(திருக்குறள் அறுசொல் உரை : 122. கனவு நிலை உரைத்தல் தொடர்ச்சி)

 

திருக்குறள் அறுசொல் உரை

  1. காமத்துப் பால்

   15. கற்பு இயல்

123.  பொழுது கண்டு இரங்கல்      

பிரிந்த காதலர், துயர்மாலைப்

பொழுது கண்டு மனம்வருந்தல்.


(01-10 தலைவி சொல்லியவை)

  1. மாலையோ அல்லை; மணந்தார் உயிர்உண்ணும்

      வேலைநீ; வாழி! பொழுது.

மாலையே நீ பொழுதே இல்லை;

பிரிந்தார் உயிர்குடிக்கும் கூர்வேல்.

 

  1. புன்கண்ணை வாழி! மருள்மாலை; எம்கேள்போல்,

      வன்கண்ண தோநின் துணை?

மாலையே!  நீஏன் வருந்துகிறாய்?

உனது துணைவனும் கொடியானோ?

 

  1. பனிஅரும்பிப், பைதல்கொள் மாலை, துனிஅரும்பித்,

      துன்பம் வளர வரின்.

நடுங்கவைக்கும் மாலைப் பொழுது,

வெறுப்பும், துயரும் மிகத் தரும்.

 

  1. காதலர் இல்வழி, மாலை, கொலைக்களத்(து),

      ஏதிலர் போல வரும்.

காதலர் இல்லாப்போது, மாலைப்

போது கொலையாளிபோல் வரும்.

 

  1. காலைக்குச் செய்தநன்(று) என்கொல்? எவன்கொல்,யான்

      மாலைக்குச் செய்த பகை?

     காலைக்குச் செய்நன்மைதான் என்ன?

மாலைக்குச் செய்தீமைதான் என்ன?

 

  1. மாலைநோய் செய்தல், மணந்தார் அகலாத

      காலை, அறிந்த(து) இலேன்.

மாலை துயர்செய்யும் என்பதைக்,

காதலர் பிரியாப்போது அறியேன்.

 

  1. காலை அரும்பிப், பகல்எல்லாம் போ(து)ஆகி,

      மாலை மலரும்இந் நோய்.

காதல்நோய், காலையில் அரும்பு;

பகலில் மொட்டு; மாலையில் மலர்.

 

  1. அழல்போலும் மாலைக்குத் தூ(து)ஆகி, ஆயன்

      குழல்போலும் கொல்லும் படை.

என்னைக் கொல்லும் புல்லாங்குழல்இசை,

தீப்போன்ற மாலைக்குத் தூது.

 

  1. பதிமருண்டு பைதல் உழக்கும், மதிமருண்டு

      மாலை படர்தரும் போழ்து.

நிலவோடு மாலைப் போது

படரும்போது ஊரே மதிமயங்கும்.

 

  1. பொருள்மாலை யாளரை உள்ளி, மருள்மாலை

      மாயும்,என் மாயா உயிர்.

பொருள்ஈட்டப் பிரிந்தாரை நினைந்து,

மயக்கும் மாலையில் உயிர்போம்.

 

பேரா.வெ.அரங்கராசன்