(அதிகாரம் 024. புகழ் தொடர்ச்சி)

kuralarusolurai_mun attai

01. அறத்துப் பால்

03. துறவற இயல் 

அதிகாரம் 025. அருள் உடைமை

 

தொடர்பே இல்லா உயிர்களிடத்தும்,

தொடர்ந்து படர்ந்திடும் முதிர்அன்பு.

 

  1. அருள்செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருள்செல்வம்,

     பூரியார் கண்ணும் உள.

 

அருள்செல்வமே உயர்பெரும் செல்வம்;

       பொருள்செல்வம், கீழோரிடமும் உண்டு.

 

  1. நல்ஆற்றான் நாடி, அருள்ஆள்க; பல்ஆற்றான்

     தேரினும், அஃதே துணை.

 

   எவ்வழியில் ஆய்ந்தாலும் துணைஆகும்

       அருளை, நல்வழியில் ஆளுக..

 

  1. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்(கு) இல்லை, இருள்சேர்ந்த

     இன்னா உலகம் புகல்.

 

இருள்நிறை துயர்உலகம் புகுதல்,

       அருள்நிறை நெஞ்சர்க்கு இல்லை.

 

  1. மன்உயிர் ஓம்பி, அருள்ஆள்வாற்(கு) இல்என்ப,

     தன்உயிர் அஞ்சும் வினை.

 

       உயிர்களைப் பாதுகாத்[து] அருள்செய்வார்

       உயிர்பற்றி எப்பொழுதும் அஞ்சார்.

 

  1. அல்லல், அருள்ஆள்வார்க்(கு) இல்லை; வளிவழங்கும்

     மல்லல்மா ஞாலம் கரி.

 

அருளாளர்க்குத் துன்பமே இல்லை;

       அதற்[கு]இவ் உலகமே சான்று.

 

  1. பொருள்நீங்கிப், பொச்சாந்தார் என்ப, அருள்நீங்கி,

   அல்லவை செய்(து)ஒழுகு வார்.

  அருள்விலக்கித் தீயவை செய்வார்,

       அருள்பொருள் மறந்தார் ஆவார்.

 

  1. அருள்இல்லார்க்(கு), அவ்உலகம் இல்லை; பொருள்இல்லார்க்(கு),

   இவ்உலகம் இல்ஆகி ஆங்கு.

 

        விண்உல[கு] அருள்இல்லார்க்[கு] இல்லை;

       மண்உலகு பொருள்இல்லார்க்[கு] இல்லை.

 

  1. பொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருள்அற்றார்

    அற்றார்,மற்(று) ஆதல் அரிது.

 

பொருள்இழந்தார், மீண்டும் பெறுவார்;

       அருள்இழந்தார் மீண்டும் பெறார்.

 

  1. தெருளாதான் மெய்ப்பொருள் கண்(டு)அற்(று)ஆல், தேரின்,

   அருளாதான் செய்யும் அறம்.

 

தெளி[வு]இல்லான், உண்மைப் பொருளைக்

       காணல்போல் அருள்இல்லான் செய்அறம்.

 

  1. வலியார்முன் தன்னை நினைக்க, தான்தன்னின்,

     மெலியார்மேல் செல்லும் இடத்து.

 

  மெலியார்முன் நிற்கும் பொழுது,

       வலியார்முன் நிற்பதுபோல் நினைக்க.

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

ve.arangarasan

(அதிகாரம் 026. புலால் மறுத்தல்)