வள்ளுவர் வகுத்த அரசியல் – – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
உ. பொருள் செயல்வகை
நாட்டுக்கு அரணும் படையும் இன்றியமையாதன. அவற்றை ஆக்கவும் காக்கவும் பொருள் மிகமிக இன்றியமையாதது. ஆதலின், பொருளைச் செய்தலின் திறம் இங்குக் கூறப்படுகின்றது. பொருள் நாட்டையாள்வோருக்கு மட்டுமன்றி ஆளப்படுவோர்க்கும் இன்றியமையாதது.
1.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள். (குறள் 751)
[பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள்.]
பொருள் அல்லவரை – ஒரு பொருளாக மதிக்கப்படும் தகுதி இல்லாதாரை(யும்), பொருளாகச் செய்யும்-ஒரு பொருளாக மதிக்கச் செய்யும், பொருள் அல்லது – பொருள் அல்லாமல், இல்லை பொருள்- பொருளாவது இல்லை.
கல்வியறிவு இல்லார், இழிகுணமிக்கார் முதலியோர் பொருளுடைமையொன்றால் நன்கு மதிக்கப்பட்டு வரவேற்கப்படுகின்றனர். கல்வியறிவு மிக்கோரும் குணநலம் மிக்கோரும் பொருள் பெற்றிராமையால் ஒதுக்கப்படுகின்றனர். இந் நிலை மாறுதல் வேண்டும். பொருள், வாழ்க்கைக்குப் பயன்படு கருவியேயன்றிக்குறிக்கோள் ஆகாது. ஆனால், பொருளின்றி வாழ்க்கையில் அடைவது ஒன்றுமில்லை யாதலின், பொருளே குறிக்கோளாகக் கருதப்படுகின்றது. ஒரு நாடும் பொருள் உடைமையில் சிறந்திருந்தால்தான் நாடுகளிடையே நன்மதிப்புப் பெற இயலும். நாட்டுமக்களும் நல்வாழ்வு வாழ்வர். நாடும் மக்களும் சிறப்புறப் பொருளைப் பெருக்கும் திட்டங்களை வகுத்தல் ஆள்வோரின் கடமையாகும்.
2.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. (குறள் 752)
[இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.]
இல்லாரை – பொருள் இல்லாரை, எல்லாரும் எள்ளுவர்-யாவரும் இகழ்வர்; செல்வரை – செல்வமுடையவரை, எல்லாரும் சிறப்புச் செய்வர் – யாவரும் கொண்டாடுவர்.
‘இல்லார்’ என்ற சொல் ‘இல்லாதவர்’ என்ற பொருளைத் தருமாயினும், பொருள் இல்லாதவரையே குறிக்கின்றது. அறிவு இல்லாதவர், பண்பாடு இல்லாதவர் முதலியோரைக் குறிப்பது இல்லை. இதிலிருந்தே பொருளின் சிறப்பு நன்கு விளங்குகின்றது. பொருளுக்கே முதன்மை கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஆதலின், கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலியன நிறையப் பெற்றிருந்தாலும் செல்வம் இல்லையேல், மதிப்பு இல்லை; எல்லாத் தீக்குணங்களும் பெற்றிருந்தாலும், செல்வம் இருக்குமேல், மதிப்பு உண்டு; இந்நிலையில் நன்கு மதிக்கற்பாடு வேண்டுமேல் செல்வத்தைப் பெருக்கித்தான் ஆகவேண்டும்.
நற்குணமும் நல்லறிவும் இல்லாச் செல்வரை நாட்டு மக்கள் மதியாது ஒதுக்கும் நிலைமை ஏற்படுமேல், தீக்குணச் செல்வர் திருந்தும் நிலை ஏற்படும். ஒருவரே செல்வத்தைக் குவித்துக் கொள்ளுவதற்குரிய வாய்ப்பிருக்கும் சூழ்நிலையையும் அகற்றுதல் வேண்டும்.
நாடு நன்கு மதிக்கப்பெறச் செல்வம் மிகுதியாகப் பெற்று இருத்தல் வேண்டும். வறுமை நாட்டை எவர்தாம் மதிப்பர்?
3.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. (குறள்753)
[பொருள்என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.]
பொருள் என்னும் – பொருள் என்று சொல்லப்படுகின்ற, பொய்யா விளக்கம் – அழியாத விளக்கு, எண்ணிய – நினைத்த – தேயத்து நாட்டின்கண், சென்று – போய், இருள் அறுக்கும் – பகையைப் போக்கும்.
‘விளக்கு’ அம்சாரியை பெற்று விளக்கம் என்று ஆயது. தன்னையுடையவரைப் பலரறிய விளக்குகின்றமையின் (அறிவிக்கின்றமையின்) பொருள், விளக்குப் போன்றது. ஏனைய ஒளி (வெளிச்சம்) தரும் விளக்குகள் கெடும். ஆனால் பொருளாகிய விளக்கு, கெடுவதில்லை. இருக்குமிடம்தான் மாறும். பொருளிருந்தால் யாவரும் நண்பராவர். பகைவரையும் நண்பராக்கலாம். பொருளால் பகையை வெல்லமுடியும். பொருளை விளக்கு என்றமையால், பகையை இருள் என்றார்.
தேயம் = தனித்தமிழ்ச் சொல். ‘தேம்’ என்பது ‘தேஎம்’ என்று ஆகிப் பிறகு ‘தேயம்’ என்று ஆகியது; பின்னர்த் ‘தேசம்’ ஆகிவிட்டது. இப்பொழுது ‘தேசம்’ என்பதுதான் வழக்கில் உள்ளது; வடசொல் என்று கருதுகின்றனர். அது தவறு.
4.
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். (குறள்754)
[அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதின்றி வந்த பொருள்.]
திறன் அறிந்து – உண்டாக்கும் திறனை அறிந்து, தீதின்றி- கெட்ட நெறியில் அல்லாமல், வந்த பொருள் – உண்டாய பொருள், அறன் ஈனும் – அறத்தையும் கொடுக்கும், இன்பமும் – இன்பத்தையும், ஈனும் – கொடுக்கும்.
அறத்தைச் செய்யவும் இன்பத்தை நுகரவும் பொருள் மிகமிக இன்றியமையாதது. அப் பொருள் நல்வழியில் ஈட்டப்படுதல் வேண்டும். நாட்டையாள்வோர் கொடுங்கோல் முறையில் சென்று மக்களை வருத்திப் பொருளைச் சேர்க்காது, பொருளைப் பெருக்கும் வழிகளால் பெருக்குதல் வேண்டும். மக்களை வருத்திப் பொருளீட்டும் ஆட்சி நிலவும் நாட்டில் அறனும் இராது; இன்பமும் இராது.
5.
செய்க பொருளை செறுநர் செறுக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல். (குறள் 759)
[செய்க பொருளை செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகு;அதனில் கூரியது இல்.]
பொருளைச் செய்க – பொருளை உண்டாக்குக, செறுநர்-பகைவரின், செருக்கு – தருக்கினை, அறுக்கும் – போக்கும், எஃகு-கருவியாகும்; அதனில் – அதைவிட, கூரியது – கூர்மையான கருவி, இல்-வேறொன்றும் இல்.
பொருளால் படையைப் பெருக்கலாம்; போர்க்கருவிகளை உண்டுபண்ணலாம்; மக்களுக்கு நன்மைபுரியும் திட்டங்களை நிறைவேற்றி மக்கள் அன்பைப் பெறலாம். பகைவரின் தருக்குத் தானே அடங்கும்.
6.
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.(குறள் 760)
[ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.]
ஒண்பொருள் – சிறந்த பொருளை, காழ்ப்ப- மிகுதியாக, இயற்றியார்க்கு – படைத்தவர்க்கு (உண்டுபண்ணியவர்க்கு), ஏனை இரண்டும் – மற்றைய அறனும் இன்பமும், ஒருங்கு-ஒருசேர, எண்பொருள் – எளிய பொருள்களாம்.
சிறந்த வழியில் ஈட்டிய பொருள், சிறப்பைத் தரும் பொருள் ஆதலின் ிஒண்பொருள் என்றார். பொருள் மிகுதியாக இருந்தால் அறன் நன்றாகச் செய்யலாம்; இன்பம் நன்கு துய்க்கலாம். ஆகவே, மிகுந்த பொருளை நன்முறையில் ஈட்டுக என்றார்.
7.
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. (குறள் 757)
[அருள்என்னும் அன்புஈன் குழவி, பொருள் என்னும்
செல்வச் செவிலியால் உண்டு.]
அருள் என்னும்-அருள் என்று சொல்லப்படுகின்ற, அன்பு ஈன்-அன்பு பெறுகின்ற, குழவி-குழந்தை, பொருள் என்னும்-பொருள் என்று சொல்லப்படுகின்ற, செல்வ-செல்வத்தையுடைய செவிலியால் – வளர்ப்புத் தாயால், உண்டு – நிலைத்திருக்கும்.
அன்பு=தொடர்புடையார்மாட்டு உளதாகும் பற்று. அருள்=தொடர்பிலர்மாட்டும் செல்லும் பற்று. தொடர்புடையவர்களிடத்தில் அன்பு செலுத்துவதனால் அது முதிர்ந்து தொடர்பிலாரிடத்தும் அன்பு உண்டாகும். தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை முதலியோரை விரும்பாதவன், அயலாரை எங்ஙனம் விரும்புவான்? ஆதலின், பிறரை விரும்பிப் போற்றி உதவும் பண்பு, குடும்பத்திலே தோன்றி வளர்தல் வேண்டும். ஊாயசவைல நெபளைே யவ ாடிஅந என்ற ஆங்கிலப் பொன்மொழியையும் நோக்குக. ஆதலின், இருள் என்னும் குழந்தையை இன்பு என்னும் தாய் பெற்றெடுக்கின்றது என்கின்றனர்.
அருள் உள்ளம் கொண்டால் பிறர்க்கு உதவ வேண்டும். பிறர்க்கு உதவப் பொருள்வேண்டும். ஆகவே, பொருளால்தான் அருளை வளர்க்கமுடியும். பசியால் வருந்துபவனைக் கண்டு ”அப்பா! பசியால் வாடுகின்றாயே!” என்று கூறிவிட்டால் பசி அடங்கிவிடுமா? அடங்காதே. உணவு அளித்தால்தானே உண்டு பசியாறுவான். ஆதலின், அருட்பண்பை வளர்ப்பது பொருள்தான். அப்பொருளைச் ‘செவிலி’ என்றார். செவிலி என்றால் வளர்ப்புத் தாய்; உலகில் வளர்ப்புத் தாயார் செல்வம் அற்று பிறரிடம் ஊதியம் எதிர்பார்த்து வளர்ப்புத்தொழில் புரிவர். ஆனால், இச் செவிலியோ தானே எல்லாம் உதவி வளர்க்கின்றாள். ஆதலின், செல்வச் செவிலி என்றார்.
8.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. (குறள் 758)
[குன்றுஏறி யானைப்போர் கண்டுஅற்றால் தன்கைத்துஒன்று
உண்டாகச் செய்வான் வினை.]
தன் கைத்து – தன் கையில், ஒன்று உண்டாக – பொருள் ஒன்று உண்டாக, செய்வான் – செய்வானுடைய, வினை- தொழில், குன்று ஏறி – மலைமேல் ஏறி, யானைப்போர் – யானையும் யானையும் பொரும் போரை, கண்டு அற்று – கண்டதை ஒக்கும். (ஆல்-ஆசை)
குன்றின்மீது இருப்போன், நிலத்தின்கண் யானைப் போரை அச்சமின்றிக் காணலாம்; நன்கு காணலாம். அதுபோலப் பொருளுடையான் இனிதிருந்து கொண்டு பிறரை ஏவி எவ்வினையும் முடிக்கலாம்.
கைத்து – பொன் என்றும் கூறலாம். பொன் மட்டும் பொருள் அன்று; ஆதலின், கைத்து என்பதற்குக் கையில் என்று பொருள் கூறப்பட்டுள்ளது.
கை+அகத்து – கைத்து.
9.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். (குறள் 755)]
[அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல்.]
அருளொடும் – ஆள்வோர் மக்களிடம் காட்டும் இரக்கத்தோடும், அன்பொடும் – மக்கள் ஆள்வோரிடம் காட்டும் அன்போடும், வாரா-வராத, பொருள் ஆக்கம் – பொருள் ஈட்டம் , புல்லார் – பொருந்தாராய், புரள்விடல்- கழியவிடுக.
ஆள்வோர் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற இரக்க மனப்பான்மையோடு வரிப்பொருள் கேட்கலாம். மக்கள் ஆட்சி நடைபெறப் பொருள் வேண்டுமென்று அன்போடு வரிப்பொருளை விருப்பத்தோடு செலுத்தலாம். அங்ஙனமன்றி ஆள்வோர் வன்முறை பற்றி வரியை வாங்கலும், மக்கள் வெறுப்புணர்ச்சியோடு வரியைச் செலுத்தலும் கூடா. அங்ஙனம் பொருளீட்டுதல் நல்லதன்று.
10.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். (குறள் 756)
[உறுபொருளும் உல்கு பொருளும் தன்ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.]
உறுபொருளும்-உரியவர் இன்மையால் தானே வந்து சேரும் பொருளும், உல்கு பொருளும்-சுங்கப் பொருளும் தன் ஒன்னார்-தன் பகைவரை, தெறு பொருளும்-வென்றதனால் திறையாகச் செலுத்தும் பொருளும், வேந்தன் பொருள் – அரசனுக்குரிய பொருள்கள்.
ஒருவர் இறக்குங்கால் அவர் பொருளை அடைவதற்குரிய உறவின் முறையோர் இல்லையானால், அப்பொருள் அரசையே சாரும். நிலத்தில் கிடந்து கண்டெடுக்கும் பொருளும் அரசுக்கே உரியது. வரிகளாக உறும்பொருளும் அரசுக்குரிய பொருளாம். உல்குபொருள் என்பது, வாணிபத்தின் காரணமாக ஏற்றுமதி இறக்குமதிப்
பொருள்களின்மீது வரியாகப் பெறுவது. பகைவரை வென்றால், ஆண்டுக்கு இவ்வளவு திறை செலுத்துகிறேன் என்று கூறிச் செலுத்தும் பொருள் தெறு பொருள். தெறு = வெல்தல்.
Leave a Reply