(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி)

thiruvalluvamaalaiyin_melaanmai

panai-palm

10.3. கபிலர் பாடல் — 05

        தினைஅளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

         பனைஅளவு காட்டும் படித்தால்மனைஅளகு

         வள்ளைக்[கு] உறங்கும் வளநாட..! வள்ளுவனார்

         வெள்ளைக் குறட்பா விரி

] பொருள் உரை

     தினைஅரிசியின் அளவுக்கும் ஒப்பாகாத மிகச் சிறிய புல்லின் நுனியின்மேல் உள்ள பனித்துளி நெடிது உயர்ந்த பனையின் உருவத்தைத் தன்னுள் கொண்டு காட்டும். அதுபோல் போல், திருவள்ளுவர் அருளிய ஈரடியாலான சிறிய திருக்குறட் பாவும், மிகப் பரந்து விரிந்த அறம் சார்ந்த பொருள்களைத் தன்னுள் கொண்டு காட்டும்.     

  •  சொல்: பனித்துளி
  •      பனித்துளி சிறியது; தூய்மையானது; தெளிவானது; குளிர்வது.
  •      நுட்பம்

  திருக்குறள் சிறியது; தூய்மையானது; தெளிவானது; கற்றவர் மனத்தைக் குளிர்விக்கும் தன்மையது.

  • சொல்: பனித்துளி நீர்
  •      பனித்துளி நீர் இன்றி அமையாது உலகு.
  • நுட்பம்

 திருக்குறள் இன்றி உலகில் அறம் அமையாது.

  • சொல்: பனை
  • பனை முழுவதும் பயன்படும் பெரிய மரம்.
  • நுட்பம்

திருக்குறள் முழுதும் பயன்படும் பெரும்நூல்.           

10.4. மதுரைத் தமிழ்நாகனார் பாடல் –29

        எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால்

         இல்லாத எப்பொருளும் இல்லையால்சொல்லால்

         பரந்தபா வால்என் பயன்?வள் ளுவனார்

         சுரந்தபால் வையத் துணை.

  • சொல்தொடர்

    எல்லாப் பொருளும் இதன்பால் உள:இதன்பால்

      இல்லாத எப்பொருளும் இல்லையால்,

  • பொருள் உரை

     உலகத்தார் எல்லார்க்கும் இன்றியமையாத எல்லா அறநெறிகளும் திருக்குறளின் முப்பாலில் இருக்கின்றன. இம் முப்பாலில் இல்லாத எப்பொருளும் இல்லை என்பதனால்,.

  •  நுட்பம்

      இவ் வெண்பாவின் இல்லையால் என எச்சத் தொடராக முடிந்திருக்கிறது. அவ் எச்சத் தொடரை முற்றுத் தொடராக மாற்றினால் ஒரு நுட்பப் பொருள் கிடைக்கும். அவ் எச்சத் தொடரின் முற்றுத்தொடர் கீழே.

  இம் முப்பாலில் இல்லாத எப்பொருளும் இல்லை என்பதால், இம் முப்பாலை ஓதி அதன்படி வாழ்ந்தாலே போதும் வேறு எப்பால் நூல்களையும் எப்போதும் ஓத வேண்டிய தேவை இல்லை என்னும் நுட்பம் வெளிப்படுகிறது.

  • சொல்தொடர்          

      எல்லாப் பொருளும் இதன்பால் உள என உடன்பாட்டு முறையிலும், இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்   என எதிர்மறை முறையிலும் இவை அமைந்துள்ளன.

  • நுட்பம்

    திருவள்ளூவப் பெருநாவலர் விதிப்பதற்கு உரியவற்றை உடன்பாட்டிலும், விலக்குதற்கு உரியவற்றை எதிர்மறையிலும் உரைப்பதை ஆங்காங்கே கண்ணுறலாம்.

     கருத்தாக்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பழுத்த பெருஞானி திருவள்ளுவர், இந் நுட்பமான இலக்கிய உத்தியை இயற்றினார். இதனைத் திருவள்ளுவமாலை ஒண்புலவர்களும் தங்கள் வண்பாடல்களில் நன்முறையில் இதனைப் பயன்படுத்திக் கொண்டார்கள் எனத் தெரிகிறது.

  • சொல்தொடர்
  •       சொல்லால் பரந்த பாவால் என் பயன்?
  • பொருள் உரை         

எல்லாப் பொருளும் இல்லாமல் சொற்களால் மட்டுமே பரந்து விரிந்து கிடக்கும் நூல்களால் என்ன பயன் விளையும்?

  •  நுட்பம்

      மேற்குறிப்பிட்டவாறு திருக்குறள் சொற்களால் பரந்தும், விரிந்தும் இல்லை. சொற்களால் சுருங்கிய நிலையிலேயே இருக்கிறது. எனினும் சொல்நுட்பங்களையும், பொருள்நுட்பங்களையும் நயநுட்பங்களையும் தன்னுள் நிரப்பிக் கொண்டிருக்கிறது. அவற்றுக்குள் பரந்து விரிந்த அறம் சார்ந்த கருத்தியல் நெறிமுறைகளும், கொள்கைகளும், கோட்பாடுகளும் கொட்டிக் கிடக்கின்றன. அதனால், திருக்குறளால் ஆகும் பயன்கள் அளவற்றவை.

  • சொல்தொடர்
  •      வள்ளுவனார் சுரந்த பால் வையத் துணை
  • பொருள் உரை

     திருவள்ளுவரிடமிருந்து சுரந்து வரும் முப்பால் எனும் நற்பால் எப்பாலோர்க்கும் எப்போதும் உயிர்த்துணை ஆம்.

சொல் சுரந்த எனும் பெயரெச்சம்

   சுரந்த என்பதைச் சுரத்தல் எனும் தொழிற்பெயராக்கி அதன் நுட்பப் பொருளைக் காண்போம்.

  • நுட்பம் — 1

   சுரத்தல் எனின் உண்டாதல், ஊறுதல், நிறைதல் எனப் பொருள்படும்.

  ஓர் அறநூலை எழுத வேண்டும் என்ற எண்ணம் திருவள்ளுவர்க்கு உண்டானது. உடனே அறநெறிக் கருத்தாக்கங்கள் அவர் உள்ளத்தில் ஊறத் தொடங்கின. அவை ஓலைச் சுவடிகளில் வந்து நிறைந்தன.

   அன்று திருக்குறளுக்கு உரைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் உரையாசிரியர்களுக்கு உண்டானது. உடனே அவர்கள் உள்ளத்தில் உரைகள் ஊறின. அவை ஓலைச் சுவடிகளில் வந்து நிறைந்தன.

   இன்றும் திருக்குறளைப் பற்றிப் பேச நினைத்தாலும், கட்டுரைகள் எழுத நினைத்தாலும், உரைகள் எழுத நினைத்தாலும் சொற்கள் சுரக்கும் என்பது சுரக்கும் எனும் சொல்லுக்குள் மறைந்திருக்கும் நுட்பம் எனக் கொள்ளலாம்.

  • நுட்பம் — 2

   திருவள்ளுவரிடமிருந்து சுரந்து வரும் பால், அறத்துப் பால், பொருள் பால், காமத்துப் பால் எனனும் முப்பால். முப்பால் என்னும் பொருள்படும் அத் தொடர், திருவள்ளுவரை மும்மார்பகம் கொண்ட திருவள்ளுவத் தாய் ஆக்குகிறது, திருவள்ளுவர் மும்முலைத் தாய் எனும் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களது கவிதை அடியும் இங்குக் கருதத் தக்கது.

     பசுவின் பால் போன்ற பால்கள் குடும்பத்திற்கு மட்டும் பயன்படும். அவை விற்பனைக்கு வந்தால், குறிப்பிட்ட பகுதியார்க்கு மட்டும் பயன்படும்.

  நோய் எதிர்ப்பு ஆற்றல் தருவதும்,, மூளை வளர்ச்சி, எலும்பு, வளர்ச்சி, கண் பார்வை தெளிவடைதல் போன்ற குழந்தைக்குத் தேவையான அனைத்து ஆற்றல்களுக்கும், வளர்ச்சிக்கும் மிகவும்

இன்றியமையாதது தாய்ப் பால். அப் பால் குறிப்பிட்ட காலத்தில் மட்மே சுரக்கும். அதைக் குடிக்கும் குழந்தைக்கு மட்டுமே பயன்படும்.

  திருவள்ளுவத் தாயிடமிருந்து சுரந்து வரும் ஒப்பற்ற முப்பால் உலகிற்கும், உலகத்தார் எல்லோர்க்கும் எப்போதும் செப்பமுறப் பயன்படும்.

 – பேரா.வெ.அரங்கராசன்

(மணக்கும்)

பேரா.வெ.அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன்