(திருக்குறள் அறுசொல் உரை – 97.மானம் தொடர்ச்சி)

attai_kuralarusolurai

திருக்குறள்

02. பொருள் பால்

13. குடி இயல் 

098. பெருமை    

நல்ஒழுக்கக் கடைப்பிடியால் பணிவாக   

உள்ளத்துள் பெருகும் மகிழ்உணர்வு.

 

  1. ஒளிஒருவற்(கு), உள்ள வெறுக்கை; இளிஒருவற்(கு),

     ”அஃ(து)இறந்து வாழ்தும்” எனல்.

        உள்ளத்துள் நிறையும் பெருமைதான்

        செல்வம்; அதுஇன்மை இழிவுதான்.

 

  1. பிறப்(பு)ஒக்கும், எல்லா உயிர்க்கும்; சிறப்(பு)ஒவ்வா

    செய்தொழில் வேற்றுமை யான்.

        பிறப்பால் வேறுபடார்; செய்தொழில்

        நுட்பத்தால், பெருமையால் வேறுபடுவார்.

  1. மேல்இருந்தும், மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும்,

    கீழ்அல்லார் கீழ்அல் லவர்.

        பண்புஇல்லா மேல்நிலையார், கீழோர்;

        பண்புஉள்ள கீழ்நிலையார், மேலோர். 

 

  1. ஒருமை மகளிரே போலப், பெருமையும்,

     தன்னைத்தான் கொண்(டு)ஒழுகின் உண்டு.

        கற்பின் மகளிரைப் போலவே,

        நிற்பின், ஆடவரும் பெருமையரே.

 

  1. பெருமை உடையவர் ஆற்றுவர், ஆற்றின்

     அருமை உடைய செயல்.

        அரிய செயல்களைப், பெருமையர்,

        உரிய வழிகளில் செய்வர்.

 

  1. சிறியார் உணர்ச்சியுள் இல்லை, ”பெரியாரைப்

      பேணிக்கொள் வேம்”என்னும்  நோக்கு.

பெரியார்வழி நடப்போம்” என்று,

சிறியார் சிந்தனை செய்யார்.

 

  1. இறப்பே புரிந்த தொழிற்(று)ஆம், சிறப்பும்தான்,

      சீர்அல் லவர்கண் படின்.

        பெருமைசேர் சிறப்பு, சிறுமையரிடம்

        சேர்ந்தால், எல்லை மீறுவர்.

 

  1. பணியும்,ஆம்…! என்றும் பெருமை; சிறுமை

      அணியும்,ஆம்….! தன்னை வியந்து.

        பெரியார், என்றும் பணிவார்;ஆம்….!

        சிறியார், தமைத்தாமே புகழ்வார்;ஆம்….!

 

  1. பெருமை, பெருமிதம் இன்மை; சிறுமை,

     பெருமிதம் ஊர்ந்து விடல்.

        பெருமையார், ஆணவம் கொள்ளார்;

        சிறுமையார், அதனைத் தள்ளார்.

.

  1. அற்றம் மறைக்கும், பெருமை; சிறுமைதான்,

      குற்றமே கூறி விடும்.

        பெரியார், பிறர்குற்றைத்தைக் கூறார்;

        சிறியார், அதனையே கூறுவார்.

பேரா.வெ.அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 99. சான்றாண்மை)