– செம்மொழி இராமசாமி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியில்துறையும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள் எழுதும் பணிப்பட்டறை தொடக்கவிழா 09.12.12 அன்று நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார். பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் மா.கணேசன் தலைமை வகித்துப் பேசினார். தமிழியல்துறை தலைவர் முனைவர் ப.ஞானம் முன்னிலை வகித்துப் பேசினார்.

panipattarai semmozhiramasamy1

விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன முன்னாள் இயக்குநர் முனைவர் க.இராமசாமி கருத்துரையாற்றினார்.  அப்பொழுது அவர், “தமிழ் எழுத்துகளைக் கட்டுப்பாடு இல்லாமல், வரன்முறை இன்றிக் கண்டபடி எழுதும் போக்கு உள்ளது. சொல் அமைப்பு, தொடர் அமைப்பு சரியாக இல்லை. நிறுத்தக் குறியீடு இல்லை. எனவே தமிழில் எளிய சொல்லைத் தேர்வு செய்து, நிறுத்தக் குறிகளுடன் எழுத வேண்டும்” என்றார்.

 மேலும் அவர்,  இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இந்திய மொழிகள் அனைத்திற்கும் பாடநூல்கள், கருவி நூல்கள் உள்ளன. இந்திய மொழிகளான 22 பட்டியல் மொழிகள் தவிர உலகத்தில் உள்ள மற்ற மொழிகள் குறித்த பதிவுகளும் உள்ளன. அந்தமானில் கடற்கோளுக்குப் பிறகு அந்நாட்டு மொழி பேசுபவர்கள் அழிந்ததால், மொழியும் அழிந்தது. ஆனால் மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் அந்தமான் நாட்டு மொழி, பதிவு செய்யப்பட்டு, இலக்கணம் உருவாக்கப்பட்டு பாடநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது மொழிகளின் நடுவண் நிறுவனம் சிறுவர்களுக்கான சிறுகதைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. அனைத்துத் தாய் மொழிகளும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுகிறது. சிறுகதை நூல்களில் படங்களுடன் ஒரு பக்கம் ஆங்கிலமும், எதிர்ப் பக்கத்தில் தமிழிலும் சிறுகதைகள் இருக்கும். மற்ற மொழிகளில் ஆங்கிலம் ஒரு பக்கமும், எதிர்ப் பக்கத்தில் அந்த, அந்த மொழிகள் இருக்கும். கதை எழுதுபவர்கள் பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கும் போது மொழியியல் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்” என்றும் பேசினார்.

 panipattarai audience1

விழாவில் தமிழியல் துறை முன்னாள் தலைவர் ஆனந்தநடராச(தீட்சித)ர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன முன்னாள் துணை இயக்குநர் நடராசன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். உதவிப் பேராசிரியர் முனைவர்  சா.இராசா நன்றி கூறினார்.