[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) தொடர்ச்சி]

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ)

  புரவலர் அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களைத் தலைவராகவும் பேராசிரியரைச் செயலராகவும் கொண்ட திருவள்ளுவர் கழகம் அமைக்கப்பெற்றது. அண்ணலாரால் வள்ளுவர் பதிப்பகம் நிறுவப்பட்டுப் பேராசிரியரின் ‘திருக்குறள் எளிய பொழிப்புரை’, ‘எல்லோரும் இந்நாட்டரசர்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பின்னர், நூல் வெளியீட்டுப்பணி தொடர்ந்து, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, ‘பழந்தமிழ்’, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ முதலான நூல்களும் வெளியிடப்பட்டன.

 திருக்குறள் கழகம் மூலம் பேராசிரியர் திருக்குறள் சொற்பொழிவுகள் நடத்தியதற்குப் பெரிதும் வரவேற்பு இருந்தது. இது குறித்துப் பாராட்டிய தந்தை பெரியார், விடுதலையில் பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தார்.

புதுக்கோட்டைத் திருக்குறள் கழகம்

புதுக்கோட்டை – ஏப்பிரல் 4

  புதுக்கோட்டையில் திருக்குறள் கழகம் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களாக மக்கட்கு நல்ல முறையில் சிறந்ததோர் பணியாற்றி வருகின்றது. பேராசிரியர் சி. இலக்குவனார் எம்.ஏ., எம்.ஓ.எல்., திருக்குறள் கழகத்தின் செயலாளராக இருந்து பணியாற்றி வருகின்றார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் 8-30 மணிக்குத் தொடங்கி முறையாகக் குறள்வகுப்பு நடைபெற்றுவருகின்றது. நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெரியோர்களும் வந்து கேட்கின்றார்கள், மாலையில் 6-30 மணிக்குத் தொடங்கிச் சொற்பொழிவு நடைபெற்று வருகின்றது. ஒலிபெருக்கி அமைக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்காங்கு இருந்து சொற்பொழிவைக் கேட்கின்றனர். குறளிடத்தில் மக்களுக்கு ஆர்வம் உண்டாகி ஞாயிற்றுக்கிழமை வருவதை எதிர்பார்த்திருக்கின்றனர். இதுவரை பத்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

திருக்குறள் நெறி 2. திருக்குறளில் நாடு 3. அரசு

கண்கள் (கல்வி) 5. அமைச்சு 6. நண்பர் 7. பகைவர்

குடிமைப்பயிற்சி 9. காதல் வாழ்வு 10. உண்மைத்தொண்டர்

 இவ்வாறு தொடர்ச்சியாக ஞாயிறு தவறாமல் ஒலிபெருக்கியுடன் சொற்பொழிவுகள் ஆற்றியமை முற்றிலும் புதுமையாகும். இராமாயணம். பாரதம் போன்ற புராண நூல்களைத்தான் இதுவரை தொடர்ச்சியாகக் காலட்சேபம் செதுவந்துள்ளமை அறிவோம். ஒரு நீதிநூலைத் தொடர்ச்சியாகச் சொல்லுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கேட்பதும் என்றால் எங்கும் காணாத புதுமை என்றுதான் கூறுதல் வேண்டும்.

   14,15,16ஆம் நூற்றாண்டுகளில் மேலைநாடுகளில் கலைக்கழகங்கள் அமைத்து மக்களிடையே சொற்பொழிவுகள் ஆற்றிக் கலையறிவைப் பரப்பியதுபோல புதுக்கோட்டையில் கலை, இலக்கிய அறிவு பரப்பப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் குறளின்பால் ஆர்வம் கொண்டு குறள் கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்துவருகின்றனர். இதற்கு ஆதரவு கொடுத்துவருகின்றவர் திருவாளர் பி.ஏ. சுப்பிரமணிய(பிள்ளை) ஆவார். கல்விவளர்ச்சிக் கழகத்தின் வழியாகத் தாழ்த்தப்பட்டோர்க்கும் தொண்டு செய்து வருகின்றார்.

 வள்ளுவர் கழகப் பணிகள்பற்றிய இவ்விதழ்ச்சான்று, பேராசிரியர் இலக்குவனார் தாம் பணியாற்றிய நகரங்களில் எல்லாம் இலக்கியச் சொற்பொழிவுகளும் வகுப்புகளும் சிறப்பாக நடத்தியிருந்தமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இவ்வாறுதான் பேராசிரியர் இலக்குவனார் இலக்கியங்களை எளிய முறையில் விளக்கி அவை மக்கள் இலக்கியங்கள் என்பதை உணர்த்தி இலக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் போராளியின் கடமை அல்லவா?

   பேராசிரியருக்கு உறுதுணையாக இருந்த அண்ணலார் பு.அ.சுப்பிர மணியன் அவர்கள் பேராசிரியர் இலக்குவனார் குறித்துக் கூறுவன (வீ.முத்துச்சாமி : இலக்குவனார் ஆய்வுப்பண்பு):

“பேராசிரியர் இலக்குவனார் கூர்த்த அறிவு படைத்தவர்; முறையாக நூல்களைக் கற்றவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்; சிந்தனையாளர்; கருத்துக் களஞ்சியம் என்றால் மிகையாகாது.

 தமிழே அவர்மூச்சு ; தமிழுக்காக எத்தகைய தியாகமும் அவர் செய்யத் தயங்காதவர். சிறந்த தமிழ்க்காவலர்.

 அவர் குறிக்கோள் கொள்கை எல்லாம் தமிழ் வளர்ச்சியே.

 ஆயுள் முழுவதுமே சிறப்பாகத் தொண்டாற்றியவர்.”

(தொடரும்)

 – இலக்குவனார் திருவள்ளுவன்