(அதிகாரம் 041. கல்லாமை தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan
02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 042. கேள்வி

கற்றார் சொல்கேட்டு, அறியாதன

அறிதற்கு, எளிமைமிகு நல்வழி.

 

  1. செல்வத்துள் செல்வம், செவிச்செவம்; அச்செல்வம்,

      செல்வத்துள் எல்லாம், தலை.

 

     செல்வங்களுள் எல்லாம், தலைசிறந்த

        செல்வம், கேள்விச் செல்வமே.

 

  1. செவிக்(கு)உண(வு) இல்லாத போழ்து, சிறிது,

      வயிற்றுக்கும், ஈயப் படும்.

 

     காதுக்குக் கேள்வி நல்உணவு

        இல்லாப்போதே, வயிற்றுக்குச் சிற்றுணவு.

 

  1. செவிஉணவின் கேள்வி உடையார், அவிஉணவின்

     ஆன்றாரோ(டு), ஒப்பர் நிலத்து.

 

    காதுக்கு உணவாம் கேள்விஅறிவு

       உடையார், தேவர்க்கு ஒப்புஆவார்.

 

0414, கற்றிலன் ஆயினும், கேட்க; அஃ(து)ஒருவற்(கு),

     ஒற்கத்தின் ஊற்(று)ஆம், துணை.

 

    கல்லாதான் ஆயினும், கேட்க; 

       தளர்ச்சியில் தாங்கும் துணைஅது.  

 

  1. இழுக்கல் உடைஉழி, ஊற்றுக்கோல் அற்றே,

     ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

 

    ஒழுக்கத்தார் வாய்ச்சொற்கள் வழுக்கல் 

       வழிகளில் ஊன்றுகோல்போல் காக்கும்.

 

  1. எனைத்(து)ஆயினும், நல்லவை கேட்க; அனைத்(து)ஆயினும்,

     ஆன்ற பெருமை தரும்.

 

    எவ்வளவு சிறிதுஆயினும், நல்லவை

       கேட்டல் நிறைபெருமை தரும்.

 

  1. பிழைத்(து)உணர்ந்தும், பேதைமை சொல்லார்,  இழைத்(து)உணர்ந்(து),

        ஈண்டிய கேள்வி யவர்.

     ஆய்ந்துஉணர் கேள்வியார், தவற

        உணரினும், அறியாமையை உணர்த்தார்.

 

  1. கேட்பினும், கேளாத் தகையதே, கேள்வியால்,

      தோட்கப் படாத செவி.

 

     கேள்வி அறிவால், துளைக்கப்படாக்

        காதுகள், செவிட்டுக் காதுகளே.

 

  1. நுணங்கிய கேள்வியர் அல்லார், வணங்கிய

      வாயினர் ஆதல், அரிது.

 

      நுண்அறிவுக் கேள்வியாரே, பணிவான

        வண்இன் சொற்களைச் சொல்வார்.

 

  1. செவியின் சுவைஉணரா, வாய்உணர்வின் மாக்கள்,

      அவியினும், வாழினும், என்?

 

      கேள்விச்சுவை உணராத, வாய்ச்சுவையார்,

        வாழ்ந்தாலும், செத்தாலும் என்ன?

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 043 அறிவு உடைமை)