(அதிகாரம் 049. காலம் அறிதல் தொடர்ச்சி)

attai_kuralarusolurai03

02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 050. இடன் அறிதல்

வலிமையை, காலத்தை, ஆய்ந்தபின்,

 உரிய இடத்தைத் தேர்ந்துஎடுத்தல்.

 

  1. தொடங்கற்க எவ்வினையும், எள்ளற்க முற்றும்,

      இடம்கண்ட பின்அல் லது.

 

      எந்தச் செயலையும் இகழற்க;

        இடத்தைக் கண்டபின், தொடங்குக.

 

  1. முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும், அரண்சேர்ந்(து)ஆம்

      ஆக்கம், பலவும் தரும்.

 

 வலியார்க்கும், கோட்டையின் பாதுகாப்பும்

        நன்மையும் நல்இடம்தான் தரும்.

 

  1. ஆற்றாரும், ஆற்றி அடுப; இடன்அறிந்து,

      போற்றார்கண் போற்றிச் செயின்.

 

 உரியதோர் இடம்தேர்ந்து செய்யின்,

        மெலியாரும், வலியாரை வெல்வார்.

 

  1. எண்ணியார், எண்ணம் இழப்பர்; இடன்அறிந்து,

      துன்னியார், துன்னிச் செயின்.

 

 இடம்அறிந்து, நெருங்கிச் செயல்ஆற்றின்,

        பகைவர் வெற்றியை எண்ணார்.

 

  1. நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்,புனலின்

      நீங்கின், அதனைப் பிற.

 

      தண்ணீருக்குள் முதலை வெல்லும்; 

        தரையினில் மற்றவை வெல்லும்.

 

  1. கடல்ஓடா கால்வல் நெடும்தேர்; கடல்ஓடும்

      நாவாயும், ஓடா நிலத்து.

 

      பெரும்தேரும் கடலில் ஓடாது;

        பெரும்படகும் தரையில் ஓடாது.

 

  1. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை

      எண்ணி, இடத்தால் செயின்.

 இடம்ஆய்ந்து சிந்தித்துச், செய்வார்க்கு, 

        அஞ்சாமைஆம் துணையே போதும்.

 

  1. சிறுபடையான், செல்இடம் சேரின், உறுபடையான்,

      ஊக்கம் அழிந்து கெடும்.

 

 சிறுபடையான் பொருந்துஇடம் சேர்ந்தால்,

        பெரும்படையான் ஊக்கம், கெடும்..

 

  1. சிறைநலனும், சீரும், இலன்எனினும், மாந்தர்

     உறைநிலத்தோ(டு) ஒட்டல், அரிது.

 

     காப்பும், படைச்சிறப்பும், இல்லானையும், 

       வாழ்இடத்தில் வெல்ல முடியாது.

 

  1. கால்ஆழ் களரின் நரிஅடும், கண்அஞ்சா,

     வேல்ஆள் முகத்த, களிறு.

 

 சேற்றுநிலத்தில் சிக்கிய பெரிய

        யானையைச் சிறுநரியும் வெல்லும்.

– பேராசிரியர் வெ. அரங்கராசன்

ve.arangarasan04

(அதிகாரம் 051. தெரிந்து தெளிதல்)