மக்கள் தந்தைக்குச் செய்யும்கடன், புரோகிதர்களுக்குப் பொன்னும் பொருளும் அளிப்பதல்ல – சி.இலக்குவனார்
மக்கள் தந்தைக்குச் செய்யும்கடன், புரோகிதர்களுக்குப்
பொன்னும் பொருளும் அளிப்பதல்ல!
மக்கட்பேறு எற்றுக்கு என்ற வினாவுக்கு விடையாகப் பரிமேலழகர் கூறுகின்றார் : “புதல்வரைப் பெறுதல், அஃதாவது இரு பிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படும் கடன் மூன்றனுள் முனிவர் கடன் கேள்வியானும் தேவர் கடன் வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லாது இறுக்கப்படாமையின், அக்கடன் இறுத்தற் பொருட்டு நன்மக்களைப் பெறுதல். ஆகவே, மக்களின் கடன் தென்புலத்தார்க்குக் கடன் செலுத்துதல் ஆகும் என்று நம்பி வந்தனர் என்று தெரிகின்றது. தென்புலத்தார் என்பவர் பிதிரர் ஆவார். படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டது கடவுட் சாதி. அவர்க்கிடம் தென் திசையாதலின் தென்புலத்தார் என்றார்.” இவ்வாறு கூறுபவர் பரிமேலழகர். பிதிரர் என்பார் இறந்துபோன முன்னோர் அலலர் என்பது அவர் கருத்து. ஆனால், இன்று பெற்றோர் இறந்துபோனால், அவரை நினைத்து அவர்தாம் பிதிரர் என்று கருதி அவர்தம் மக்கள் அவர் இறந்தநாளில் புரோகிதரை அழைத்துப் பொன்னும் பொருளும் கொடுக்கின்றனர். திதி, திவசம், சிரார்ததம் என்றெல்லாம் இதனை அழைப்பர். மக்கள் தம் தந்தைக்குச் செய்யும் கடன் இதுதான் என்று இன்றும் பலர் கருதுகின்றனர். ஆனால், வள்ளுவரோ இதனை ஏற்றுக் கொண்டார் இலர். வெளிப்படையாகவே மறுத்துள்ளார்.
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் என்னும் சொல்”
என்று முழங்கினார். மகன் தந்தைக்குச் செய்யும் கடனாவது எல்லா வகையாலும் சிறந்து விளங்கும் இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்று உலகத்தார் சொல்லும் சொல்லை உண்டாக்குதல் ஆகும் என்பது இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்துமன்றோ?
– பேராசிரியர் சி.இலக்குவனார்,
திருவள்ளுவர் – தமிழகத்தின் முதல் புரட்சியாளர்
குறளமுதம் பக்கம் 524-525
Leave a Reply