(ஆனி 20, 2046 / சூலை 05, 2015 தொடர்ச்சி)

thirukkural_vanigaviyal013

16.0. வணிகவியல் வரைவிலக்கணம்

16.1. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

     பிறவும் தமபோல் செயின்         [0120] .

      வணிகத்திற்கு உரிய இலக்கணத்தை கடைப்பிடித்துப் பிறர் பொருளையும் தம் பொருள் போல மதித்து வணிகம் செய்வார் வணிகம், பெருகும்; பணப்பயனும் பெருகும்.

17.0. இத் திருக்குறட் பா இவ் அதிகாரத்தில் ஏன்….?

நடுவு நிலைமை அதிகாரத்தில் 0120 — ஆவது திருக்குறட் பாவைத் திருவள்ளுவர் ஏன் அமைத்தார்…..?      

நடுவு நிலைமைக் கோட்பாடு வணிகத்தின் உயிர்க் கோட்பாடு; அடிப்படைக் கோட்பாடு. துலாக்கோல் / தராசு நடுவு நிலமையின் குறியீடு [SYMBOL OF IMPARTIALITY].

     ஒரு தட்டில் வைரக் கல்லையும் மற்றொரு தட்டில் வெறுங்கல்லை வைத்து நிறுத்தாலும் துலாக்கோல் சமன்மை நோக்கோடு பார்க்கும்; ஒரு பாற் கோடாது; இரு தட்டுக்களையும் சமமாகவே மதிக்கும். இதைத் திருவள்ளுவப் பெருந்தகையார்,

        சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்[து]ஒருபால்

         கோடாமை சான்றோர்க்[கு] அணி.     [0118]

என்கிறார்.

   துலாக்கோல் முதலில், தான் சமநிலையில் அமைந்திருக்கும்; பின்னர்த் தன்னிடம் வைக்கப்பட்ட பொருள்களின் எடையை மிகச் துல்லியமாகக் காட்டும். அது எப் பொருளின் பக்கமும் சாயாது.

     அதுபோலச் சான்றோர்களும் ஒரு பக்கம் சாயாமல் தாங்களும் சம நிலையில் அமைந்திருப்பார்கள்; ஒரு பக்கம் சாயமாட்டார்கள்.

     நடுவு நிலைமைக்குக் குறியீடாக அமைந்த தராசுதான் வணிகத்தின் முதன்மைக் கருவி – அடிப்படைக் கருவி. அந்தத் தராசுபோல் வணிகர் தம்மையும் வாடிக்கையாளரையும் சமமாகவே மதிக்க வேண்டும். எனவே அது வணிகக் குறியீடாக இருக்கிறது. இவற்றையெல்லாம் நுண்ணாய்வு செய்த நல்லறிஞர் திருவள்ளுவர்,

        வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

         பிறவும் தமபோல் செயின்     [0120]

   எனும் இத் திருக்குறட் பாவை நடுவு நிலைமை அதிகாரத்தில் அமைத்தார்.

18.0. வணிகவியல் நேர்மை மேலாண்மை            

18.1. நல்லதே வெல்லும்

      நல்லவை எல்லாஅம் தீயஆம்; தீயவும்

         நல்லஆம் செல்வம் செயற்கு.     [0375]

         பொருட்செல்வத்தைத் திரட்டும்போது, நல்லவை எல்லாம் தீயவை ஆகும்; தீயவை எல்லாம் நல்லவை ஆகும். இவ்வாறு நடத்தல் உலகியல்பு.

        இவ் உலகியல்போடு முரண்பட வேண்டும்; இதன் எதிர்நிலையோடு உடன்பட வேண்டும். அதாவது எந்தச் சூழலிலும் அறம் பிறழா வழியில் பொருள் திரட்டுதல் வேண்டும். இது வணிகர்க்கும் பொருந்தும். வணிக நேர்மையே வணிகத்தை வளர்க்கும்; வாழவைக்கும்; வெல்லவைக்கும்.

18.2. தீதின்றி வரும் பொருள்

         அறம்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

         தீ[து]இன்றி வந்த பொருள்.          [0754]

   பொருள் தேடும் பொழுது அல்வழிகளை விடுத்து, நல்வழிகளை மட்டும் எடுத்து ஆராய்ந்து, அவற்றின் வாயிலாகப் பொருள் தேடின், அப் பொருளே அறத்தையும் தரும்; இன்பத்தையும் தரும்.

   நல்வழியில் வருபொருள் என்றும் நிலைக்கும்;

   அல்வழியில் வருபொருள் அழியும்; அழிக்கும்.

18.3. நற்குடிப் பிறந்தாரைக் கோடிகள் கெடுக்காது

        அடுக்கிய கோடி பெறினும், குடிப்பிறந்தார்

         குன்றுவ செய்தல் இலர்.            [0954]    

   கோடி கோடியாகப் பொருள் பெற்றாலும், நல்ல வணிகக் குடியில் பிறந்தவர் தமக்கும் தம் குடிக்கும் குறைவும் இழிவும் தரும் செயல்களை ஒருபோதும் செய்யார்.

18.4. அல்வழியில் வருபொருள் எல்லாம் நிலைக்காது

         அன்[பு]ஒரீஇ தன்செற்[று] அறம்நோக்கா[து] ஈட்டிய

           ஒண்பொருள் கொள்வார் பிறர்.         [1009]      

      அன்பை நீக்கித், தன்னையும் வருத்திக் கொண்டு, அறத்தையும் ஆராயாது தேடிச் சேர்த்த பொருட்செல்வத்தைப் பிறர் கொள்ளையடிப்பர்.

           நுகர்வோரிடம் அன்பு காட்டி, அறவழியில் நின்று, இலாபமாகத் திரட்டும் பொருட்செல்வமே வணிகரிடம் நிலைக்கும். புகழைக் கொடுக்கும்.

19.0. நிதி மேலாண்மை [FINANCIAL MANAGEMENT]

        [கு]ஆறு அள[வு]இட்டி[து] ஆயினும் கே[டு]இல்லை

         போ[கு]ஆறு அகலாக் கடை               [0478]

         பொருள் செலவாகும் வழி பெரிதாக இல்லாத போது, பொருள் வரும்வழி மிகவும் சிறிதாக இருந்தாலும் கேடு இல்லை.

      வரவுக்குள் செலவு என்பதை இத் திருக்குறட் பா விளக்குகிறது. வணிகர் இதை மனங்கொண்டு செயல்படல் வேண்டும்.

 

20.0. சொல் ஆற்றல்

        விரைந்து தொழில்கேட்கும் ஞாலம், நிரந்[து]இனிது

         சொல்லுதல் வல்லார்ப் பெறின்.             [0648]

         நிரலாகவும்  / வரிசையாகவும் சொல்லும் வல்லமை பெற்றவராக ஒருவர் இருந்தால், அவர் சொல்வதை மக்கள் எல்லாரும் விரைந்து கேட்பர். அதன்படியும் நடப்பர்.

        நுகர்வோரிடம் வணிகர் பொருள்களை விற்கும்போது, அவர் மனநிறைவு கொள்ளும்படி – விரும்பி வாங்கும்படி சொல்லும் வகையில் [EFFECTIVE COMMUNICATION] சொல்ல வேண்டும்.

21.0. பொறை உடைமை

            நிறைஉடைமை நீங்காமை வேண்டின், பொறைஉடைமை

             போற்றி ஒழுகப் படும்.                                    [0154]

   மனநிறைவு என்னும் பேரியல்பு ஒருவரிடம் நீங்காமல் நிரந்தரமாகத் தங்க வேண்டுமானால், பொறுமை என்னும் பெரும்பண்பை அவர் போற்ற வேண்டும்; அதையும் பிறழாமல் என்றும் ஆற்ற வேண்டும்.

  பொறுமையுற்றவர்கள், பொறுமையற்றவர்கள் என எப்படிப்பட்டவர்கள் கடைக்கு வந்தாலும், வணிகர் பொறுமையைக் கைவிடாமல், சமாளிக்க வேண்டும்.

          பொருள்ஆட்சி போற்றாதார்க்[கு] இல்லை [0252]     .

22.0. சோம்பல் இருந்தால் செய்தொழில் சாம்பல்!

          மடிஉளாள் மாமுகடி என்ப; மடிஇலான்

           தாள் உளாள் தாமரையி னாள்.   [0617]

           சோம்பல் உள்ளவன் மடியில் மூதேவி தங்கியிருப்பாள்; சோம்பல் இல்லாதவன் முயற்சியில் சீதேவி தங்கியிருப்பாள்.

        வணிகரிடம் சோம்பல் தங்கிவிட்டால், வணிகமும் நோய்வாய்ப்படும்; படுத்துவிடும்; எழாது; இறுதியில் மரணம் அடையும்.   சுறுசுறுப்பு வணிகரிடம் இருத்தால்தான், வணிகம் எழுந்து நிற்கும்; நடக்கும்; ஓடும்; வாகை சூடும்.

23.0. சிரிப்பு வணிகத்தின் சிறப்பு

        நகல்வல்லல் அல்லார்க்கு மாஇரு ஞாலம்

           பகலும்பால் பட்[டு]அன்[று] இருள்.       [0999]

        சிரித்துப் பேசிப் பழகும் வல்லமை இல்லாதவர்க்கு, இம் மிகப் பெரிய உலகத்தில் அமையும் பகல் பொழுதும், இரவுப் பொழுதே.

      இக் கருத்தியலை வணிகர்களும் கடைப்பிடித்தால், வாடிக்கையாளார்கள் பெருகுவர்; வணிகம் பெருகும்; பொருளும் பெருகும். வணிக நிறுவனங்களில் எப்போதும் வெளிச்சம் இருக்கும்.

24.0. வாய்மையும் சொல்லில் தூய்மையும்

24.1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்!   [0297]

      என்றும் எதற்காகவும் யாரிடமும் எச் சூழலிலும் மனத்தாலும்

      பொய்த்தல் இல்லாது நடத்தலே அறம்.

24.2. மனத்தொடு வாய்மை மொழி !    [0295]

      சொல்லும் சொல் வாய்மை சார்ந்ததாகவும், அது உள்மனத்திலிருந்து

     வெளிவருவதாகவும் இருக்க வேண்டும்.

வணிக நடவடிக்கைகளிலும் பொய்த்தல் இருத்தல் கூடாது.

25.0. நிறைநிலை

     வணிகவியல் மேலாண்மைக் கோட்பாட்டுக் கூறுகள்

25,1. எவ் வணிகமும் எத் தொழிலும் எப் பணியும் உயர்வானதே.

25.2. எக் காலத்தில் எவ் வணிகம் வெல்லும் என ஆராய்ந்து தேர்தல்

25.3. எதையும் நீடு நினைந்து ஆழ ஆராய்ந்து தேர்ந்து எடுத்தல்

25.4. ஆய்வுக்குப்பின்   அதற்குத் தேவையானவற்றை ஆய்ந்து முடிவு எடுத்தல்

25.5. வணிக முதலீட்டிற்குப் கைப்பொருளே பாதுகாப்பானாது

25.6. வணிகம் பற்றிய பட்டறிவு இல்லாதபோது, அது பற்றி வல்லுநரிடம்

   கலந்து கருத்து அறிந்து செய்தல்

25.7 தம்மால் முடியாதவற்றை வல்லுநர்களைக் கொண்டு செய்வித்தல்

25.8. திறனும் தகுதியும் மிக்க பணியாளர்களை ஆய்ந்து தேர்ந்து எடுத்தல்

25.9. உறவினர், நண்பர், அன்புக்குரியவர் என்பதற்காக யாரையும்

     தேர்வு செய்யக் கூடாது.

25.10. அறம்   சார்ந்த – வணிக வரைவிலக்கணம் சார்ந்த நேர்மையான

     நடுநிலையான வணிகத்தைச் செய்தால், அவ் வணிகமே மறைமுக

      விளம்பரமாக அமையும்; வெற்றியைக் கொண்டுவந்து முன்நிறுத்தும்.

25.11. தம் பொருளும் நுகர்வோர் பொருளும் சமம் என மதித்தல்

25.12. திறன்மிகு நிதி மேலாண்மையை மேற்கொள்ளல்

25.13. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் இனிதுறப் பேசுதல்

25.14. எச் சூழலிலும் பொறுமையைக் கடைப்பிடித்தல்

25.15. நலமான போட்டி இருக்கலாம்; அது   பொறாமையாக   இருக்கக்   கூடாது.

25.16. சோம்பல் இன்மையாதல்; சுறுசுறுப்பு உண்மையாதல்

25.17. நுகர்வோரிடம் சிரித்துப் பேசிப் பழகும் பண்பு

25.18. பொய்த்தல் சிறிதும் இல்லாமை

25.19. வருவாய், இழப்பு என எதிலும் இயல்பு நிலையைக்   கடைப்பிடித்தல்

25.20.   மேற்குறிப்பிடப்பட்ட   வணிகவியல் மேலாண்மைக்      கோட்பாட்டுக்  கூறுகளை  எல்லாம் கடைப்பிடித்தால், வணிகம் ஓங்கி வளரும்; விரைவில் வெல்லும்; பொருளை அள்ளும்; பெயரைச் சொல்லும்.

(நிறைவு)

பேராசிரியர் வெ.அரங்கராசன்

ve.arangarasan03