(அதிகாரம் 095. மருந்து தொடர்ச்சி)

arusolcurai_attai+arangarasan

02. பொருள் பால்

13.குடி இயல்

அதிகாரம் 096.  குடிமை

உயர்குடியில், குடும்பத்தில் பிறந்தாரின்

இயல்பும், பெருமையும், சிறப்பும்.

 

  1. இல்பிறந்தார் கண்அல்லது இல்லை, இயல்பாகச்

     செப்பமும், நாணும் ஒருங்கு.

 

நேர்மையும், பழிக்கு நாணலும்,

        நல்குடிப் பிறந்தார்தம் இயல்புகள்.

 

  1. ஒழுக்கமும், வாய்மையும், நாணும்இம் மூன்றும்

     இழுக்கார் குடிப்பிறந் தார்.

 

  ஒழுக்கத்தில், உண்மையில், நாணத்தில்,

        உயர்குடிப் பிறந்தார் தவறார்.

 

  1. நகை,ஈகை, இன்சொல், இகழாமை நான்கும்

     வகைஎன்ப, வாய்மைக் குடிக்கு.  

 

        புன்சிரிப்பு, கொடைமை, இன்சொல்,

        மதித்தல் நல்குடியார்தம் பண்புகள்.

 

  1. அடுக்கிய கோடி பெறினும், குடிப்பிறந்தார்

     குன்றுவ செய்தல் இலர்.

 

பல்கோடி பெற்றாலும், நல்குடியார்

        குறைகள் உண்டாகும்படி செய்யார்.      

 

  1. வழங்குவ(து) உள்வீழ்ந்தக் கண்ணும், பழங்குடி,

     பண்பில் தலைப்பிரிதல் இன்று.

 

     கொடைப்பொருள் சுருங்கினும், பழங்குடியார்,

        கொடைமைப் பண்பில் சுருங்கினும்.

 

 956.  சலம்பற்றிச் சால்(பு)இல செய்யார், ”மா(சு)அற்ற

     குலம்பற்றி வாழ்தும்”என் பார்.

 

    ”தூயகுலப் பண்போடு வாழ்கிறோம்”

         என்பார், வஞ்சனைகள் செய்யார்.   

 

  1. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம், விசும்பின்

     மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

 

      உயர்குடியார் குற்றம், நிலாவின்

        கறைபோல், பலர்அறியத் தோன்றும்.

 

  1. நலத்தின்கண் நார்இன்மை தோன்றின், அவனைக்

    குலத்தின்கண் ஐயப் படும்.

 

குடும்ப நலத்தில், பற்றுஇலாதார்

        குலம்பற்றி ஐயம் கொள்வார்.           

 

  1. நிலத்தில் கிடந்தமை, கால்காட்டும்; காட்டும்

     குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

 

  நிலத்தின் இயல்பை முளைகாட்டும்;

        குலத்தாரை வாய்ச்சொல் காட்டும்.

 

  1. நலம்வேண்டின், நாண்உடைமை வேண்டும்; குலம்வேண்டின்,

      வேண்டுக யார்க்கும் பணிவு.

 

   நன்மை வேண்டின், பழிநாணுக;

        குலப்பெருமை வேண்டின், பணிக.

 

பேரா.வெ.அரங்கராசன்

(தொடர்ச்சி : திருக்குறள் அறுசொல் உரை – 97.மானம்)