(அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை தொடர்ச்சி)

attai_kuralarusolurai

02. பொருள் பால்
06. அமைச்சு இயல்
அதிகாரம் 064. அமைச்சு

அமைச்சர்தம் தகுதிகள், பண்புகள்,

ஆளுமைத் திறன்கள். செயற்பாடுகள்.

 

  1. கருவியும், காலமும், செய்கையும், செய்யும்

    அருவினையும், மாண்ட(து) அமைச்சு.

 

        செய்கருவி, காலம், செயல்கள்,

        செய்முறைகளில் சிறந்தார், அமைச்சர்.

 

  1. வன்கண், குடிகாத்தல், கற்(று)அறிதல், ஆள்வினையோ(டு)

    ஐந்துடன் மாண்ட(து) அமைச்சு.

 

        கல்வி, குடிஅறிவு, குடிகாத்தல்,  

        முயற்சி, உறுதி அமைச்சியல்.

 

  1. பிரித்தலும், பேணிக் கொளலும், பிரிந்தார்ப்

     பொருத்தலும், வல்ல(து) அமைச்சு.

 

        பகைப்பிரிப்பு, துணைக்காப்பு, பிரிந்தார்

        சேர்ப்பு, அமைச்சர்தம் வல்லமை.

 

  1. தெரிதலும், தேர்ந்து செயலும், ஒருதலைஆச்

     சொல்லலும், வல்ல(து) அமைச்சு.

 

        ஆராய்தல், தேர்ந்துசெய்தல் உறுதியாய்ச்

        சொல்லல், அமைச்சர்தம் வல்லமை.

 

  1. அறன்அறிந்(து), ஆன்(று)அமைந்த சொல்லான்,எஞ்ஞான்றும்,             

     திறன்அறிந்தான், தேர்ச்சித் துணை.

 

        அறம்அறிந்தார், நிறைசொல்லார்,

        செயல்திறத்தார் அமைச்சர் ஆவார். 

 

  1. மதிநுட்பம் நூலோ(டு) உடையார்க்(கு), அதிநுட்பம்

     யாஉள முன்நிற் பவை?

 

        நுண்அறிவும், நூல்அறிவும் மிக்கார்முன்

        எவ்வகை நுண்சிக்கல்கள் நிற்கும்?

 

  1. செயற்கை அறிந்தக் கடைத்தும், உலகத்(து)

     இயற்கை அறிந்து செயல்.   

 

        நூல்அறிவு இருந்தாலும், உலகுஇயல்

        நடப்பை ஆய்ந்து செய்க.

 

  1. அறி(கு)ஒன்(று) அறியான் எனினும், உறுதி

     உழைஇருந்தான் கூறல் கடன்.

 

        ஆள்வான் அறியான் என்றாலும்,

        அறிவுறுத்தல் அமைச்சர் கடமை.

 

  1. பழு(து)எண்ணும் மந்திரியின் பக்கத்துள், தெவ்வோர்

    எழுபது கோடி உறும்.

 

        வஞ்சக அமைச்சரைவிட எழுபது

        கோடிப் பகைவர் மேல்.

 

  1. முறைப்படச் சூழ்ந்தும், முடி(வு)இலவே செய்வர்,

     திறப்பா(டு) இலாஅ தவர்.

 

        ஆழ்ந்து சிந்தித்தாலும், திறன்இல்லா

        அமைச்சர் செயலை முடியார்.

(அதிகாரம் 065. சொல்வன்மை)

பேராசிரியர் வெ. அரங்கராசன்