தலைப்பு-பண்பாடு சிறக்கத் திருக்குறள், அ.கி.ப. :thalaippu_thirukkural_payilaveandum_a.ki.pa.

பண்பாடு சிறக்க உலக மக்கள்

திருக்குறள் பயில வேண்டும்

  தமிழர்கள் ஏன் பிற மக்களும் பண்பாட்டை அடைய வேண்டுமானால், பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கும் ஒப்புயர்வற்ற அருந்தமிழ் மறையாகிய திருக்குறளைப் பயில வேண்டும். வள்ளுவர் பண்பாட்டுக் களஞ்சியமாக விளங்கியவர் என்பதை அவரது திருக்குறளால் நன்குணரலாம். அவர் இளமை தொட்டே கருத்து வளம் மிக்க நூல்கள் பல பயின்று, அறமனப்பான்மையுடன் குடும்பத்தோடு வாழ்ந்து, குழந்தைகள் மீதும் தாயின் மீதும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மீதும் தணியாத அன்பு கொண்டு, நாம் வாழ, நல்லுலகம் வாழ, நமது பண்பாடு வளர அரிய கருத்துகளைத் திருக்குறளில் அள்ளி வழங்கியுள்ளார். அவர் சமுதாயத்தைக் கூர்ந்து நோக்கிக் குறைகளைக் கண்டு அவற்றை நீக்க வழிவகைகளையும் வகுத்துக் காட்டியிருக்கிறார். அவர் சிந்தனையின் சிற்பியாகிச் சீர்திருத்தச் செம்மலாகிப் பழமையானது என்று பழமையைப் போற்றாது புதியது என்று புதுமையைப் புறக்கணிக்காது நல்லனவற்றைப் போற்றி அல்லனவற்றைத் தூற்றி, அவற்றைக் கடுமையாக எதிர்த்து மென்மையான முறையில் புரட்சி செய்திருக்கிறார்.

  • பைந்தமிழ்ப் புலவர் அ.கி.பரந்தாமனார்