திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 008. அன்பு உடைமை
(அதிகாரம் 007. மக்கள் பேறு தொடர்ச்சி)
01. அறத்துப் பால்
02. இல்லற இயல்
அதிகாரம் 008. அன்பு உடைமை
உள்ளம் உள்நெகிழ்ந்து, கனியும்படி
உயிர்வளர்க்கும் ஒழுக்கம்; உயர்வழக்கம்.
- அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்….? ஆர்வலர்
புன்கண்நீர், பூசல் தரும்.
அன்பை அடைக்கும் கதவுஇல்லை;
அன்பைக் கண்ணீரே, காட்டிவிடும்.
- அன்பு(இ)லார் எல்லாம், தமக்(கு)உரியர்; அன்(பு)உடையார்,
என்பும் உரியர் பிறர்க்கு.
அன்[பு]இல்லார், தந்நலத்தார்; அன்[பு]உள்ளார்,
உயிரையும் கொடுக்க வல்லார்.
- “அன்போ(டு) இயைந்த வழக்(கு)”என்ப, ஆர்உயிர்க்(கு)
என்போ(டு) இயைந்த தொடர்பு.
உயிர்க்கும், உடம்புக்கும் இடைத்தொடர்பே,
அன்புக்கும், வாழ்வுக்கும் உள்ளது.
- அன்(பு)ஈனும், ஆர்வம் உடைமை; அதுஈனும்,
நண்(பு)என்னும் நாடாச் சிறப்பு.
அன்பால் ஆர்வமும், ஆர்வத்தால்
தேடா நட்புச்சிறப்பும் தேடிவரும்.
- “அன்(பு)உற்(று) அமர்ந்த வழக்(கு)”என்ப, வையகத்(து),
இன்(பு)உற்றார் எய்தும் சிறப்பு.
மகிழ்ச்சியாய் வாழ்வார்தம் சிறப்புகள்,
மனத்[து]அமர்ந்த அன்பால் வந்தனவே.
- “அறத்திற்கே, அன்புசார்(பு)” என்ப, அறியார்;
மறத்திற்கும், அஃதே துணை.
அறத்திற்கு மட்டுமன்று; அறம்சார்
வீரத்திற்கும், அன்பே துணை.
- என்(பு)இல் அதனை, வெயில்போலக் காயுமே,
அன்(பு)இல் அதனை அறம்.
எலும்[பு]இல்லா உயிர்களை, வெயிலும்,
அன்[பு]இல்லாரை, அறமும் சுடும்.
- அன்(பு)அகத்(து) இல்லா உயிர்வாழ்க்கை, வன்பால்கண்,
வற்றல் மரம்தளிர்த்(து) அற்று.
வன்பாலை நிலத்துப் பட்டமரமும்,
அன்[பு]இல்லா வாழ்வும் தளிர்க்கா.
- புறத்(து)உறுப்(பு) எல்லாம், எவன்செய்யும்? யாக்கை
அகத்(து)உறுப்(பு), அன்(பு)இல் அவர்க்கு.
உள்உறுப்[பு]ஆம் அன்[பு]அது இல்லார்தம்
வெளிஉறுப்புக்கள் எல்லாம் பயன்படா.
- அன்பின் வழிய(து), உயிர்நிலை; அஃ(து)இல்லார்க்(கு),
என்புதோல் போர்த்த உடம்பு.
அன்[பு]ஆம் உயிர்இல்லா உடம்பு,
எலும்பு,தோல் போர்த்த வெற்[று]உடம்பு.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply