(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3 தொடர்ச்சி)

திருவள்ளுவர் –  4

  1. ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின் (126)

ஒருமையு ளாமைபோ லுள்ளைந் தடக்கி

(திருமந்திரம்-முதற்றந்திரம்-21)

  1. நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன்

நாடொறு நாடு கெடும் (553)

நாடொறு மன்னவ னாட்டிற் றவநெறி

நாடொறு நாடி யவனெறி நாடானேல்

நாடொறு நாடு கெடுமுட னண்ணுமால்

நாடொறுஞ் செல்வ நரபதி குன்றுமே

(திரு மந்திரம்-இராசதோடம்-2)

  1. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய் ( 359)

சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் என்றமையால்

சார்புணர்வு தானே தியானமுமாம்-சார்பு

கெடஒழ்கி னல்ல சமாதியுமாங் கேதப்

படவருவ தில்லைவினைப் பற்று

(திருக்களிற்றுப்படியார்)

  1. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றையவர் (348)

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றையவ ரென்று-நிலைத்தமிழின்

தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த

மெய்வைத்த சொல்லை விரும்பாமல்

(உமாபதிசிவாசாரியார்- நெஞ்சுவிடுதூது)

  1. . . . . . . . . . அவர் சென்ற

நாளெண்ணித் தேய்ந்த விரல் (1261)

நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பி

னோவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச்

செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூ

லணங்கெழி லரிவையர்

(பதிற்றுப்பத்து-68)

  1. பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா

பிற்பகற் றாமே வரும் (319)

முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகற் காண்குறூஉம் பெற்றிகாண்.

(சிலப். வஞ்சினமாலை. வரி-3, 4)

  1. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (55)

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்

தெய்வம் தொழுதகைமை திண்ணமால்-தெய்வமாய்

மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி

விண்ணகமா தர்க்கு விருந்து

(சிலப். கட்டுரைகாதை)

தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழையென்றவப்

பொய்யில் புலவன் பொருளை தேராய்

(மணிமேகலை:காதை 22-வரி59-61)

  1. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டா முய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110)

நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்

செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென

அறம்பா டிற்றே யாயிழை கணவ (புறம்-34)

இன்னும் இத்தகைய மேற்கோள்வாக்கியங்கள் பல எடுத்துக் காட்டலாமாயினும் ஈங்கு இவை போதியவாம். இவ்வாறு உரையொடு பொருளும் உறழும் பலவிடங்களை யும் காட்டுமிடத்துக் குறளாசிரியரே அவற்றைப் பிறநூல்கனினின்றும் இரவல்கொண்டிருக்கலாகாதோ எனின். இவ்வாக்கியங்களின் பொருணோக்கும் நடைப்போக்கும் உற்று நோக்குவார்க்குக் குறளே பிறநூலுடையாருக்கு மேற்கோளாதல் வெள்ளிடைமலையாம். அன்றியும், சாத்தனார் மணிமேகலையிலும், ஆலத்தூர்கிழார் புறப்பாட்டிலும் குறளைப் பாராட்டிப்பாடக் கண்டுவைத்தும். குறளாசிரியர் பிறநூலினின்று இரவல்கொண்டாரெனக் கூறுதல் சிறிதும் பொருந்தாக்கூற்றாம். எனவே சங்கப்புலவர் பலராலும் எடுத்தாளப்படும் குறள் அவர் தமக்குக் காலத்தான் முந்தியதாதல் ஒருதலை. அன்றியும், கடைச் சங்கப் புலவரான சாத்தனார் ‘ பொய்யில் புலவன் பொருளுரை’ யெனவும் ஆலந்தூர்கிழார் ‘அறம்பாடிற்றே’ எனவும் குறளையும் அதனாசிரியரையும் போற்றிப் பேணக்காணும் நாம், இப்பழம்புலவராற் குறள் மெய்ம்மறை யெனவும், அதனாசிரியர் பொய்யா அறக்கடவுளெனவும் பாராட்டப்படுதற்கு வள்ளுவரின் மெய்ப்பெருமை அப்புலவருக்கு வெகுநீண்ட காலத்துக்கு முன்னே நிலைபேறடைந்திருக்க வேண்டுமென்பதை எளிதிற் றெளியலாகும். நமக்குக் கிடைக்கும் சங்கநூல்களெல்லாம் கடைச்சங்கப் புலவராலேயே இயற்றப்பட்டன எனக்கொள்வதற்கும் இல்லை. சில புறப்பாட்டுக்களும் கலிகளும் இடைச்சங்கப் புலவராலேனும் எனைத்தானும் கடைச்சங்கத்துக்கு முற்பட்ட புலவராலேனும் ஆக்கப்பட்டிருக்கவேண்டுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவர் நூல்களிலும் குறள் எடுத்தாளப்படுதலால் வள்ளுவர் கடைச்சங்கக் கடைக்காலத்தவருமில்லை; முதலிடைக் காலத்தவருமில்லை; அச்சங்கத்துக்கு நெடும்பல்லாண்டுகட்கு முன்பிருந்தவ ராவரென்பது இனிது போதரும்.

(தொடரும்)

நாவலர் சோமசுந்தர பாரதியார்