வள்ளுவர் வகுத்த அரசியல் 2. நல் அரசு இயல்
– –குறள்நெறிக் காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(29 திசம்பர் 2013 இதழ்த் தொடர்ச்சி)
அ. செங்கோன்மை
நாடு, அதைக் காப்பதற்குரிய அரண், படை, பொருள் ஆயவைபற்றி அறிந்தோம். இனி நாட்டில் ஆட்சிமுறை எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று ஆராய்வோம். மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ஆட்சி எப்படியிருக்கும், தீமை பயக்கும் ஆட்சி எது, ஆட்சி புரிவோர் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்று தெரிதல் வேண்டும். நன்மை பயக்கும் ஆட்சியைச் செங்கோன்மை என்பர். செங்கோல் என்பது வளைவில்லாத கோல். வளைவு இல்லாத கோல்போல் ஆட்சியும் வளைவில்லாது இருத்தல் வேண்டும். வளைவில்லாத ஆட்சி என்றால் நடுநிலை தவறாத நேர்மையான ஆட்சியின் அடையாளமாகச் செங்கோலைக் கொண்டுள்ளனர். செங் கோல்+மை = செங்கோன்மை.
1.
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே முறை.
[ஓர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள் 541)]
ஓர்ந்து – ஆராய்ந்து, கண்ணோடாது – வேண்டியவர் என்று அன்பு காட்டாது, இறைபுரிந்து – ஆட்சி புரிந்து, யார்மாட்டும் – எவரிடத்தும், தேர்ந்து – நன்கு ஆராய்ந்து, செய்வதே – ஆளுதலைச் செய்வதே, முறை-ஆட்சி முறையாகும்.
மக்கள் தவறான வழியில் செல்லாமலிருக்குமாறு பார்த்துக்கொள்வதே ஆட்சியின் முதன்மையான கடன். தவறான வழியில் செல்லும் மக்களை அறிந்து தண்டித்து நேர்வழிப்படுத்த வேண்டும். அவ்விதம் குற்றம் செய்தவர்களை நல்வழிப்படுத்தப் புகுங்கால் தமக்கு வேண்டியவர் என்று குற்றம் புரிந்தோரை விட்டுவிடுதலும், வேண்டாதார் என்று குற்றம் புரியாதரைக் குற்றம் புரிந்தாராக ஆக்கி ஒறுத்தலும் (தண்டித்தலும்) நல்லாட்சியன்று. ஆதலின், நன்கு ஆராய்தல் வேண்டும்; எவரிடத்தும் விருப்பு இன்றி முறை செலுத்துதல் வேண்டும்.
2.
வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
[வான்நோக்கி வாழும் உகுலஎலாம்; மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி. (குறள் 542)]
உலகு எலாம்-உலகத்தில் உயிர்கள் எல்லாம், வான் நோக்கி – மழையை எதிர்பார்த்து, வாழும் – உயிர் வாழும்; குடி-குடிமக்கள், மன்னவன் – அரசனின், கோல்-ஆட்சிமுறைமையை, நோக்கி – எதிர்பார்த்து, வாழும் – வாழ்வார்கள்.
உலகத்திற்குக் காற்றுக்கு அடுத்தபடியாக மிகமிக இன்றியமையாதது நீர்; நீர்க்கு வேண்டற்பாலது மழை. மழையால்தான் உலகம் வாழ முடியும். துன்பமின்றி வாழ்வதற்கு நல்லாட்சி வேண்டும். நல்லாட்சி இல்லா நாட்டுமக்கள் அமைதியாக இன்ப வாழ்வு வாழ முடியாது. உயிர்வாழ்க்கைக்கு நீர் இன்றியமையாததுபோல, நல் வாழ்க்கைக்கு நல் ஆட்சி இன்றியமையாதது.
வான் = ஆகாயம், வானத்திலிருந்து பெய்யும். மழையை ’வான்’ என்றது இடஆகுபெயர் என்னலாம்.
’கோல்’நோக்கி வாழ்தல் என்பது ஆட்சியின் பாதுகாவலனை எதிர்பார்த்து வாழ்தல். துன்பங்களினின்றும் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆட்சியைச் சார்ந்தது. ஆதலின், ஆட்சியில்லையேல் மக்கள் அல்லல்படுவர்; மக்கள் வாழ்க்கை காட்டில் வாழும் விலங்கு வாழ்க்கைக்கு ஒப்பாகும். கோல் போன்ற செவ்விய ஆட்சியைக் ’கோல்’ என்றது உவமை ஆகுபெயர் எனலாம்.
3.
அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்.
[அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (குறள் 543)]
அந்தணர் நூற்கும் – உயிர்களிடம் இரக்கம் கொண்டு தொண்டாற்றும் பெரியோர் வெளியிடும் நூல்களுக்கும், அறத்திற்கும் – நல்நெறிக்கும், ஆதியாய் – அடிப்படையாய், மன்னவன் கோல்-மன்னன் ஆட்சி, நின்றது -நிலைபெற்றது.
நாட்டுமக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டும் அறநூல்கள் வேண்டும். அவ் வறநூல்களை வெளியிடுவோர் அறவோர் ஆவார். அறவோராம் பெரியோர்கள் நல்நெறி நூல்களை வெளியிட ஆட்சி வேண்டும். அறவோர் நூல்களை வெளியிடாதவாறு தடுத்தலும் கூடுமன்றே. சில நாடுகளில், உயர்ந்த கருத்துக் களைக் கொண்ட நூல்கள் தம் கொடுங்கோன்மை ஆட்சிக்கு மாறாய் இருத்தல் கண்டு, நூல்களைத் தடை செய்ததும், எழுதியவரைக் கொடுமைக்கு ஆளாக்கியதும் வரலாறுகள் கூறுகின்றன. ஆதலின், நல்நெறி நூல்கள் வெளிவர நல்லாட்சி இன்றியமையாதது. அந் நூல்களில் கூறப்படும் அறம் நிலைபெறவும் நல்லாட்சி வேண்டும்.
4.
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன
னடிதழீஇ நிற்கு முலகு.
[குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. (குறள் 544)]
குடிதழீஇ – குடிமக்களின் கருத்தை மதித்து, அவர்கள் நன்மைக்காக, கோல் ஓச்சும் – ஆட்சி செலுத்தும், மாநில மன்னன் =பெருநில அரசனின், அடிதழீஇ – அடிகளைப் பொருந்தி, உலகு நிற்கும்- உலகத்தார் அன்புடன் கட்டுப்பட்டு நிற்பர்.
முடிமன்னன் ஆண்டகாலத்தில் வள்ளுவர் வாழ்ந்தார். முடிமன்னன் எவ்வாறு ஆளவேண்டும் என்று கூறியுள்ளார். முடிமன்னனாய் இருப்பினும், தன் மனம் போனவாறு ஆளமுடியாது. அவ்விதம் ஆண்டால் சார், லூயி, சார்லசு ஆகியோராம் மேனாட்டு மன்னர்கள்போல் துன்புற வேண்டியதுதான். குடிமக்கள் கருத்தைத் தழுவி, குடிமக்களுக்காக அரசன் ஆளுவனேல், அவனுக்கு அன்புபூண்டு அவன் ஆட்சியை விரும்பி நிற்பர். ஆதலின்,
குடிமக்கள் கருத்தை மதித்து முடிமன்னனா யிருப்பினும் ஆட்சிபுரிய வேண்டும் என்பதாம்.
மன்னனே மக்கள் கருத்தை மதித்து ஆட்சி செய்ய வேண்டும் என்னும்போது, மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், மக்கள் கருத்தை நன்கு மதித்து ஆட்சிபுரிய வேண்டுமென்பது கூறாமலே விளங்கும்.
5.
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.
[இயல்புஉளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. (குறள் 545)]
பெயலும்- மழையும், விளையுளும் – விளைவிக்கப்படும் பொருள்களும், தொக்கு-ஒருங்கு கூடி, இயல்பு – நல்லாட்சியின் தன்மையை, உளி-உள்ளி (நினைத்து), கோல் ஓச்சும் – ஆட்சி செலுத்தும், மன்னவன் நாட்ட – அரசனின் நாட்டின்கண்ணவாம்.
நல்லாட்சியினையே நடத்த வேண்டுமென்று உறுதி பூண்டு, தான் செய்யும் ஒவ்வொரு செயலும் நல்லாட்சிக்கு உரியதுதானா என்று ஆராய்ந்து, ஆட்சி புரிதல் வேண்டும். அவ்விதம் ஆட்சிபுரியுங்கால், மக்களுக்கு வேண்டிய பொருள்கள் யாவை, அவற்றை உண்டாக்குவது எப்படி என்று எண்ணி எண்ணி வேண்டும் பொருள்களை உண்டு பண்ணுவதிலோ, பிற நாடுகளிலிருந்து பெறுவதிலோ கருத்துச் செலுத்தி, குறைபாடின்றிப் பெற வைப்பான். இயற்கை மழை பெய்யாவிடினும், செயற்கையிலேனும் மழை பெய்யும் முறையை அறிந்து ஆவன செய்து மழை பெய்யச் செய்வான். ஆதலின், நல்லாட்சி புரியும் மன்னவன் நாட்டில் மழையும் விளைவிக்கப்படும் பொருள்களும் உளவாம் என்று உரைத்துள்ளார்.
’இயல்புளி’ என்பதில் ’உளி’ மூன்றாம் வேற்றுமைப் பொருள்படுவதோர் இடைச்சொல் என்பர் பரிமேலழகர்.
6.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
[வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்;அதூஉம் கோடாது எனின். (குறள் 546)]
வென்றி தருவது – ஒரு நாட்டுக்கு வெற்றியைத் தருவது, வேல் அன்று – கொல்லுதலைச் செய்யும் வேல் முதலிய போர்க்கருவிகளல்ல, மன்னவன் கோல் – அரசனின் ஆட்சிமுறைமை, அதூஉம்-அவ் வாட்சி முறைமையும் (வெற்றி தருவதும்), கோடாதெனின் – வளைவுபடாமல் இருந்தால்தான் (நேர்மையாக இருந்தால்தான்).
நாட்டுக்கு வெற்றி தருவது படைப்பெருக்கமன்று. எவ்வளவுதான் படை பெருக்கமுடையதாய் இருந்தாலும் ஆட்சி நேர்மையானதாக இல்லாது போனால், தன்னாட்டு மக்களால் வெறுக்கப்பட்டு, வேற்று நாட்டார்க்கு அடிமையாக வேண்டியதுதான். ஆதலின், படைப் பெருக்கத்தினும் ஆட்சிமுறைச் சிறப்பே வெற்றியைத் தருவது எனக் கருதி நல்லாட்சி நடத்தல் வேண்டும்.
இவ் வுண்மையை பண்டைத் தமிழ்நாட்டு அறிஞர்கள் நன்கு உணர்ந்து ஆட்சியாளர்க்கு அறிவுறுத்தி வந்துள்ளனர்.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு மதுரை மருதன் இளநாகனார் அறிவுறுத்தியுள்ளதை நோக்குமின்:-
“கடுஞ்சினத்த கொல்களிறும்,
கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்;
நெஞ்சுடைய புகல்மறவரும் என
நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்“
யானைப்படையும், குதிரைப்படையும், தேர்ப்படையும், வீரர்படையும் பெற்றிருந்தாலும் மாட்சிமைப்பட்ட அறநெறியினை முதன்மையாகக் கொண்ட அரசே வெற்றி பெறும்.
7.
இறைகாக்கும் வையக மெல்லா மவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
[இறைகாக்கும் வையகம் எல்லாம்; அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். (குறள் 547)]
வையகம் எல்லாம் – உலகம் முழுதையும், இறைகாக்கும் – அரசன் செங்கோலால் காக்கும், முட்டாச் செயின்-அறநெறிக்குத் தடை நிகழ்ந்த வழியும் அத் தடையை நீக்கி, முறை கோடாது ஆட்சிபுரிவானானால், அவனை, முறை-செங்கோன் முறையே, காக்கும் – காப்பாற்றும்.
’வையகம்’ என்று கூறினாலும் ஓர் அரசனுக்குரிய நாட்டையே குறிக்கின்றது.
முட்டாமல் அரசுசெலுத்துதல்: அரசன் செங்கோன் முறைப்படி அரசு செலத்த முயலும்போது இடையூறுகள் வரலாம். ’மனுநீதிச் சோழன்’ என்ற தமிழ்மன்னன் தன் அறநெறியை நிலைநிறுத்தத் தன் மகனையே கொல்ல வேண்டிய நிலையில் இருந்தான். அறநெறி தவறி மகனைக் காப்பதா? மகனைக் கொன்று அறநெறி காப்பதா? என்ற நிலை வந்தது. அவன் மகனைக் கொன்று அறநெறி காத்தான். மக்களாட்சி நடைபெறும் இக்காலத்தில் அறநெறி தவறிப் பதவியைக் காப்பதா? பதவியைத் துறந்து அறநெறி காப்பதா? என்ற நிலைமைகள் நேரலாம். அப்பொழுது பதவியை விட்டேனும் அறமுறையைக் காத்தல் வேண்டும். அறமுறை அவரைக் காப்பாற்றும்.
8.
எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
றண்பதத்தாற் றானே கெடும்.
[எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தால் தானே கெடும். (குறள் 548)]
எண்பதத்தான் – முறைவேண்டி வந்தவர்க்குக்காட்சிக்கு எளியனாய், ஓரா – அவர் கூறியவற்றை அமைச்சருடன் நன்கு பலமுறை ஆராய்ந்து, முறை செய்யா-நீதி முறைமை செலுத்தாத , மன்னவன் – அரசன், தண்பதத்தான் – தாழ்ந்த நிலையினால், தானே கெடும் – தானே கெடுவான்.
ஆட்சித் துறையில் இருப்போர் மக்கள் பார்க்க வேண்டிய நேரங்களில் பார்க்க முடியாத நிலையில் இருத்தல் கூடாது. அச்சம், துன்பம் முதலியன இன்றித் தம் குறைகளைத் தெரிவிக்கும் வசதியில் இருத்தல் வேண்டும். அவர் கூறுவதற்கு முன்னே வாயை மூடச் செய்யாது, கூறுகின்றவற்றை நன்கு கேட்டு ஆராய்ந்து முறைமை செய்தல் வேண்டும். முடிமன்னர்கள் பலர் மக்கள் முறையீட்டைக் கேட்டு முறைமை செய்யாததனால் அடைந்த நிலைகளை வரலாறுகள் கூறுகின்றன. மக்களே மன்னர் எனப்படும் இக்காலத்தில் ஆட்சி புரிவோர், நெறிமுறைப்படி ஆட்சிபுரியவில்லையானால், மக்களால் வெறுக்கப்பட்டு மிகமிகத் துன்பத்துக்கு ஆளாவார். “அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம்” என்பது மிகத் தெளிந்த உண்மை.
9.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.
[குடிபுறம் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று; வேந்தன் தொழில். (குறள் 549)]
குடி – மக்களை, புறம் காத்து – பிறர் வருத்தாமலும் பசி, பிணி, பகை முதலியவற்றால் வருந்தாமலும் காத்து, ஓம்பி-பேணி, குற்றம் கடிதல் – குற்றம் செய்யின் குற்றத்திற்காகத் தண்டித்து அதனை மீண்டும் செய்யாமல் நீக்கல், வடு அன்று – பழியன்று, வேந்தன் தொழில்-அரசனுக்குரிய கடமையாகிய தொழிலேயாகும்.
மக்களைக் காப்பாற்றுகின்றவனே தண்டிக்கவும் வேண்டியவனாகின்றான். மக்கள் அன்பைப் பெறுவதற்கு அவர்கள் செல்லும் வழிகளில் எல்லாம் செல்ல விட்டுத் தீய நெறிகளில் போகவிட்டு விடுதல் கூடாது. கட்சி முறையில் ஆட்சி நடைபெறும் இக்காலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளோர் உள்ளத்தில் கொள்ள வேண்டியது இதுவே. தன்னை ஆட்சியில் அமர்த்திய கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காகத் தண்டியாது விட்டுவிடுதல் கூடாது. அங்ஙனம் விடாது கடிதல் ஆட்சி முறைமைக்குரிய தவிர்க்கமுடியாத கடமை என்று உணர்ந்து, ஒறுக்க வேண்டிய இடங்களில் ஒறுக்கவேண்டியதுதான். கட்சியில் செல்வாக்கிழப்பினும், நன்றி மறந்தவன் என்று பழி தூற்றினும், குற்றங்களைக் கடிதலினின்றும் நீங்குதல் கூடாது.
10.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
[கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல்,
பைங்கூழ்களைகட்டதனொடு நேர். (குறள் 550)]
கொலையின் – கொலைத்தொழிலைச் செய்தலையுடைய, கொடியாரை – கொடியவர்களை, வேந்து ஒறுத்தல் – அரசு கொலை புரிந்து கண்டித்தல், பைங்கூழ் – பசிய பயிரின்கண் உள்ள, களை கட்டதனோடு – களையை நீக்கியதுடன், நேர் ஒப்பாகும்.
திருக்குறள் இன்னா செய்தார்க்கும் இனிய செய்ய வேண்டுமென்று கூறும் அற நூலாயிற்றே. கொலைஞர்களை என் செய்யக் கூறுகின்றது? என்று ஐயம் எழலாம். கொலைக்குக் கொலைதான். கொலை புரிதல் கொடிய குற்றம் அன்றோ? ஆதலின் கொலை புரிந்தோனைக் கொன்றுதான் அறத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிறார். அறநெறியில் செங்கோல் புரிவோர் இது செய்யலாமா? என்றால், செய்யலாம். பயிர் வளர்வதற்குக் களையைப் பிடுங்கி எறிகின்றமையைச் செய்கின்றோம் அல்லவா? அவ்வாறு மக்களினம் நல்வாழ்வு வாழ இடையில் உள்ள களைகளைப் போக்க வேண்டியதுதான். கொலைக்குற்றம் புரிவோர் மக்களிடையே களை போன்றவர். அவர்களைக் களைந்துதான் மக்களினத்தைப் பாதுகாக்க வேண்டும்.
அறியாமையால் கொலைக்குற்றம் புரிந்து பின்னர் வருந்தித் திருந்துவதற்கு உரியவராயிருப்பின் நாட்டு மக்களினின்றும் பிரித்துத் தனித்து எங்கேயாவது வைத்துத் திருந்தச் செய்யலாம். திருவள்ளுவர் அவர்களைக்கூடக் கொல்லுமாறு சொல்லவில்லைதான். அவர்களைத் தண்டித்தல் பயிரினின்றும் களையைப் பிரிப்பதுபோல், மக்களினின்றும் பிரித்து வைப்பதுதான் என்று கூறுகிறார். களையைப் பிடுங்கிக் காத்துவைப்பது கிடையாது. சாகவிட்டுவிடுகின்றோம். அதுபோலக் கொலைஞரையும் கொல்ல வேண்டியதுதான் என்று பொருள் கொள்ளலாம். ஆனால், பயிர் வேறு களை வேறு ஆக இருப்பதுபோல், மக்கள்வேறு,கொலைஞர் வேறு ஆகத் தோற்றத்தால் பிறப்பால்இல்லை. ஆதலின், கொலைஞர் திருந்தினால் நன்மக்களாவர் என்றால் மக்களினின்றும் பிரித்துவைக்கின்ற சிறைத்தண்டனை யொன்றே போதும் என்ற பொருளும் கொள்ளலாம்.
பரிமேலழகர்: வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்-அரசன் கொடியவர்களைக் கொலையன் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்.
தீக் கொள்ளுவார், நஞ்சிடுவார், கருவியால் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவார் முதலியவர் கொடியவராவார்.இவர்களை எல்லாம் கொன்று தண்டிக்கலாம் என்கின்றார். நாம் கொலையின் கொடியார் என்று கொண்டு கொலையினையுடைய கொடியார் என்று பொருள்கூறி அவரைக் கொல்லாது பிரித்து வைத்தும் கொன்றும் ஒறுக்கலாம் என்றும் கூறியுள்ளோம்.
(தொடரும்)
Leave a Reply