திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 034. நிலையாமை
(அதிகாரம் 033. கொல்லாமை தொடர்ச்சி)
01.அறத்துப் பால்
02.துறவற இயல்
அதிகாரம் 034. நிலையாமை
‘வாழ்வும், செல்வமும், நிரந்தரம்
அல்ல’என ஆராய்ந்தும் உணர்தல்.
- நில்லாத வற்றை, “நிலையின” என்(று),உணரும்
புல்அறி(வு) ஆண்மை கடை.
நிலைக்காத அவற்றை, ”நிலைக்கும்”என
உணரும் அறிவு, கீழ்அறிவு.
- கூத்தாட்(டு) அவைக்குழாத்(து) அற்றே, பெரும்செல்வம்
போக்கும், அதுவிளிந்(து) அற்று.
நாடகத்தைப் பார்க்க வருவார்,
போவார்போல், செல்வமும் வரும்;போம்.
- அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்,
அற்குப ஆங்கே செயல்.
நிலைஇல்லாச் செல்வம் பெற்றபோதே,
நிலைக்கும் அறச்செயல்கள் செய்க.
- நாள்என ஒன்றுபோல் காட்டி, உயிர்ஈரும்
வாள்அது, உணர்வார்ப் பெறின்.
நிலைப்பனபோல் தோன்றும் நாள்கள்
அவைதாம் உயிர்அறுக்கும் வாள்கள். .
- நாச்செற்று, விக்குள்மேல் வாராமுன், அறவினை
மேற்சென்று செய்யப் படும்.
சாகுநாள் வருமுன்பே, சாகாஅறச்
செயல்களை உயிர்ப்புடன் செய்க.
- ”நெருநல் உளன்ஒருவன், இன்(று)இல்லை” என்னும்,
பெருமை உடைத்(து),இவ் உலகு.
“நேற்[று] இருந்தவன், இன்[று]இல்லை”
ஞாலத்தின் பெருமையே இதுதான்.
- ஒருபொழுதும், வாழ்வ(து) அறியார்; கருதுப,
கோடியும் அல்ல, பிற.
வாழும்நாள் அறியார்; ஆசைப்படுவதோ,
கோடிகள் அல்ல, அதற்கும்மேல்.
- குடம்பை தனத்(து)ஒழியப், புள்பறந்(து) அற்றே,
உடம்பொ(டு) உயிர்இடை நட்பு.
கூடுவிட்டுப் பறக்கும் பறவைபோல்,
உடல்விட்[டு] உயிரும் பறக்கும்.
- உறங்குவது போலும், சாக்கா(டு); உறங்கி
விழிப்பது போலும், பிறப்பு.
தூங்குவது போன்றது, இறப்பு;
விழிப்பது போன்றது, பிறப்பு..
- புக்கில் அமைந்(து) இன்று கொல்லோ? உடம்பினுள்,
துச்சில் இருந்த உயிர்க்கு.
உடலில் தங்கிச்செல்லும் உயிர்க்கு,
நிரந்தர வீடே இல்லையோ?
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply