(அதிகாரம் 042. கேள்வி தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 043. அறிவு உடைமை

கல்வி, கேள்விகளால் பெறுஅறிவின்,

இலக்கணமும், பன்முகப் பயன்களும்.

 

  1. அறி(வு),அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்,

      உள்அழிக்கல் ஆகா அரண்.

 

அழிவை நீக்கும் அறிவுக்கருவி,

அழிக்க முடியாத உள்பாதுகாப்பு.

 

  1. சென்ற இடத்தால் செலவிடாது, தீ(து)ஒரீஇ,

      நன்றின்பால் உய்ப்ப(து), அறிவு.

 

அறிவு, நெறிப்படுத்தும்; தீது

நீக்கும்; நல்லவற்றுள் சேர்க்கும்.

 

  1. எப்பொருள், யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்,

      மெய்ப்பொருள் காண்ப(து), அறிவு.

 

எக்கருத்தை, யார்யார் கூறினாலும்,

அக்கருத்தின், உண்மையை ஆராய்க.

 

  1. எண்பொருள ஆகச் செலச்சொல்லித், தான்பிறர்வாய்,

      நுண்பொருள் காண்ப(து) அறிவு       

 

எளிதாய்ச் சொல்லலும், நுட்பங்களைப்

புரிந்து கொள்ளலுமே, அறிவு.

 

 

  1. உலகம் தழீஇய(து) ஒட்பம்; மலர்தலும்,

     கூம்பலும் இல்ல(து), அறிவு.

 

நுண்அறிவு, உலகப் பார்வையது;

மகிழ்வும், துயரும் இல்லாதது.

 

  1. எவ்வ(து) உறைவ(து) உலகம், உலகத்தோ(டு),

     அவ்வ(து) உறைவ(து), அறிவு

 

 எப்படி உயர்ந்தார் வாழ்கிறாரோ

அப்படி வாழ்வதுதான் அறிவு.

 

  1. அறி(வு)உடையார், ஆவ(து) அறிவார்; அறி(வு)இலார்,

     அஃ(து),அறி கல்லா தவர்

 

அறிஞர் எதிர்வருவதை அறிவார்;

அறிவிலி அதனை அறியான்.

 

428. அஞ்சுவ(து) அஞ்சாமை, பேதைமை; அஞ்சுவ(து)

      அஞ்சல், அறிவார் தொழில்.

 

அஞ்சாமை அறியாமை; அஞ்ச

வேண்டுதற்கு அஞ்சுவார் அறிவார்.

 

  1. எதிரதாக் காக்கும், அறிவினார்க்(கு) இல்லை,

     அதிர வருவ(து)ஓர் நோய். 

 

 எதிர்வருவதை அறிந்து காப்பார்க்கே,

அதிர்ச்சித் துன்பம் இல்லை.

 

  1. அறி(வு)உடையார், எல்லாம் உடையார்; அறி(வு)இலார்,

     என்உடையர் ஏனும், இலர்.

 

 அறிவுள்ளார், எல்லாம் பெற்றவர்;

அறிவில்லார் எதுபெறினும், அற்றவர்.

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 044. குற்றம் கடிதல்)