thevaneya paavvanar01

  இவ்வுலகத்தினர் எல்லாரும் இருமைப் பயனும் எய்தி இன்புறுமாறு. எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் ஏற்றவாறு. வாழ்க்கைக்கு வழி வகுத்து அதில் நடந்தும் காட்டிய வள்ளுவர் தமிழ்ப் புலவருள் தலையாயார் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவாம்.

  இத்தகைய தலைமை சான்ற வள்ளுவரை, வேண்டுமென்றே ஆரிய வழியினராகக் காட்ட வேண்டி, பிராமணத் தந்தைக்குப் பிறந்தவராகக் கூறுவது ஒருசார் புறத் தமிழர் மரபு. இனி, இதற்கு எதிராக அவரை உயர்த்திக் காட்டுதற் பொருட்டு உண்மைக்கு மாறாய் உயர்வாகக் கருதப் பெறுகின்ற ஒரு குலத்தினராகக் கூறுவது, ஒருசார் அகத்தமிழர் மரபு. பிறப்பால் சிறப்பில்லையென்றும் ஒழுக்கத்தால்தான் உயர்வு என்றும் கூறிய வள்ளுவரை, அவர் கொள்கைக்கு மாறாகப் பிறப்பால் இழிந்தவராகக் கருதுவது எத்துணைப் பேதமை!

  திருவள்ளுவர் தம் முதற் குறளில் ஆண்டுள்ள ‘ஆதி பகவன்’ என்னும் தொடரை, துரும்பைத் தூணாக்குவது போலும் பேனைப் பெருமாளாக்குவது போலும் மிகப் பெரிதாக்கி, அது அவரின் பெற்றோர் பெயரைக் குறிப்பதாகக் கொண்டு மயங்கி இடர்ப்படுகின்றனர். பல்வேறு சாரார் பகவன் என்பது பகுத்தளிப்பவன் அல்லது படியளப்பவன் என்று பொருள்படும்தென் சொல். பகவு,  முதனிலை; அன் ஈறு. பகு+உ = அல்லது அவு = பகவு எல்லாவுயிர்க்கும் படியளித்துக் காப்பவன் இறைவன். Lord என்னும் ஆங்கிலச் சொற்கும் இதுவே பொருள் Hlafora – Loal, Ward-Bread – Keeper. பகவன் என்னும் சொல் நாளடைவில் முனிவரையும் குறித்துப் பொருளிழிந்து விட்டதனால், முழு முதற் கடவுளைக் குறிக்க ஆதி என்னும் அடை வேண்டியதாயிற்று. ‘ஆதி’ வட சொல்லே அது போன்று வேறொரு சில வட சொற்களும் திருக்குறளில் உள. அதனால் அந்நூற்கு இழுக்கில்லை. ஒரு மர நாற்காலியில் இரண்டோர் இருப்பாணியிருப்பதால். அது இருப்பு நாற்காலியாகிவிடாது. அதுபோல் ஒரு சில வட சொலுண்மையால், திருக்குறளும்,  தன் தமிழ்மையை இழந்துவிடாது. ஆதி பகவான் என்பது முதற் கடவுளைக் குறிக்கும் தொடராயின், இடையில் வலிமிகல் வேண்டுமே என்று சிலர் வினவலாம். மூவகைப் புணர்ச்சித் திரிபுகளுள் ஒன்றான தோன்றல், பண்டை நாளில் ஏனையிரண்டு போல அத்துணைக் கட்டாயமாக விருந்ததாகத் தெரியவில்லை. இன்றும் இருவகை வழக்கிலும் வலி மிக வேண்டுமிடத்து மிகாமல் வழங்கும் சில தூய தமிழ்த் தொடர்களும் உள.

எடுத்துக் காட்டு: கார்காலம்

கோவூர் கிழார்

பேறு காலம்

நாடுகிழவோன்.

இவற்றுட் பின்னிரண்டும் இலக்கணப்படி நிலைமொழியீற்று வலியிரட்டித்து வலி மிக வேண்டும்.

இனி, அகர முதல எழுத்தெல்லாம் ஆங்குப்

பகவன் முதற்றேயுலகு.

என்று பாடமோதின், எவ்வகை இடர்ப்பாடுமில்லை. உவமை நிரம்புவதுடன் சொல்லும் தூய்மைப்படும்.

  ஆதிபகவன் என்பது திருவள்ளுவரின் பெற்றோரைக் குறிக்கும் தொடரென்று கொண்டாருள் முதல்வரான ஞானாமிர்த நூலார், வள்ளுவரை யாளிதத்த முனிவர்க்கு ஆதி என்னும் புலைச்சியிடம் பிறந்தவராகக் கூறுகின்றார். அவர் கருத்துப்படி, பகவன் என்பது முனிவரைக் குறிக்கும் பொதுப் பெயர், யாளிதத்தன் என்னும் இயற்பெயர் முற்றும் புதுப்படைப்பு, ஞானாமிர்த ஆசிரியர் காலம் இன்றைக்கு எழுநூறாண்டிற்கு முன் என்பர்.

கி.பி.18ஆம் நூற்றாண்டு போல் இயற்றப்பட்டதாகத் தெரிகின்ற கபில அகவல் என்னும் சிறு சுவடி, ஒரு வள்ளுவர் பிறப்பைப் பற்றிப் பின் வருமாறு வரைகின்றது.

‘‘பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதி என்னும் கருவூர்ப்புலைச்சிக்கும் புதல்வர் மூவரும் புதல்வியர் நால்வருமாக எழுவர் மக்கள் பிறந்தனர். அவருள் உப்பை ஊற்றுக் காட்டு வண்ணார் வீட்டிலும், உறுவை காவிரிப் பூம்பட்டணத்துக் கள்விலைஞர் வீட்டிலும் வள்ளுவர் மயிலைப் பறையர் வீட்டிலும், வள்ளி குறவர் வீட்டிலும் அதிகமான வஞ்சி அதிகன் வீட்டிலும், கபிலர் ஆரூர்ப் பிராமணர் வீட்டிலும், ஔவை பாணர் வீட்டிலும் வளர்ந்தனர்.

  இவ்வரைவில், வரலாற்றுத் தொடர்புள்ள கடைக் கழகக் காலப் புலவர் புலத்தியர் பேரும், ஒரு மன்னன் பெயரும், வரலாற்றுத் தொடர்பற்ற சில புனைபெயரும், குமரிக் கண்டத்துக் குறிஞ்சிப் பெண் தெய்வத்தின் பெயரும், கடுகளவும் பொருத்தமின்றிக் கலந்துள்ளன.

    இதுவன்றி:

‘மேல்வகை கீழ்வகை விளங்குவ தொழுக்கால்

ஒருவகைச் சாதியாம் மக்கட் பிறப்பு.’’

‘‘பூசுரர்ப் புணர்ந்து புலைச்சிய ரீன்ற

பூசுர ராயினோர் பூசுர ரல்லரோ’’

‘‘சேற்றிற் பிறந்த செங்கழு நீர்ப்போல்’’

என்று முன்பின் முரண்பட்ட பொருட்டொடர்களும் இக்கபிலர் அகவலில் உள. இதனால், இவ்வகவல் ஆராய்ச்சிக் குதவும் சான்றாகாது.

இனி, திருவள்ளுவ வெண்பா மாலையில், நல்கூர் வேள்வியார் செய்யுளாக வந்துள்ள,

‘‘உப்பக்க நோக்கி உபகேசி தோண் மணந்தான்

உத்தர மாமதுரைக் கச்சென்ப – இப்பக்கம்

மாதாநு பங்கி மறுவில் புலச் செந்நாப்

போதார் புனற் கூடற் கச்சு’’

என்னும் வெண்பாவைத் துணைக் கொண்டு, பண்டித கோவிந்தராச தாசர், (வள்ளுவர் குலத்தைச் சேர்ந்த) கச்சன் என்னும் தந்தையார்க்கும் உபதேசி என்னும் தாயார்க்கும் திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறினர். இது வலிந்தும் நலிந்தும் கொண்ட பொருளாதலால், இதுவும் ஆராய்ச்சிக்குரியதன்று.

  இனி நாவலர் சோமசுந்தர பாரதியார்,

‘‘வள்ளுவன் சாக்கையெனும் பெயர் மன்னர்க்

குள்படு கருமத் தலைவர்கொன்றும்’’.

என்னும் பிங்கல நூற்பாவிலுள்ள ‘‘உள்படு கருமத் தலைவர் என்னும் தொடர்க்கு மாளிகை நாயகம் என்று பொருள் கொண்டு வள்ளுவரை ஒரு பாண்டிய வேந்தனின் மாளிகை நாயகமாயிருந்த உயர்குல வேளாளராகக் கொண்டார். உள்படு கருமத் தலைவர் என்பது அரசனொடு நெருங்கிய தொடர்புள்ள வினைத் தலைவர் என்று மட்டும் பொருள் படுமேயன்றி மாளிகை நாயகம் என்று பொருள்படாது. அரசுனுக்கு அகப்பணி செய்வார். அனைவரும் அரசனுக்கென்றே ஒதுக்கப்பெற்றவராவர். எத்துணை வருமானம் வரினும் அவர் பிறர் பணியை மேற்கொள்ளார்; மேற்கொள்ளவும் முடியாது. அவ்வப்போது அரசனது மன நிலையை அறிந்து,        அதற்கேற்றவாறு இன்பக் கூத்து நகைக்கூத்து மறக்கூத்து முதலியவற்றை அரசனுக்கும் அவனால் அழைக்கப்பெறும் உறவினர்க்கும் அதிகாரிகட்கும் நடித்துக்காட்டுபவன் சாக்கையன். அரசனுடைய கட்டளைகளை மட்டும் அன்றன்று யானைமேலேறிப் பறையறைந்து தலைநகரத்தார்க்கு அறிவிப்பவன் வள்ளுவன்.

சாக்கையன், வள்ளுவன் என்னும் இவ்விருவரும் அரசன் பணிகளையே செய்பவராதலின் உள்படு கருமத் தலைவர் எனப் பெற்றார்.

(தொடரும்)

குறள்நெறி : சித்திரை 19, தி.பி.1995 / 01.05.1964