enpaarvai_thirukkural

என்பார்வை: திசை காட்டும் திருக்குறள்

திருக்குறள் பண்டைய இலக்கியம். ஆனால் எப்போது படித்தாலும் இளமையாய் இருக்கிறது. கி.மு., கி.பி., என்பது எல்லாம் வரலாற்றிலிருந்து வயது சொல்லும் முயற்சியில் குத்தப்படும்
முத்திரைகள் தான். ஒருவகையில் 23 ஆம் புலிக்கேசிகளின், வாடகைக் புலவர்களின் வாய்க்கு வந்தது கூட வரலாறு தான். உண்மையில் வரலாற்றுக்குப் பிந்தைய என்ற வரையறைகளைக் கடந்து இயங்குகிறது மனித வாழ்வியலின் பயணமும் பட்டறிவும்.

படிநிலை வளர்ச்சி
திருக்குறள் ஒரு படைப்பிலக்கியமாகவோ பக்தி இலக்கியமாகவோ கருத்தை திணிக்கும் கசாய இலக்கியமாகவோ இல்லாமல் ஒரு பட்டறிவு இலக்கியமாக இருக்கிறது.
திருக்குறள் ஒரு தனிமனிதனின் குரல் அல்ல. ஓர் உயர்ந்த நாகரிகத்தின் ஒட்டுமொத்த தெளிவின் திரள். திருக்குறள் ஒரு படைப்பு முயற்சி அல்ல படிநிலை வளர்ச்சி. மிக உயர்ந்த மீமிசையே பூமிக்குக் குடையாக முடியும். மிக உயர்ந்த உன்னதமே உலகுக்கு கொடையாக முடியும். திருக்குறளை நாம் எதற்காக இன்றும் கொண்டாடுகிறோம். காரணம் திருக்குறள் இன்றும் தேவைப்படுகிறது. தலைகுனியச் செய்யும் தலைப்புச் செய்திகள். நாள்தோறும் வானிலை அறிக்கை போல வாசிக்கப்படுகிற வக்கிரங்கள். சிறைவாசலில் நின்று சிரித்துக் கையசைக்கும் சில்லறை மற்றும் தேசிய கயவர்கள். குற்றங்களை விடவும் கொடுமையாய் வலிக்கிறது, குற்ற உணர்வு முற்றிலும் அற்றுப்போன அவலநிலை. சுற்றும் உலகம் சுருங்கிவிட்டது. ஆனால் வீடும் வீதியும் விலகிச் செல்கிறது. பலவகையிலும் குழம்பிக் கிடக்கிறது வாழ்க்கை. இருந்தாலும் குழைத்துப் போட ஒரு மருந்து கையில் இருக்கிறது. இப்போதும் இது நாட்டு மருந்து. இந்த நாட்டு மருந்து இரண்டாயிரம் ஆண்டுகாலம் ஆன பின்னாலும் காலாவதி ஆகாத கைமருந்து. இது மருந்தாகித் தப்பா மரம் இல்லை. மானிடம் நிலைக்க இந்த மண்ணில் என்றோ முளைத்து இன்னும் தழைக்கும் அறம்.

திருக்குறள் பொதுமறை அல்ல உலகப்பொதுமுறை

ஏன் திருக்குறளை உலகப் பொதுமறை அல்லது தமிழ்மறை என்று சொல்கிறார்கள். தமிழில் மறைப்பதற்கு எதுவுமில்லை. பொது மறை என்றாலும் கூட எதிர்மறை தான். உண்மையில் பொதுமறை என்பதே பொருத்தமற்றது. பொதுவான எதுவும் மறையாக, அதாவது மறைவாக இருக்கமுடியாது. மறை என்ற சொல்லின் பொருளும் சொற்பொருள் ஆக்கமும் மறைதல், மறைத்தல், ஒளிதல், ஒளித்தல், கமுக்கம், இரகசியம் என்ற அடிப்படைகளில் உருவாகி நிலை பெற்றது. வெளிப்படையான, சமயச்சார்பற்ற திருக்குறளைப் பொதுமறை என்பதற்கு பதிலாக உலகப்பொதுமுறை என்று அழைப்பதே முறையாக இருக்கும். முறை என்பது அடைவு, நியமம். அறம் பொருள் இன்பம் என்ற மூன்று நிலைகளையும் முழுதாக உள்வாங்கி முறை செய்யக்கூடிய சொல் மறை அல்ல. எனவே திருக்குறளை உலகப்பொதுமுறை என அழைப்பதே பொருத்தம்.

திசைகாட்டும் கருவி: திசைகளின் தேர்வு தெளிவாய் இருந்தால் வழிகள் பிறக்கும்; வாசல்கள் திறக்கும். வழிகாட்டிகள் உடன் வருபவர்கள் அவர்கள் யோசிக்க விடுவதில்லை. ஆனால் திசைகாட்டும் கருவி தீர்க்கமானது. தெற்கு வடக்கைத் தெரிவிக்கும். தேர்ந்தெடுக்கவேண்டியது நாம்தான். திசை என்பது திக்கு. திருக்குறள் காட்டும் திசை தெளிவானது. தீர்க்கமானது.அறத்தின் திசையாகவும் திருக்குறள் உள்ளது. அறம் நோக்கமாகவும், பயன்பாடாகவும், வழிமுறையாகவும் இருக்கிறது. அறநோக்கம், அறவழி, அறப்பயன் அதுவே அறத்தை பொருளை, இன்பத்தை வழி நடத்துகிறது.அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடைபல்லக்கை மாந்தன் சுமக்க, அதில் இருந்து மாந்தன் செல்வது, அறநெறி ஆகாது என்கிறது குறள்.பொருளுக்கும் அறமே அடிப்படை செயல்வகை என்ற சொல்லாடலை மூன்று இடங்களில் திருவள்ளுவர் கையாளுகிறார். தெரிந்து செயல்வகை, வினை செயல்வகை, பொருள் செயல்வகை.

அறம் பொருள் இன்பம் என்ற முப்பரிணாமக் கோட்பாடுகளும் ஒன்றை ஒன்று சாந்தனவாய் சாத்திய ஒருங்குடையதாய் உள்ளன. இந்த மூன்றுக்கும் அடிப்படை நிபந்தனையாய் இருப்பது அறமே.
“நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்வானின்றி அமையாது ஒழுக்கு” என நீர்ப்பொருளாதாரத்தை உலகிற்கே முதலில் அறிமுகப்படுத்தியது திருக்குறள்தான். வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் குறள் தெளிவுபடுத்துகிறது. வள்ளுவரின் அறம், சமயம் சாராத அறம். இடம், காலம், வலிமை சார்ந்த நடைமுறை அறம். மனித வளத்தில் முதலீடு செய்யும் முதல் அறநூல். திருக்குறள் காட்டும் அடிப்படைத் திசை அறம். அந்த அடிப்படைக்கு அடிப்படையாய் அடையாளம் பெறுவது மனச்சான்று. அச்சம் சார்ந்த அறம் அறமல்ல. பயன், புகழ் நோக்கும் அறம் உண்மையில் அறம் அல்ல. மனநலம் காக்க மருந்தொன்று உண்டு என்றால் அது தினம் ஒரு திருக்குறள் படித்து உணர்வது தான்.

BalakrishnanI.A.S.,oddissa– பாலகிருட்டிணன் இ.ஆ.ப.,  கூடுதல் தலைமைச் செயலர்(நிதித்துறை),ரிசா

bali909@gmail.com

http://www.dinamalar.com/news_detail.asp?id=1258217