திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 017. அழுக்காறாமை
(அதிகாரம் 016. பொறை உடைமை தொடர்ச்சி)
01. அறத்துப் பால்
02.இல்லற இயல்
அதிகாரம் 017. அழுக்காறாமை
பிறரது வளநலங்களைப் பார்த்துப்
பொறாமை கொள்ளாத அறப்பண்பு..
- ஒழுக்(கு)ஆ(று)ஆக் கொள்க, ஒருவன்,தன் நெஞ்சத்(து),
அழுக்கா(று) இலாத இயல்பு.
மனத்தாலும், பொறாமை இல்லாத,
இயல்பை ஒழுக்கநெறியாக் கொள்க.
- விழுப்பேற்றின் அஃ(து)ஒப்ப(து) இல்லை,யார் மாட்டும்,
அழுக்காற்றின் அன்மை பெறின்.
யாரிடத்தும், பொறாமை கொள்ளாமையே,
ஈ[டு]இல்லாத சிறப்புப் பே[று]ஆகும்.
- அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான், பிறன்ஆக்கம்,
பேணா(து) அழுக்கறுப் பான்.
வளர்ச்சியை வேண்டாதானே, மற்றவர்
வளர்ச்சிமீது பொறாமை வளர்ப்பான்.
- அழுக்காற்றின் அல்லவை செய்யார், இழுக்(கு)ஆற்றின்,
ஏதம் படுபாக்(கு) அறிந்து.
பொறாமை தருதீமைகளை அறிந்தார்
பொறாமையால் தீமைகள் செய்யார்.
- அழுக்கா(று) உடையார்க்(கு) அதுசாலும், ஒன்னார்,
வழுக்கியும் கே(டு)ஈன் பது.
பொறாமையார் கெடுதற்குப் பொறாமையே
போதும்; வேறுபகையே வேண்டாம்.
- கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம், உடுப்பதூஉம்,
உண்பதூஉம் இன்றிக், கெடும்.
கொடுப்பதைத் தடுப்பானின், உறவார்க்கும்,
உணவும், உடையும் கிடைக்கா.
- அவ்வித்(து) அழுக்கா(று) உடையானைச், செய்யவள்,
தவ்வையைக் காட்டி விடும்.
சீதேவி, பொறாமை உடையானை
மூதேவியிடம் காட்டிக் கொடுப்பாள்.
- “அழுக்கா(று)” எனஒரு பாவி, திருச்செற்றுத்,
தீஉழி உய்த்து விடும்.
“பொறாமைப் பாவி” செல்வத்தையும்
அழிக்கும்; தீவழியிலும் செலுத்தும்.
- அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான்
கேடும், நினைக்கப் படும்.
பொறாமையான் செல்வமும், பொறாமை
மறந்தான் வறுமையும், மறையும்.
- அழுக்கற்(று) அகன்றாரும் இல்லை;அஃ(து) இல்லார்,
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.
பொறாமையால் வளர்ந்தாரும் இல்லை;
பொறுமையால் தளர்ந்தாரும் இல்லை.
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply