இளங்கமரன், சிங்கப்பூர்01

இளங்கமரன், சிங்கப்பூர்01

‘’அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாறாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற மாக்கவி பாரதியின் வரிகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் சிங்கப்பூரில் உள்ள தமிழாசிரியர் ஒருவர் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்… நம்புங்கள் அவர் ஏழை மாணவர்களுக்காக 100  புதுக்காணி நிலத்தில் இலவச பள்ளிக் கூடமும் கட்ட இருக்கிறார்.

அவர்  ஓர் ஏழையை மட்டுமல்ல கிட்டத்தட்ட 500 ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மிகவும் வறிய நிலையில் இருந்த பத்து ஏழை மாணவர்களைத் தத்து எடுத்து, அவர்களது  தொடக்கக் கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை படிக்க வைத்திருக்கிறார். அந்தப் பத்து பேரும் நல்ல முறையில் படித்து, தற்போது ஓவிய ஆசிரியராகவும், கணிப்பொறி வல்லுநராகவும், பள்ளி ஆசிரியராகவும் பல துறைகளில் மின்னி வருகின்றனர்.

palli school01பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘எழுத்தேணி அறக்கட்டளையை’ நிறுவி அதன் மூலம் பல்வேறு ஏழை மாணவர்கள் படிப்பதற்கு நிதி உதவிகளைச் செய்துவருகிறார். இவை அத்தனையும் சிங்கப்பூரில் செய்யவில்லை. நமது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்குத்தான் செய்து வருகிறார் அந்த அறக்கட்டளையின் தலைவரான இளங்குமரன். ம.பொ.சி. மீசை, தெளிவான முகம், எளிமையான உடை, அன்போடு பழகும் மாண்பு, எப்போதும் உதவத்தயாராக இருக்கும் உள்ளத்தோடு இருந்த, அந்த 50  அகவை நிறைந்த ‘இளங்குமரன்’, அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளச் சென்னைக்கு வந்திருந்தார்.

அவரிடம்  உரையாடியபோது…

 

நீங்கள் பிறந்து வளர்ந்தது, படித்தவை பற்றிச் சொல்லுங்களேன்…

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூரில்தான். என் அப்பா   தாவீது(டேவிட்டு). பொதுப்பணித்துறையில்palli school02 இருந்தவர். என் அம்மா அந்தோணியம்மாள் இல்லத்தரசி. எங்கள்  இல்லம், 9 பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பம். நான் என் பெற்றோருக்கு இரண்டாவது பிள்ளை. தஞ்சையில் பள்ளிப் படிப்பை முடித்தேன். இதனையடுத்துத் தஞ்சாவூரிலுள்ள கரந்தைப் புலவர் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்தேன். இளங்கலை படிப்பை முடித்ததும் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து 5 ஆண்டுகள் களப்பணி ஆற்றினேன். அதன்பிறகு பூண்டி மலர்க்கல்லூரியில் முதுகலை படிப்பைப் பயின்றேன்.

 

சிங்கப்பூரில் பணி வாய்ப்பு எப்படி, எப்போது கிடைத்தது?

palli school natural04முதுகலைப் படிப்பை முடித்ததும் தஞ்சையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் 1990-இல் தமிழாசிரியராகப் பணிக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்கு அங்கு வழங்கப்பட்ட மாதச்சம்பளம் 250 ரூபாய். இதிலும் ஆசிரியர் கூட்டம், மைஎழுதிக்கு மை ஊற்றியது என்று கணக்கு காட்டி 15 உரூபாய் பிடித்துக் கொள்வார்கள். இப்படியாக ஓராண்டு போனதும், தஞ்சாவூரிலுள்ள தொன்போசுகோ பள்ளியில் மாதம் 1000 ரூபாய் சம்பளத்தில் தமிழாசிரியராகப் பணிக்குச் சேர்ந்தேன். அங்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றி இருப்பேன். அப்போது எனது நண்பர் நாகேந்திரன் என்பவர் சிங்கப்பூரில் தமிழாசிரியர் பணி இருக்கிறது என்று தகவல் கொடுத்தார். அவரது வழிகாட்டுதலின்படி விண்ணப்பித்தேன். பணிவாய்ப்பு கிடைத்தது. 1997 மார்ச்சில், சிங்கப்பூரில் உள்ள பூச்சூன் உயர்நிலை அரசுப்பள்ளியில் பணிக்குச் சேர்ந்து விட்டேன்.

அரசுப்பள்ளியில் ஆசிரியப்பணி கிடைத்துவிட்டால் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு இருப்பவர்களிடையே நீங்கள் இப்படிப்பட்ட கல்வித் தொண்டில் ஈடுபடக்காரணம் என்ன? இதற்கான முதல் வித்தை உங்கள் மனத்தில் விதைத்தவர் யார்?

எங்கள் குடும்பம் பெரியதென்று முன்பே சொல்லி இருக்கிறேன். நாங்கள் ஒன்பது பேர்,  என் சிற்றப்பா வீட்டுப்palli school natural05 பிள்ளைகள் மூன்று பேர் என 12 பிள்ளைகள் வீட்டில் இருப்போம். இத்தனைப் பிள்ளைகள் இருப்பதால் எந்நேரமும் எங்கள் வீட்டில் சாப்பாடு இருந்து கொண்டே இருக்கும். உதவி என்று கேட்டு வந்தால் என் அம்மா இல்லை என்று சொன்னது இல்லை.  அம்மாவிடம் பணம் இல்லையென்றால் கழுத்தில் இருக்கும் நகையை அடகு வைத்துக் கூட கொடுக்கும் தாராள மனம் அவருக்கு. ‘இருக்கும் வரை நம்மால் ஆன உதவியை நாலுபேருக்கு செய்யறவன்தான் மனிதன்’ என்பார் எங்கள் அம்மா. இப்படி மற்றவருக்கு உதவவேண்டும் என்ற முதல் விதையை என்னுள் விதைத்தவர் எங்கள் அம்மா. இளங்கலைப்  படிப்பை முடித்து விட்டு தொண்டு நிறுவனத்தின் மூலம் களப்பணியாற்றும் போது தமிழகத்திலுள்ள  சிற்றூர்ப்குதிகள், மீனவ ஊர்கள் எனப் பாமரர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் ஏழை மக்கள் படும் வேதனைகளை என்னால் முழுமையாக உணர முடிந்தது. அப்போது முடிவு எடுத்தவன்தான். நம்மால் ஆனவரை நாலுபேருக்கு உதவிட வேண்டும் என்று. அப்போதிருந்தே ஏழை மாணவர்களுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்துகொண்டிருந்தேன். இந்த உதவிகளை செய்ய ஒரு அறக்கட்டளை தொடங்கினால் என்ன என்று அப்போது எனக்குத் தோன்றியது. அதற்கு எனது முன்னாள் மாணவர்களும் அதற்கு ஆதரவு தந்தார்கள். அதனடிப்படையில்தான் ‘எழுத்தேணி அறக்கட்டளை’யைத் தொடங்கினேன்.

 

எழுத்தேணி அறக்கட்டளை இதுவரை செய்தது என்ன?

இந்த அறக்கட்டளை மூலம் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது முப்பதுக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் படிப்பதற்கு நிதிஉதவி செய்துள்ளோம். அதுமட்டுமின்றி மிகவும் வறியநிலையில் உள்ள பத்து மாணவர்களை தத்தெடுத்து, ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரிப்படிப்பு வரை படிக்க வைத்திருக்கிறது. அந்த பத்துப் பேரில் ஒரு மாணவர் உயிருடன் இல்லை என்ற சுமை எந்நெஞ்சை அழுத்திக் கொண்டே இருக்கிறது. மீதமுள்ள 9 பேரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சென்னையில் ஒவிய ஆசிரியராகவும் மற்றொருவர் அமெரிக்காவில் கணினி வல்லுநராகவும் இருக்கிறார். இத்தகைய செயல்களைச் செய்வதற்கு எனது முன்னாள் மாணவர்களும்  முதன்மைப் பங்காற்றி இருக்கிறார்கள். அறக்கட்டளையில் மட்டுமில்லை என் அக வாழ்க்கையிலும் கூட முதன்மைப் பாங்காற்றி இருக்கிறார்கள்.

அகவாழ்க்கையில் உங்களது மாணவர்கள் எப்படி?

எனது திருமணம் காதல் திருமணம். இரு வீட்டாரிடமிருந்து கடும் எதிர்ப்பு. எதிர்ப்பையும் மீறி எங்களது திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை உற்றார் வந்து நடத்தி வைக்கவில்லை, எனது முன்னாள் மாணவர்கள்தான் நடத்தி வைத்தார்கள். என்னிடம் படித்த 500 மாணவர்கள் இந்தத் திருமணத்தை நடத்திக் காட்டினர். நான் ஒரு ரூபாய் கூடச் செலவழிக்கவில்லை. அனைத்துச் செலவுகளையும் எனது மாணவர்களே பார்த்துக் கொண்டனர். ஆசிரியர்கள்தான் மாணவர்களது திருமணத்தை நடத்தி வைத்து பார்த்திருப்பீர்கள். மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஆசிரியருக்குத் திருமணம் நடத்தி வைத்தது எனது வாழ்க்கையில்தான்.

palli school03

உங்களது குடும்பம் பற்றி..?

அழகான குடும்பம். அன்பான மனைவி. அறிவான 3 பிள்ளைகள். மூத்தமகள் இளந்தமிழ். இரண்டாமாவன் இளங்கதிர். மூன்றாமாவன் இலக்கியன். ஏன் அழகான குடும்பம் என்று சொன்னேனென்றால், நிறைய ஏழை மாணவர்களுக்கு நான் உதவுகிறேன் என்பதை மட்டும்தான் அவர்கள் பார்ப்பார்கள். எவ்வளவு தொகை கொடுத்து உதவுகிறேன் என்று பார்க்க மாட்டார்கள். என் மனைவியின் ஆதரவு இதற்கு எப்போதும் உண்டு. என் மூன்று பிள்ளைகளும், அவர்களுக்கு நான் கொடுக்கும் பணத்தினை மிச்சம் செய்து, உண்டியலில் சேர்த்து,  ஓர் ஏழை மாணவர் படிப்பதற்கு நிதியாகத் தந்தனர். அதனால்தான் அப்படிச் சொன்னேன்.

உங்களுடைய எதிர்காலக் கனவு?

நான் எதிர்காலம் குறித்து கனவு ஏதும் காணவில்லை. எதிர்காலத்தை எப்படி அமைக்க வேண்டும் என்று திட்டமே வைத்திருக்கிறேன். ‘100  புதுக்காணி(ஏக்கர்) நிலம். நூறு கோடி பணம்’ இதுதான் எனது எதிர்காலத் திட்டம். இது எனது குடும்பத்துக்காக இல்லை. தமிழ்நாட்டில் கல்வி அறிவு கிடைக்காமல் அல்லல் படும் அனைத்துப்பிரிவு மக்களுக்காக. நூறு  புதுக்காணி நிலத்தைச் சொந்தமாக வாங்கி அதை நான்காகப் பிரித்துக் கொள்வேன். முதல் 25  புதுக்காணியில் ஏழைப்பிள்ளகள் படிக்க பள்ளிக்கூடம், தங்குமிடம், ஆசிரியர் குடியிருப்பு, ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், மாற்றுத்திறனாளிகள் இல்லம், திருநங்கைகளுக்கான இல்லம் எல்லாம்  என அமையும். அடுத்த 25 புதுக்காணியில் இங்கு தங்கிப், படிக்க இருக்கும் அனைவருக்குமான உணவுக் கூலங்கள், காய்கறிகள் போன்றவற்றைப் பயிரிடப் பயன்படுத்துவேன். அடுத்த 25 புதுக்காணியில் நீண்டகாலப் பலன்களை அளிக்கக்கூடிய மா, தென்னை, தேக்கு  முதலான மர வகைகள் வளர்க்கப்படும். கடைசி 25 புதுக்காணியில் வனம் ஒன்று அமைக்கப்படும். இந்த 25 புதுக்காணி நிலத்தில் அமையவிருக்கும் பள்ளிகள், இல்லங்கள் அனைத்தும் மீதமுள்ள 75 புதுக்காணி நிலத்தில் உருவாகும் பயன்களைக் கொண்டு, தடங்கலின்றி, யாருடைய உதவியுமின்றி செயல்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அறிவு, கல்வி, மன்பதை, பொருளியல் என எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற பள்ளியாக அது திகழ வேண்டும். அங்கு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும்  வேளாண்மை, தோட்டக்கலை குறித்த பாடங்கள் நேரடியாக நடத்தப்படும். இதன்மூலம் நம் நாட்டின் முதுகெலும்பான  வேளாண்மை காப்பற்றப்படும். இதனை நிறைவேற்ற 100 கோடி உரூபாய் பணம் தேவைப்படும். செலவு போக மீதமுள்ள பணத்தை வங்கியில் போட்டு வைத்து, அக்கல்வி நிறுவனத்தின் செலவினங்களுக்கும் பேணுகைக்கும் பயன்படுத்தப்படும். தஞ்சாவூர், செங்கிப்பட்டி அருகே உள்ள தெம்மாவூர்  ஊரில் 15 புதுக்காணி நிலத்தை  வாங்கி விட்டேன். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அங்கே பத்து புதுக்காணி பரப்பளவில் இலவசப் பள்ளியை கட்ட வேண்டும். அதன்பிறகு எனது திட்டத்தை படிப்படியாக நிறைவேற்ற வேண்டும் என்ற திட்டத்திலிருக்கிறேன்.

மாணவர்களுக்கு நீங்கள் வழிகாட்டுவது போல் உங்களுக்கு வழிகாட்டுவது யார்?

எனது ஆசான்கள்தான் எனக்கு வழிகாட்டிகள். எனது தமிழாசிரியரான முனைவர் பா. இறையரசன் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறார். எழுத்தேணி அறக்கட்டளையின் செயலாளராக இருக்கிறார். முதிய  அகவையிலும் இளைஞர் போல் பணியாற்றுபவர். எனது நண்பர் நாகேந்திரன் எனக்குத் தோள் கொடுக்கும் தோழன் மட்டுமில்லாமில் எனக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்கக் காரணமாக இருந்தவர்.  இவர் இந்த அறக்கட்டளையின் துணைத்தலைவராக இருக்கிறார்.  எனது மற்றுமொரு தமிழாசிரியரான பா. மதிவாணன் இந்த அறக்கட்டளையின்  அறிவுரைஞராக இருக்கிறார். என் மாணவர்கள் எனக்குத் தூண்களாக இருக்கின்றனர்.

     தமிழ்நாட்டில் இருக்கும் போதே பிறருக்கு உதவும் பண்பை வளர்த்துக் கொண்டு, திரைகடல் ஓடித் திரவியம் தேடி தமிழ்நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் இலவசமாகக் கல்விபயில செலவிட்டுக் கொண்டிருக்கும் தமிழாசிரியர் இளங்குமரனால் ஆசிரிய குலத்துக்கே பெருமை என்றால் அது மிகையல்ல. “நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை” எனும் ஔவையின் வாக்கு இவருக்கு உறுதியாய்ப் பொருந்தும் என மனத்தில் நினைத்தபடி இளங்குமரனிடமிருந்து விடைபெற்றோம்.

நன்றி : நக்கீரன் நந்தவனம்

பி.கு.:- படங்கள் இத்திட்டத்திற்கு உரியன  அல்ல. இணையப் பக்கங்களில் இருந்து இணைக்கப்பட்டவை. உரிய தளங்களுக்கு நன்றி.

ezhutheni01