அவனொடு செல்லும் பொருட்டு, பெரும் பிறிதாகி யாங்கு – இறந்ததைப் போல, பிரிந்து – இறந்து, இவண் – இங்கே, காதல் வேண்டி – வாழும் தன்மையை விரும்பி, என் துறந்து – என்னை விட்டு; போதல் செல்லா – போகாத, என் உயிரொடு – என் உயிரோடு, புலந்து – வருந்தி (ஏ. அசை)

இயைபு: என் மகள் கழிந்ததற்கு யான் அழிந்திலன்; என் உயிரொடு புலந்து, கனவ, கண் படைபெறேன்.

***

ஆராய்ச்சிக் குறிப்பு

வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. தொடர்வண்டி நிலையம் உள்ளது. இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப் பற்றி விரிவாக அறிவரேயன்றி, நம் நாட்டுப் போரைப்பற்றி நன்கு அறியார். அது அவர்கள் குற்றமும் அன்று, தமிழ் நாட்டு வரலாறு நன்கு அறிந்து கொள்வதற்குரிய முறையில் கல்வித் திட்டம் அமைந்திலது. வருங்காலக் கல்வித்திட்டமாவது தமிழர்கள் தம் முன்னோர்களை நன்கு அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்படல் வேண்டும்.

கரிகால்வளவன்: இவன் வரலாற்றைப் பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை, பழமொழி முதலியவற்றாலும் அறியலாம். இவன் இளைஞனாய் இருந்த காலத்தில், இவன் தங்கியிருந்த வீடு பகைவர்களால் கொளுத்தப்பட்டது. நெருப்பால் சூழப்பட்ட  அவ்வீட்டிலிருந்து தப்பி வெளியேறிய காலத்துக் கால்கரிந்தமையால் கரிகாலன் என்ற பெயர் பெற்றானாம். இவன் தந்தையின் பெயர் உருவப்பல்தேர் இளஞ்சேட்சென்னி. மாமனார் நாங்கூர்வேள். இவன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு இவனுக்குப் பின்னர் கரிகாலன் என்ற பெயரோடு ஒருவன் ஆண்டுள்ளான். இவனே சிலப்பதிகாரத்தில் கூறப்படுபவன்.

சேரலாதன்: “மயிர்நீர்ப்பின் வாழாக்கவரிமா அன்னார்

    உயிர்நீப்பர் மானம் வரின்”

என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாகும் இவன் வாழ்க்கை. இவன் உண்ணா நோன்பு கொண்டு உயிர்விட்டகாலத்து, இவன் நாடு பொலிவற்றிருந்தது என்பதனாலும், சான்றோர் பலர் உயிர்விட்டனர் என்பதனாலும் யாவராலும் விரும்பப்பட்ட பேரரசன் என்று அறியலாம்.

வடக்கிருத்தல்: மானம்கெட வருமிடத்து உயிர் வாழ விரும்பாத தமிழர்கள் தூய்மையான ஓரிடத்தில் வடக்கு நோக்கி உட்கார்ந்து எவ்வுணவும் கொள்ளாது உயிர்விட்டனர். வடக்கு நோக்கி உட்கார்ந்தமையில் “வடக்கிருத்தல்” என்று அழைக்கப்பட்டது.

இக்காலத்தில் அரசியல் வாழ்கையில் ஈடுபட்டுள்ளோர் பட்டினி யிருப்பதைப்பற்றிக் கேள்விப்படுகின்றோம். இப்பட்டினி நோன்பு மற்றவர் மனதை மாற்றக்கொள்ளும் வலிய கருவியாகின்றது. பண்டைத் தமிழரோ தம்மைத் திருத்த,  தமது உயர்வை நிறுத்து, இந் நோன்பை மேற்கொண்டனர்.