(திருக்குறள் அறுசொல் உரை; 124. உறுப்பு நலன் அழிதல் தொடர்ச்சி)

திருக்குறள் அறுசொல் உரை

  1. காமத்துப் பால்
  1. கற்பு இயல்

    125. நெஞ்சொடு கிளத்தல்

 

பிரிவுத்துயர் மிகுதியைத் தலைவி,

தனது நெஞ்சுக்குச் சொல்லுதல்.

 

(01-10 தலைவி சொல்லியவை)

  1. நினைத்(து)ஒன்று சொல்லாயோ? நெஞ்சே! எனைத்(து)ஒன்றும்,

      எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

நெஞ்சே! என்துயரைத் தீர்க்கின்ற

மருந்துஒன்றைச் சிந்தித்துச் சொல்லாயோ?

 

  1. காதல் அவர்இலர் ஆக,நீ நோவது,

      பேதைமை வாழிய!என் நெஞ்சு.

நெஞ்சே! காதலர்க்குக் காதல்தான்

இல்லையே! நீஏன் வருந்துகிறாய்?

 

  1. இருந்(து)உள்ளி என்பரிதல்? நெஞ்சே! பரிந்(து)உள்ளல்,

      பைதல்நோய் செய்தார்கண் இல்.

நெஞ்சே! பரிவுஅற்றுத் துயர்தந்தாரை

நினைந்து வருந்துவது ஏன்?

 

  1. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவை,என்னைத்

      தின்னும், அவர்க்காணல் உற்று.

நெஞ்சே! காதலரைக் காணத்

துடிக்கும் கண்களையும் அழைத்துச்செல்.

 

  1. செற்றார் எனக்,கை விடல்உண்டோ? நெஞ்சே!யாம்

      உற்(று)ஆல் உறாஅ தவர்.

நெஞ்சே!நாம் விரும்பியும், நம்மை

விரும்பாதார் என்பதால், கைவிடலாமோ?

 

  1. கலந்(து)உணர்த்தும் காதலர்க் கண்டால், புலந்(து)உணராய்;

      பொய்க்காய்வு காய்தி,என் நெஞ்சு.

நெஞ்சே! கலப்பில் வெறுக்காய்.

இப்போது காதலர்மேல் பொய்வெறுப்புத்தானே.

 

  1. காமம் விடு;ஒன்றோ, நாண்விடு; நல்நெஞ்சே!

      யானோ, பொறேன்இவ் இரண்டு.

நெஞ்சே! காதல்விடு, அல்லது

வெட்கம்விடு; இரண்டையும் தாங்கேன்.

 

  1. ”பரிந்தவர் நல்கார்”என்(று) ஏங்கிப், பிரிந்தவர்

      பின்செல்வாய், பேதைஎன் நெஞ்சு.

நெஞ்சே! “பிரிந்தார் அருளார்”

என்றுதானே, அவர்பின் செல்கிறாய்?

 

  1. உள்ளத்தார் காத லவர்ஆக, உள்ளிநீ

      யார்உழைச் சேறிஎன் நெஞ்சு?

நெஞ்சே! காதலரோ உன்னுள்ளே;

யாரிடம் செல்ல நினைக்கிறாய்?

 

  1. துன்னாத் துறந்தாரை, நெஞ்சத்(து) உடையேம்ஆ,

      இன்னும் இழத்தும் கவின்.

நெஞ்சே! பிரிந்தார் மனத்துள்ளே

இருப்பதால், இன்னும் அழகுஇழப்பு

 

பேரா.வெ.அரங்கராசன்