(அதிகாரம் 021. தீ வினை அச்சம் தொடர்ச்சி)

arusolurai_munattai01
01. அறத்துப் பால்
02. இல்லற இயல்
அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் 

பொதுநல உணர்வோடு, இருப்பதைப்
பகிர்ந்து கொடுத்துதவும் பேர்அறம்.

 211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு),
என்ஆற்றும் கொல்லோ உலகு?

எதிர்பார்ப்பைக் கருதாத மழைக்கு,
இவ்உலகு, எந்நன்றி செய்யுமோ?

 212. தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம், தக்கார்க்கு,
வேளாண்மை செய்தல் பொருட்டு.

உழைத்துப் பெற்ற பொருள்எல்லாம்,
தகுதியர்க்கு எல்லாம் உதவவே.

 213. புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல்அரிதே,
ஒப்புரவின் நல்ல பிற.

பொதுக் கொடையைவிடப் பெரிய
நல்அறம் எவ்வுலகிலும் இல்லை.

214. ஒத்த(து) அறிவான் உயிர்வாழ்வான், மற்றையான்,
செத்தாருள் வைக்கப் படும்.

உலகிற்கு ஒத்ததை உணர்வாரே,
உயிர்வாழ்வார்; மற்றயார் செத்தாரே.

 215. ஊருணி நீர்நிறைந்(து) அற்றே, உல(கு)அவாம்,
பேர்அறி வாளன் திரு.

ஊருணிபோல், பேர்அறிவர் செல்வமும்,
எல்லோர்க்கும் எக்கணமும் பயன்படும்.  

 216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்(து)அற்(று)ஆல், செல்வம்,
 நயன்உடை யான்கண் படின்.

பொதுநலத்தார் செல்வமும், உள்ளூரில்  
பழம்நிறை மரம்போல் பயன்படும்.

 217. மருந்(து)ஆகித் தப்பா மரத்(து)அற்(று)ஆல், செல்வம்,
பெருந்தகை யான்கண் படின்.

பெரும்தன்மையர் செல்வமும், மருந்து
மரம்போல் தப்பாது பயன்படும்.

218. இடன்இல் பருவத்தும், ஒப்புரவிற்(கு) ஒல்கார்,         
கடன்அறி காட்சி யவர்.

கடமை அறிவார், வாய்ப்புஇலாக்
காலத்தும் பொதுநலத்தில் குறையார்.

 219. நயன்உடையான், நல்கூர்ந்தான் ஆதல், செயும்நீர,
செய்யா(து) அமைகலா ஆறு.

பொதுக்கொடை முடியாத நிலையே,
பொதுநலத்தார்க்கு, வறுமை நிலை.

 220. ஒப்புர வினால்வரும் கே(டு)எனின், அஃ[து]ஒருவன்,
விற்றுக்கோள் தக்க(து) உடைத்து.

பொதுக்கொடையால் கேடு வரினும்,
உன்னை விற்றாவது பெற்றுக்கொள்.  

 – பேராசிரியர் வெ. அரங்கராசன்

ve.arangarasan03

(அதிகாரம் 023. ஈகை)