(அதிகாரம் 065. சொல்வன்மை தொடர்ச்சி)

attai_kuralarusolurai

02. பொருள் பால்
06. அமைச்சு இயல்
அதிகாரம் 066. வினைத் தூய்மை

செயற்பாடுகளில் குற்றம்  குறைகள்

 இல்லாமை; தூய்மை உள்ளமை.


  1. துணைநலம், ஆக்கம் தரூஉம்; வினைநலம்,

     வேண்டிய எல்லாம் தரும்.

 

        நலத்துணை முன்னேற்றத்திற்கு உதவும்;

        நலச்செயல் எல்லாமும் தரும்.

 

  1. என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு

     நன்றி பயவா வினை.   

 புகழோடு, நன்மை தராச்செயலை,

        எப்போதும் விலக்கல் வேண்டும்.      

 

  1. ஓஒதல் வேண்டும், ஒளிமாழ்கும் செய்வினை,

     ஆஅதும் என்னும் அவர்.   

 

        உயர்வை விரும்புவார், மதிப்புக்

        கேடான எச்செயலையும் செய்யார்.      

 

  1. இடுக்கண் படினும், இளிவந்த செய்யார்,

     நடுக்(கு)அற்ற காட்சி யவர்.       

 

        தெளிந்த அறிவாளர் துன்பத்திலும்,

        இழிவான செயல்கள் செய்யார்.

 

  1. எற்(று)என்(று) இரங்குவ செய்யற்க; செய்வானேல்,

     மற்(று)அன்ன செய்யாமை நன்று.

 

        வருந்தும்படி எதையும் செய்யாதே;

        செய்யின், மீண்டும் செய்யாதே.

 

  1. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும், செய்யற்க,

     சான்றோர் பழிக்கும் வினை.

 

        தாயே பசியால் துடித்தாலும்,

        பழிப்புச் செயல்களைச் செய்யாதே.

 

  1. பழிமலைந்(து) எய்திய ஆக்கத்தின், சான்றோர்

     கழிநல் குரவே தலை.

 

        பழியால் அடையும் செல்வத்தினும்,

        உயர்ந்தார் வறுமை தலையானது.

 

  1. கடிந்த கடிந்(து)ஒரார், செய்தார்க்(கு), அவைதாம்

     முடிந்தாலும், பீழை தரும்.       

 

        உயர்ந்தார் விலக்கியன செய்தார்க்குச்,

        செயல்கள் முடிந்தாலும் துயரம்தான்.      

 

  1. அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்,

     பின்பயக்கும் நல்பால் அவை.   

 

        அழக்கொண்டவை, கொண்டார் அழப்போம்;

        இழந்தாலும், நல்லவை நலம்தரும்.  

 

  1. சலத்தால் பொருள்செய்(து)ஏ மார்த்தல், பசுமண்

     கலத்(து)உள்நீர் பெய்(து)இரீஇ அற்று.

 

        வஞ்சகத்தால் வரும்பொருள், பச்சை

        மண்பானையுள் பெய்தநீர் போன்றது.    

(அதிகாரம் 067. வினைத் திட்பம்)

பேராசிரியர் வெ. அரங்கராசன்