– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

1. நாட்டு இயல்

 அ. நாடு*

 நாடு-விரும்பு: மக்கள் விரும்பி வாழுமிடம் நாடு எனப்பட்டதுபோலும். அந்த நாட்டில் வாழ்வோர் தமக்கு வேண்டியவற்றைத் தேடி வருந்தாமல், பிற நாடுகளை எதிர்பார்த்து  ஏங்கியிராமல் மக்களுக்கு வேண்டியன யாவும் பெற்றிருத்தல் வேண்டும். அங்ஙனமின்றிப்பிற நாடுகளை எதிர்பார்த்து வாழும் வகையில் செல்வக் குறைபாடு உடைய நாடு, நாடு ஆகாது

1.     நாடுஎன்ப, நாடா வளத்தன; நாடுஅல்ல,

      நாட வளம்தரும் நாடு. (திருக்குறள் 739)

சொற்பொருள்: நாடு-நாடுகள் என்று சிறப்பித்துச் சொல்லத் தகுந்தன; நாடா-தமக்கு வேண்டிய இன்றியமையாத பொருள்களுக்காகப் பிற நாடுகளைத் தேடா; வளத்தன -செல்வம் உடையன; நாட -பிற நாடுகளை எதிர்பார்க்க; வளம் தரும் – குறைந்த செல்வங்களைக் கொடுக்கும்; நாடு-நாடுகள். நாடு அல்ல – நாடுகளே அல்ல.

 நாடு, தனக்கு வேண்டியதைத் தானே பெற்றிருக்கும் தன்நிறைவு உடையதாய் இருத்தல் வேண்டும். இல்லையேல் மக்கள் எல்லா நலன்களும் எளிதில் பெற்று உரிமையோடு வாழ்தல் இயலாது. வேற்று நாடுகளை எதிர்நோக்கியே வாழவேண்டுமென்றால், அவ்வாழ்க்கை அடிமை வாழ்க்கையாகத்தான் இருத்தல் முடியும். அங்ஙனம் வாழும் நாடு எளிதில் தனக்கு உதவி புரியும் நாட்டுக்கு அடிமையாவது வரலாறு காட்டும் உண்மை

யாகும். உதவி புரியும் நாடுகளின் இடையீடு என்றும் இருந்துகொண்டே இருக்கும். ‘நாடு’ என்று சொல்வதற்குரிய இலக்கணங்களுள் ஒன்றாகிய (ளுடிஎநசநபைவேல) முழு உரிமைத் தலைமையை(Sovereignty)  இழக்க வேண்டி வரும். ஆதலின், நாட்டு மக்களும் அரசும் தம் நாட்டைத் தன்னிறைவு உடையதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

 அங்ஙனம் தன்னிறைவு உடையதாக இருப்பதற்கு என்ன வேண்டும்? இயற்கைப் பொருளும் செயற்கைப் பொருளும் குறைவுறாது பெற்றிருத்தல் வேண்டும். அப்பொருள்களை உண்டுபண்ணத் தக்கவர் மிகுந்திருக்க

வேண்டும். நாட்டு மக்களனைவருமே ஏதேனும் ஒருவகையில் நாட்டின் செல்வத்தைப் பெருக்கும் தொண்டில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். அங்ஙனமிருப்பின் எல்லாரும் குறையாத செல்வம் உடையவர்களாக இருப்பார்கள். ஆதலின், குறையாத விளைபொருள்களும், அவற்றை உண்டுபண்ணும் அறிவு, உழைப்பு நலம் உடையோரும், அவற்றைப் பெற்றுத் துய்க்கும் உரிமை வாழ்க்கை உடைய மக்களும்பெற்று இருத்தலே நல்ல நாட்டிற்குரிய இலக்கணமாகும்.

(தொடரும்)