(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் தொகுப்புரை 4/7 தொடர்ச்சி)

  

 

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம்,

தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி

திருநெல்வேலி

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம்

கட்டுரைத் தொகுப்பு நூல்

தொகுப்புரை 5/7

 

  “சி.இலக்குவனாரின் பழந்தமிழ் இயல்புகள்” குறித்துத் தொகுப்புரையை அளித்துள்ளார் முனைவர் வெ.சஞ்சீவராயன்; பதினொரு தலைப்புகளில் பழந்தமிழைப் பாங்குடன் ஆய்ந்தவற்றை விளக்கி அவற்றின் சுருக்கத்தைத் தந்துள்ளார்; இலக்குவனாரைப் பொருத்தவரையில் பழந்தமிழ் என்பது தொல்காப்பியத்திற்கும் சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்ட நெடியதொரு காலத்தில் வழங்கிய தூய்மையான தமிழாகும் என்றும் விளக்குகிறார்.

    “சி.இலக்குவனாரின் திருக்குறள் எளிய பொழிப்புரை” குறித்து  இரா.பபித்திரா இந்நூலைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் விளக்கியுள்ளார். இலக்குவனார், பண்டித நடையில் இல்லாமல், எல்லாரும் விளங்கிக் கொள்ளும் வகையில், வடமொழிச் சார்பற்றதாய், நல்ல தமிழில், உரை விளக்கம், புதுப் பொருள், வேறுரை, மாற்றுரை வழங்கியுள்ளார்; பெரும்பாலும் பழைய உரைகள் கூறும் பொருள்களுக்கு மாறுபட்டு வேறுபொருள்கள் காண்கிறார்; சிறுபான்மை முந்தைய உரைப்பொருள்களைத் தழுவுகிறார்; ஆரியக் கருத்துச் சார்பான பிடியிலிருந்து முற்றும் விடுபட வேண்டும் என்ற உறுதியான கொள்கையுடன் உரை வகுத்துள்ளார் என்கிறார்.

  சங்கக்காலம் பொற்காலம் என்பதைச் சான்றாதாரங்களுடன் விளக்கியுள்ளார் சி.இலக்குவனார்; அவர் முன் வைக்கும் “சங்கக்காலத்தமிழர் வாழ்வியல் குறித்த உய்த்துணர்வுகள்”  யாவை என முனைவர் க.விசயன் நம் கண் முன் நிறுத்துகிறார். தமிழரின் வரலாறு முழுமையாகவும் தெளிவாகவும் எழுதப்பெறவேண்டுமாயின் சங்கஇலக்கியங்கள் வழி வரலாறு எழுதப்பெற வேண்டும்; தமிழிலக்கியமே பழந்தமிழர் வரலாறு அறிவிக்கும் மூலங்களுள் முதன்மையானது; திருக்குறள் சங்க இலக்கியமே; எனப் பேராசிரியர் இலக்குவனார் வலியுறுத்தும் கருத்துகளை நமக்கு எடுத்துரைத்துள்ளார்.

  “இலக்குவனார் காட்டும் சங்கக்காலத் தமிழரின் வாழ்வியல்”  குறித்து முனைவர் தமிழ்ச்செல்வி தினகரன் நன்கு விளக்கியுள்ளார்; மக்கள், இல்லறம், கல்வி, கடவுட் கொள்கை, பிறப்பு இறப்பு, திருமண முறை, பொழுதுபோக்கு, ஆடவர்க்குரிய விளையாட்டு, மகளிர்க்குரிய விளையாட்டு, இருபாலருக்கும் உரிய விளையாட்டு, சிறுவிளையாட்டு எனப் பல்வகையிலும் பகுத்துத் தந்துள்ளார்; பழந்தமிழர்கள், வாழ்வின் அறநெறிகளையும் உயர்பண்பாட்டையும் கடைப்பிடித்து உலக மக்களுக்கு வழிகாட்டும் ஓர் ஒளி விளக்காய் வாழ்ந்துள்ளனர் என  இலக்குவனார் பழந்தமிழர்கள், வாழ்வின் அறநெறிகளையும் உயர்பண்பாட்டையும் கடைப்பிடித்து உலக மக்களுக்கு வழிகாட்டும் ஓர் ஒளி விளக்காய் வாழ்ந்துள்ளனர் என  இலக்குவனார் சங்க இலக்கிய விளக்கம் மூலம் அறியமுடிகிறது என்கிறார்.

   “சி.இலக்குவனாரின் மொழிப்புலமை”யை முனைவர் மா.செல்வத்தரசி எடுத்துக் காட்டி விளக்கியுள்ளார்;  அவரின் ‘பழந்தமிழ்’ நூலில் மொழி, எழுத்து, அவை உணர்த்தும் கருத்துகளைச் சான்றுகளுடனும் தமிழ் எழுத்துகளின் சிறப்புகளைப் பிற மொழி எழுத்துகளுடன் ஒப்பிட்டும் உணர்த்துவதை உரைத்துள்ளார்; உலகில் உள்ள மொழிகளில் முதுலில் தோன்றியது தமிழ் எனவும் எழுத்து  முறையை முதலில் அமைத்துக் கொண்டர் தமிழர் எனவும் தமிழ்-ஆரியமொழி வேறுபாடு குறித்தும், ஆராய்ந்துள்ளதைத் தெரிவிக்கிறார்.

  தொல்காப்பிய ஆராய்ச்சி வெளிப்படுத்தும் “இலக்குவனாரின் இலக்கணப் பார்வையை”   முனைவர் இரா.உமாதேவி பருந்துப் பார்வையாக நமக்குக் காட்டியுள்ளார். இலக்குவனார் தொல்காப்பிய இலக்கண ஆய்விலிருந்து தமிழ்மொழியின் சிறப்பையும் பழமையையும் விவரிக்கிறார்; அசை அழுத்தத்தால் தமிழில் வேறுபடும் முறையினையும் சான்றுடன் விளக்கியுள்ளார்; மிகப்பழங்காலத்திலேயே தமிழ்மொழி அடைந்துள்ள ஒலி வரையறை மாண்புகளை உணர்ந்து ஒவ்வொரு தமிழனும் பெருமிகதம் கொள்ள வேண்டும் என உணர்த்துகிறார்; தொல்காப்பியத் தோற்றம், பழமை, சிறப்பு ஆகியவற்றையும் உரைத்துள்ளார் என  இவர் நமக்குத் தெரிவிக்கிறார்.

 “மாமூலனாரின் பாடல்களில் வெளிப்படும் இலக்குவனாரின்  ஆய்வுச் சிந்தனைகள்” தலைப்பில்,  தெளிவுரைகளுடன் பல்வேறு ஆய்வுக் கருத்துகளையும் தெரிவித்துள்ளமையைப்  பேராசிரியர் மு.செந்தில்குமார் எடுத்தாளுகிறார்.  மாமூலனார் பெயர்க்காரணம், நன்னன் பெயரில் பல சிற்றரசர்கள் இருந்த செய்தி, கோசர்கள் பற்றிய ஆய்வுக்குறிப்பு, வெண்ணிப்போர், வடக்கிருத்தல், கரிகால் வளவன், பண்டைத் தமிழகத்தின் எல்லை, கள்வர்,  மழவர், சேரி முதலான பல்வேறு சொற்கள் பற்றிய  காரணக் குறிப்புகள் என வரலாறு சார்ந்த இலக்குவனாரின் ஆய்வை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில்  தோன்றிய ‘திராவிட’ என்ற சொல்லே ‘தமிழ்’ என வழங்கலாயிற்று  என்ற தவறான கூற்றை மறுத்து கி.மு.விலேயே தமிழ் வழங்கப்பட்டதை இலக்குவனார்  ஆய்ந்துரைப்பதையும்  ஆய்வாளர் கூறுகிறார்.

  மொழியியல், இலக்கணம், தமிழர் பண்பாடு, இலக்கியம், கால ஆய்வு குறித்துத் தரவுகளின் வழியே நிறுவியுள்ளமையைத், “தமிழியல் ஆய்வில் சி.இலக்குவனார்” என்னும் தலைப்பில் முனைவர் நா.இரேணுகா தொகுத்தளித்துள்ளார். இலக்குவனார்,தொல்காப்பியர் காலத்தை, வெறுமனே உணர்வு மேலிட வரையறுக்காமல், சான்றுகளினூடாக உணர்த்தும் ஆய்வுப் பண்பை மேற்கொண்டார்; தமிழியல் ஆய்வு கடந்தும் பல நிலைகளிலும் தமிழுணர்வுடன் செயலாற்றினார் என்றும் தெரிவித்துள்ளார்.

  “சி.இலக்குவனாரின் இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியலில் காணலாகும் பழக்கவழக்கங்கள்” என்பதன் மூலம்,  பழந்தமிழர் பழக்கவழக்கங்கள், சடங்குகள் பற்றிய செய்திகளை முனைவர் வே.சிவ.அரிபிரம்மசங்கர் நமக்கு வெளிப்படுத்துகிறார்; சங்க மக்களின் வாழ்வியல் வழக்காறுகள், பிறப்பு தொடர்பான வழக்கங்கள், நடுகல் முதலான இறப்பு தொடர்புடைய சடங்குகள், ஆகியவற்றை இலக்குவனார் இலக்கிய அகச்சான்றுகளுடன்  புலப்படுத்தியுள்ளதையும் தெரிவிக்கிறார்.

 தமிழர் வாழ்வியல் தொடர்பான பல கருத்துகளை எளிய மரபு நடையில் அளிக்கும் “இலக்குவனாரின் கவிதைப்பணி” குறித்து ஆய்வாளர் விசயலட்சுமி நயமுடன் நல்கியுள்ளார். இலக்குவனாரின் எழிலரசி, துரத்தப்பட்டேன், அறிஞர் அண்ணாவிற்குப்பாவியல் வாழ்த்து ஆகியவற்றில்இருந்து மேற்கோள் காட்டி, மரபு,  பழமொழிகள்,இராமாயணச் செல்வாக்கு, சங்க இலக்கியச் செல்வாக்கு,  சமூக அக்கறை, தமிழர் மனப்பான்மை என்னும் தலைப்புகளில் ஆய்வாளர் விளக்குகிறார்.

  “இலக்குவனார் பார்வையில் தொல்தமிழர்வாழ்வு” மூலம்  மதிப்பீடுகளுடன் கூடிய வாழ்வாக,  உயர்ந்த நாகரிகமும்  சிறந்த பண்பாடும்  உடைய வாழ்வாக, மேம்பட்டநிலையில் முன்னோர் வாழ்ந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார் முனைவர் க.இலதா; சி.இலக்குவனார்  மொழியைப்பேணி வளர்க்கக் கழகம் அமைத்தவர்கள் தமிழர்கள்தாம், நீரின் தேவையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் தமிழர்களே என்பனவற்றைப் பதிவு செய்துள்ளார்; தொல்தமிழர் இல்லற வாழ்வையும்  மெய்யுணர்வுக் கொள்கையையும் குறிப்பிடுகிறார் என்கிறார்; சங்கத்தமிழர் வாழ்வியல் நூல்வழி, தொல்தமிழரின் வாழ்வியலையும் இன்றைய தலைமுறை அவற்றை அறிந்துகொள்ள வேண்டிய தேவையையும் ஒருங்கே உணர்த்துகிறார் இலக்குவனார் என்றும் விளக்கியுள்ளார்.

 பேராசிரியர் இலக்குவனார் பிற ஆசிரியர்களைவிட ஆழமாகவும் நுணுக்கமாகவும் சிந்திப்பவர்; முன்னோர்களின் அருமை பெருமைகளை  அரும்புதையல்களாம் சங்க இலக்கியங்கள் வழி உணர்த்திச் செல்கிறார்; பாடல் விளக்கத்துடன் இலக்கணக் குறிப்புபற்றிய செய்திகளையும் நமக்கு அளிக்கிறார்; பழமொழிகள், உவமைகள் மூலமும் விளக்குகிறார்; கதைகூறும் முறைபோன்ற உத்தியைக்  கையாண்டுள்ளார்; தமது சிந்தனைகளைப் பலவிதங்களில் பல கோணங்களில் புலப்படுத்துகிறார்; ஆய்வுமுறையால் தனக்கென சிறப்பானதோர் இடத்தைத் தக்க வைத்துள்ளார்;  இவ்வாறு “இலக்குவனாரின் புலப்பாட்டு நெறி”  என்ன என்பதை நமக்கு முனைவர் ஆ.(இ)ரந்திர்குமார் முனைப்புடன் விளக்கியுள்ளார்.

  “இலக்குவனார் காட்டும் பழந்தமிழர்கள்”  குறித்து முனைவர் பா.நேரு நன்முறையில் விளக்குகிறார்; காதல்வாழ்வு, திருமணமுறை, குழந்தைச் செல்வம், காளையர் கடன், அன்னையர் இயல்பு, செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுத்தும் அறவாழ்வு,  புலவர்களின் அறிவுரைகளை மதிக்கும் பண்பில் சிறந்த மன்னர்கள், கற்புநெறி போற்றும் அரசர்கள், உலகப்பொதுமை யுணர்வு, ஒற்றுமை, உயர்ந்த அணிகலன்கள், நேர்மையான வணிக நெறி, காலம்பற்றிய அறிவு,முத்தமிழறிவு,மக்களுக்குச் சுமையில்லா வரிவிதிப்பு முறை, கடவுள் கொள்கை எனப் பல்வகைப் பண்புநலன்களும் ஆட்சிச்சிறப்பும் கொண்டிருந்தனர் என்பனவற்றைப் பேராசிரியர் ஆய்ந்துரைப்பதைக் கூறுகிறார்; இந்தியர் நாகரிகம் என்பதில் பெரும்பகுதி பழந்தமிழ் நாகரிகம் என நிறுவியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளார். இலக்குவனாரின்  ‘பழந்தமிழ்’ நூலில் இடம் பெற்றுள்ள ‘பழந்தமிழும் தமிழரும்’ என்னும் கட்டுரை அடிப்படையில் தன் கட்டுரையை அளித்துள்ளார்.

  “இலக்குவனாரின் புலப்பாட்டு நெறி”யை முனைவர் பா.வேலம்மாள் பாராட்டி வழங்கியுள்ளார்; பழந்தமிழ் வரலாற்றைத் தொகுத்தும் பகுத்தும் விரித்தும் செறிவாகவும் நிறைவாகவும் கூறியுள்ளார் என்கிறார். மேலும், உணர்ச்சிப்போக்கான நடை, வினா-விடை சொல்லும் பாங்கு, அட்டவணைப்படி புலப்படுத்தல், சான்றுகள்தந்து ஒப்பிட்டு விளக்குதல், துணைத்தலைப்புகள் தரல், இலக்கியச்சொல்வாக்கு  என்ற முறையில் அமையும்  இலக்குவனாரின் புலப்பாட்டு நெறியை அவரின் ‘பழந்தமிழ்’ நூல் மூலம் விளக்கியுள்ளார்; திராவிட முதல்மொழியே  தமிழ்க்குடும்பங்களின் தாய், அதுவே பழந்தமிழ் எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் நிறுவியுள்ளதையும் எடுத்துரைக்கிறார்.

இலக்குவனார்திருவள்ளுவன்

thiru2050@gmail.com

www.akaramuthala.in