பிறப்பால் வேறுபடுத்துபவன் செத்தவனாவான்! (குறள் கருத்து) – தமிழ நம்பி
ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். – குறள் 214.
இக்குறள் அறத்துப்பாலில் ‘ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் நான்காவதாகும். இதன் பொருள் :
மாந்தராய்ப் பிறந்தவர் அனைவரும் ஒப்பானவர், சமமானவர், ஒத்தவர் என்பதை அறிகின்றவனே உயிர்வாழ்கின்றவன் ஆவான். மற்றையான் செத்தாருள் ஒருவனாக – நடைப்பிணமாக – வைத்து எண்ணப்படும் என்பதாகும்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ – என்று 972-ஆம் குறளிலும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். எல்லா உயிர்களும் சமமானவை என்று அறியாதவன் நடைப்பிணமாகக் கருதப்படுவதால், அஃறிணையைக் குறிப்பிடுவதைப் போல ‘செத்தாருள் வைக்கப்படும்!’ என்று கூறுகிறார். உரையாசிரியர் மணக்குடவரும், ‘பெருமை குலத்தினால் அறியப்படாது‘ என வள்ளுவர் கூறுவதாகத் தெளிவிக்கிறார். ‘பெருமையும் சிறுமையும் தான்தர வருமே‘ என்று ‘வெற்றிவேற்கை‘யும் கூறும். ‘ஆக்கும் அறிவினல்லது பிறப்பினால் மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க’ என நன்னெறியும் நவிலும்.
தந்தை பெரியார், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் பெருங் கொடுமையைத் தம் வாணாள் முழுமையுங் கடுமையாக எதிர்த்து வந்ததோடு அதுகுறித்த அறிவையும் உணர்வையும் ஊட்டி, மாந்தருக்குள் வேறுபாடு கற்பித்த கயமையையும் கடுமையாகச் சாடிவந்ததைத் தமிழர் நன்கறிவர். பிறப்பிலேயே உயர்வு தாழ்வென்று மாந்தரைக் கூறுபோடும் ஆரிய வேதங்களும் ‘மனுதர்மம்’ முதலான மாந்த நேயமற்று, ஒருசாரார் உயர்வுக்கே எழுதப்பெற்ற நூல்களும், இக்காலத்தும் நயன்மை உணர்வற்ற கரவான கழிமிகு தன்னலப் போக்கரால் உயர்த்திப் பிடிக்கப்படுவதையும் நடுவுநிலை நன்னெஞ்சர் விளக்கி வருகின்றனர்.
இவ்வகைக் கொடிய நிலைகளைக் கண்டறிகிற போதெல்லாம், காரறிவாளர் மிகத் திறமையாகத் திணித்த சாதியால் கூறு பட்ட தமிழர்கள் தமக்குள்ளேயே தாக்கிக்கொண்டு அழிகின்ற இழிவைக் காணும்போதெல்லாம், இக்குறள் கூறும் உண்மையைத் தமிழர்கள் உணர்ந்து தெளிந்திடாமை நெஞ்சைப் புண்ணாக்கி நோவுறுத்துவதாக இருந்துவருகிறது.
குறளைப் படிக்கும்போதே எளிதில் பொருள் விளங்குகிறது. குறள் பொருத்தமான எதுகையோடு அமைந்துள்ளது. முதலடியில் முதற்சீர் மூன்றாம் சீர்களில் மோனை அமைந்துள்ளது. குறள் இனிய ஒழுகிசைச் செப்பலோசையில் அமைந்துள்ளது.
Leave a Reply