(அதிகாரம் 034. நிலையாமை தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan

01.அறத்துப் பால்

03.துறவற இயல்

அதிகாரம் 035. துறவு 

ஆசைகளை எல்லாம் அகற்றிவிட்டு

வாழும், தூயநல் அறவாழ்வு.

 

  1. யாதனின், யாதனின், நீங்கியான் நோதல்,

   அதனின், அதனின், இலன்.

 

எவ்எவற்றின் பற்றுகளை விடுகிறாரோ,

         அவ்அவற்றால் துன்பங்கள் இல்லை.

 

  1. வேண்டின்உண் டாகத் துறக்க; துறந்தபின்,

   ஈண்(டு)இயற் பால பல.

 

  உயர்மதிப்பு வேண்டித் துறப்பார்க்குச்,

       சமுதாயக் கடைமைகள் பற்பல.

 

  1. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும்,

   வேண்டிய எல்லாம் ஒருங்கு.

 

  ஐம்புலன்களை அடக்கு; விடவேண்டிய

       அனைத்தையும் முழுதும் விடு.

 

  1. இயல்(பு)ஆகும், நோன்பிற்(கு)ஒன்(று) இன்மை; உடைமை,

     மயல்ஆகும் மற்றும் பெயர்த்து.

 

  ஆசைகள் இல்லாமையே துறவு;      

       இருந்தால், மயக்க உறவு.

 

  1. மற்றும் தொடர்ப்பா(டு) எவன்கொலோ? பிறப்(பு)அறுக்கல்

   உற்றார்க்(கு), உடம்பும் மிகை.

       பிறவித்துயர் போக்குவார்க்[கு], உடலும்

       சுமைதான்; மற்றவை எதற்கு?

 

  1. யான்,என(து)” என்னும், செருக்(கு)அறுப்பான், வானோர்க்(கு)

   உயர்ந்த உலகம் புகும்.

 

    நான்,எனதுஎன்னும், ஆணவம்இல்லான்,

         உயர்வான் உலகு புகுவான்.

 

  1. பற்றி விடாஅ இடும்பைகள், பற்றினைப்

 பற்றி விடாஅ தவர்க்கு.

 

  பற்றுகளை விடாதாரைத் துன்பங்களும்

         பற்றும்; பற்றி விடாவாம்.

 

  1. தலைப்பட்டார், தீரத் துறந்தார்; மயங்கி

     வலைப்பட்டார், மற்றை யவர்.

 

    முழுதும் துறந்தார் துறவில்

         தலைமையார்; மற்றையார் மயங்குவார்.

 

  1. பற்(று)அற்ற கண்ணே, பிறப்(பு)அறுக்கும்; மற்று,

     நிலையாமை காணப் படும்.

 

  பற்றுஇலார்க்கு இல்லை பிறப்பு;

       பற்றுஉளார்க்குப் பிறப்பு பிறக்கும்.

 

  1. பற்றுக, பற்(று)அற்றான் பற்றினை, அப்பற்றைப்

     பற்றுக, பற்று விடற்கு.

 

        பற்றுகளை விடற்குப், பற்றுஇல்லார்

       பற்றினைப் பற்றுஎனப் பற்று.

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம்  036. மெய் உணர்தல்)