(அதிகாரம் 017. அழுக்காறாமை தொடர்ச்சி)

arusolurai_munattai01

01அறத்துப் பால்

02.இல்லற இயல்

அதிகாரம் 018. வெஃகாமை

 

எந்தக் காரணத்தாலும் பிறரது

பொருள்களைப் பறிக்க விரும்பாமை.

 

  1. நடு(வு)இன்றி நல்பொருள் வெஃகின், குடிபொன்றிக்,

     குற்றமும் ஆங்கே தரும்.

 

       பிறரது பொருளைப் பறிக்க

       விரும்பின், குடிகெடும்; குற்றம்மிகும்.

 

  1. படுபயன் வெஃகிப், பழிப்படுவ செய்யார்,

     நடுஅன்மை நாணு பவர்

 

        வருபயன் விரும்பிப், பழிப்புச்

       செயல்களை நடுநிலையார் செய்யார்.

 

  1. சிற்றின்பம் வெஃகி, அறன்அல்ல செய்யாரே,

     மற்(று)இன்பம் வேண்டு பவர்.

 

       பேரின்பம் விரும்புவார், அறன்மறந்து

       சிற்றின்பச் செயல்களைச் செய்யார்.

 

  1. இலம்என்று, வெஃகுதல் செய்யார், புலம்வென்ற

     புன்மைஇல் காட்சி யவர்.

 

       ஐந்து புலன்களையும் வென்றார்,

       ஏழ்மையிலும் பிறர்பொருளை விரும்பார்.

 

  1. அஃகி அகன்ற அறி(வு),என்ஆம்? யார்மாட்டும்,

     வெஃகி வெறிய செயின்.

 

       கூர்அறிவார், பிறரது பொருள்களை

       விரும்பும் வெறிச்செயல் செய்யார்.

 

  1. அருள்வெஃகி, ஆற்றின்கண் நின்றான், பொருள்வெஃகிப்,

     பொல்லாமை சூழக் கெடும்.

 

       பிறரது பொருள்களைப் பறிக்க

       விரும்பும் அருளாளனும், கெடுவான்.

 

  1. வேண்டற்க, வெஃகிஆம் ஆக்கம், விளைவயின்,

     மாண்டற்(கு) அரி(து)ஆம், பயன்.

 

       பின்விளை பயன்கள் இழிவாதலின்

       பிறர்தம் பொருள்களை விரும்பாதே.  

 

  1. அஃகாமை, செல்வத்திற்(கு) யாது?எனின், வெஃகாமை

     வேண்டும், பிறன்கைப் பொருள்.

 

       குறையாத செல்வத்தை விரும்பின்,

       பிறரது செல்வத்தை விரும்பாதே.

 

  1. அறன்அறிந்து, வெஃகா அறி(வு)உடையார்ச் சேரும்,

     திறன்அறிந்(து), ஆங்கே திரு.

 

       பிறரது பொருள்களை விரும்பா

       அறத்தாரிடமே செல்வமும் சேரும்.  

 

  1. இறல்ஈனும், எண்ணாது வெஃகின்; விறல்ஈனும்,

     வேண்டாமை என்னும் செருக்கு.

 

      பிறரது பொருள்மேல் விருப்பம்,

       அழிவு; விரும்பாமை, பெருவெற்றி.

 – பேராசிரியர் வெ. அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன்

 

 

(அதிகாரம் 019. புறம் கூறாமை)