(திருக்குறள் அறுசொல் உரை –  102. நாண் உடைமை தொடர்ச்சி)

attai_kuralarusolurai

திருக்குறள் அறுசொல் உரை

2. பொருள் பால்  
13.குடி இயல்

அதிகாரம்   103. குடி செயல் வகை

குடும்பத்தை, குடியை உயர்த்துவாரது

செயற்பாட்டு ஆளுமைத் திறன்கள். 

  1. ”கருமம் செய”ஒருவன், ”கைதூவேன்” என்னும்

      பெருமையின், பீ(டு)உடைய(து) இல்.

”குடும்பக் கடமைசெயக் கைஓயேன்”

என்பதே பெரிய பெருமை.

 

  1. ஆள்வினையும், ஆன்ற அறிவும், எனஇரண்டின்

      நீள்வினையால் நீளும் குடி.

நீள்முயற்சி, நிறைஅறிவு சார்ந்த

தொடர்செயல் குடியை வாழ்விக்கும்.

 

  1. “குடிசெய்வல்” என்னும் ஒருவற்குத், தெய்வம்,

      மடி(து)அற்றுத் தான்முந்(து) உறும்.

குடியை உயர்த்துவேன் என்பானுக்குத்,

தெய்வமும் சோம்பாது உதவும்.

 

  1. சூழாமல் தானே முடி(வு)எய்தும், தம்குடியைத்,

      தாழா(து) உஞற்று பவர்க்கு.

       குடியை உயர்த்தும் முயற்சியில்

சிற்சில தாமாகவும் நிறைவேறும்.

 

  1. குற்றம் இலனாய்க், குடிசெய்து வாழ்வானைச்,

      சுற்றம்ஆச் சுற்றும் உலகு.

குற்றம்இலாது குடிகாத்து, வாழ்வாரைச்

சுற்றமாய் உலகார் சுற்றுவார்.

 

  1. நல்ஆண்மை என்ப(து), ஒருவற்குத், தான்பிறந்த

      இல்ஆண்மை ஆக்கிக் கொளல்.

குடும்பத்தை மேம்படுத்தும் பொறுப்பைத்

தானே ஏற்பதே நல்ஆளுமை.

 

  1. அமர்அகத்து வன்கண்ணர் போலத், தமர்அகத்தும்,

      ஆற்றுவார் மேற்றே பொறை.

செயல்வீரர்மேல் போர்ப்பொறுப்பும், தாங்குவார்மேல்

குடியின் பொறுப்பும் ஏறும்.

 

  1. குடிசெய்வார்க்(கு) இல்லை பருவம்; மடிசெய்து,

      மானம் கருதக், கெடும்.

குடிகாப்போர், காலத்தை, சோம்பலை,

தம்மானத்தைக், கருதின், குடிகெடும்.

 

  1. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ….? குடும்பத்தைக்

      குற்றம் மறைப்பான் உடம்பு.

குற்றப்படாமல் குடும்பத்தைக் காப்பான்

உடம்பே, துன்பங்கள் வாழ்இடமோ….?

 

  1. இடுக்கண்கால். கொன்றிட வீழும், அடுத்(து)ஊன்றும்

      நல்ஆள் இலாத குடி.

அடுத்துஅடுத்துத் தாங்குவார் இல்லாக்குடி,

நீள்துயர் தாங்காது; வீழும்.

பேரா.வெ.அரங்கராசன்