திருக்குறள் அறுசொல் உரை – 102. நாண் உடைமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 101. நன்றி இல் செல்வம் தொடர்ச்சி)
திருக்குறள் அறுசொல் உரை
2. பொருள் பால்
13.குடி இயல்
அதிகாரம் 102. நாண் உடைமை
இழிசெயல் வழிவரும் அழியாப்
பழிக்கு வெட்கி,அது ஒழித்தல்.
- கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
பழிச்செயலுக்கு வெட்குவதே, வெட்கம்;
மகளிர்தம் வெட்கம், வேறு..
- ஊண்,உடை, எச்சம், உயிர்க்(கு)எல்லாம் வே(று)அல்ல;
நாண்உடைமை மாந்தர் சிறப்பு.
உணவு,உடை, பிறஎல்லாம் பொது;
நாணம் மக்களுக்குச் சிறப்பு.
- ஊனைக் குறித்த உயிர்எல்லாம்; நாண்என்னும்
நன்மை, குறித்தது சால்பு.
உயிருக்கு உடம்பும், நிறைவான
பண்பிற்கு நாணமும், அடித்தளம்.
- அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்(கு)….?
அஃ(து)இன்றேல்,
பிணிஅன்றோ பீடு நடை….?
வெட்கமே பெரியார்க்கு அழகு;
வெட்காத பெருமிதநடை நோய்.
- பிறர்பழியும், தம்பழியும் நாணுவார், நாணுக்(கு)
உறைபதி என்னும் உலகு.
பிறர்பழிக்கும், தம்பழிக்கும் வெட்குவார்.
வெட்கத்திற்கு வாழ்இடம் ஆவார்.
- நாண்வேலி கொள்ளாது மன்னோ…..? வியன்ஞாலம்
பேணலர்; மேலா யவர்.
நாணத்தை வேலியாகக் கொண்டார்,
உலகமே பெறினும் நாணம்விடார்.
- நாணால், உயிரைத் துறப்பர்; உயிர்பொருட்(டு)ஆல்,
நாண்துறவார் நாண்ஆள் பவர்.
நாணத்தார் நாணிற்காக உயிர்விடுவார்;
உயிரைக் காக்க நாணம்விடார்.
- பிறர்நாணத் தக்கது, தான்நாணான் ஆயின்,
அறம்,நாணத் தக்க(து) உடைத்து.
மற்றவர் நாணத் தக்கவற்றிற்குத்
தானும் நாணாவிடின், அறம்நாணும்.
- குலம்சுடும், கொள்கை பிழைப்பின்; நலம்சுடும்,
நாண்இன்மை நின்றக் கடை.
கொள்கை தவறினால், குலம்கெடும்;
நாணம் தவறினால், நலம்கெடும்.
- நாண்அகத்(து) இல்லார் இயக்கம், மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
நாண்இல்லார் நடமாட்டம், கயிற்றால்
மரப்பொம்மை நடமாடல் போல.
-பேரா.வெ.அரங்கராசன்
Leave a Reply