வாழ்வுநெறி – முனைவர் வ.சுப.மாணிக்கம்.
(அகரமுதல இதழ் நாள்பங்குனி 2,தி.பி. 2045 / மார்ச்சு 16, கி.பி. 2014 தொடர்ச்சி)
ஒல்லும் வகையான் அறவினை ஓயாதே
செல்லும் வாயெல்லாம் செயல்.
இக்குறளில் அவர் நெகிழ்ச்சியைப் பாருங்கள். ஒல்லும் வகையான் எனவும், செல்லும் வாய் எனவும் அறஞ்செய்வான் நோக்கத்திற்கு எவ்வளவு தாராளமாக விட்டுக் கொடுக்கின்றார்? தலைமேல் புல்லுக்கட்டை இறக்க உதவுவதும், ஆட்டின் கால் முள்ளை அணைத்து எடுப்பதும், முதியோர்க்கு இடங்கொடுத்து செல்வதும் இவ்வண்டி என வினவினார்க்குச் சலிப்பின்றி அறிவுறுத்தலும் எல்லாமே சிறு வினையாயினும் அறிவினையல்லவா? வள்ளலிடம் சென்றான் வறியனாய்த் திரும்பான்; வள்ளுவரைக் கற்றான் வாழாதிரான். வள்ளல் எப்படியும் கொடுப்பான்; வள்ளுவர் எப்படியும் வாழ்விப்பார்.
வாழ்வின் உயுர்வுக்கு இன்னவளவு பொருளாதார அடிப்படை வேண்டும் எனப் பலர் மயங்கி எண்ணம் தடுமாறிச் சோர்வடைகின்றனர். உள்ள நிலையை மேலும் குள்ள நிலையாக்கிக் கொள்கின்றனர். உயர்வுக்குப் புறவடிப்படை வேண்டாம் என்பது வள்ளுவம். உயர்வாக வேண்டும் என்றால், வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்; அவ்வெண்ணத்தைத் திரும்பத் திரும்ப எண்ண வேண்டும்; எண்ணப்பித்து வேண்டும்; இதுவே உயர்வுக்கு வள்ளுவர் காட்டும் நெறி.
உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
எந்தப் பொருளடிப்படை வேண்டும் என நாம் நினைக்கிறோமோ அதனை வள்ளுவப் பேராசிரியன் உடன்படவில்லை.பொருளே தகரக் கூடிய அடிப்படை என இகழ்வதைக் காணுங்கள். உலகில் பொருளுடையாரெல்லாம் உயர்ந்து விடவில்லையே; பொருளிலாரெல்லாம் தாழ்ந்துவிடவில்லையே. பொருளாளர் தாழவும் பொருளிலார் உயரவும் காண்கின்றோம். ஆதலால் உயர வேண்டும் என்ற ஊக்கமே நல்வாழ்வுக்கு அடிப்படை என்பர் ஆசிரியர். இதனைவிட உயர்வுக்கு எளியநெறி காட்ட முடியுமா? திருக்குறள் காட்டும் வழி ஏற்ற நெறி மட்டுமன்று; செய்ததற்கு எளிய நெறியுமாம்.
3. திருக்குறளில் பொருட்பாலே பெரும்பால். இப்பாலில் கூறப்படும் அரசியல் நெறிகள் நடைமுறைக்கு உகந்தவை. முடியரசு குடியரசு படையரசு என்ற வகைக்கு உட்பட்டு வள்ளுவர் அரசியல் வகுக்கவில்லை. நாடென்றால் அதற்கோர் நல்லரசு வேண்டும். அது வல்லரசாகவும் இருத்தல் வேண்டும் என்பதுவே வள்ளுவ அரசியல்.
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
இது பொருட்பாலின் முதற்குறள். அரசியல் நெறி பேசும் முதற்குறளிலேயே ‘படை’ என்ற சொல்லை முதலாவதாக வைத்துப் பாடுகின்றார் வள்ளுவர். படையற்றது அரசாகாது என்ற பேருண்மையை இதனைக் காட்டினும் வேறு வகையான் அறிவுறுத்த முடியுமா? தமிழறிஞர் எவ்வளவோ நூற்றாண்டுக்கு முன்னர் வலியுறுத்தியிருந்துங்கூட, சீனப்படையெடுப்புக்குப் பின்னரேதான், படையின் இன்றியமையாமையை நாம் உணர்ந்து கொண்டோம்.
அரசு வினையாளரிடம் கையூட்டை எங்ஙனம் ஒழிப்பது என்று நம் இந்தியத் தலையரசும் உறுப்பரசுகளும் இன்று மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. பல குழுக்களைப் புதுவதாக அமைக்க எண்ணுகின்றன. இக்குழுக்களுக்குள்ளும் கையூட்டு நுழையாது என்று யார் உறுதி கூற முடியும்? கையூட்டைக் கண்டுபிடிக்க வழி செய்தலைக் காட்டிலும் கையூட்டு நிகழாதவாறு அலுவல் நெறிகளை அமைப்பதிற் கருத்துச் செலுத்த வேண்டும். இது பற்றி அரசியற் சான்றோராகிய வள்ளுவர்யாது கூறுகின்றார்?
நாடொறும் நாடுக மன்னன்; வினை செய்வான்
கோடாமை கோடா துலகு.
நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
மக்களின் வேண்டுகோள்கள் தூங்காதபடியும், திட்டங்கள் காலங் கடவாதபடியும் உடனுக்குடன் செய்யப்படுகின்றனவா என்று மேலவர்கள் தம் கீழவர்களை நாள் தோறும் கவனிக்க வேண்டும் என இடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர். தாமதமின்றிக் காரியம் நடக்குமென்றால், கொடுக்க யாருக்குத்தான் கைநீளும்? இன்னும் ஒன்று; வள்ளுவப் பெருமான் சொன்னபடி செய்தால் சிலவகைக் கையூட்டுகள் ஒழிந்துபோம் என்று நம்பலாம்.
காட்சிக் கெளியன் கூடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
இன்று பெரிய வினைஞர்களைப் பார்க்க வேண்டும் என்றால், பணியாளன் தயவு வேண்டும். எழுத்துமூலம் சில எழுதினாலும் அவை மேலவர் பார்வைக்கு எட்டுமென்று சொல்ல முடியுமா? கட்டில் எடுத்து வைத்தாற்றானே கண்ணுக்குப்படும்? ஆதலின் அமைச்சர்களும் அமைச்சரனையவர்களும் நாள்தோறும் அரைமணி நேரமோ வாரத்தில் ஒரு பொழுதோ தம் அலுவலகத்திற்கு வெளியே வந்து தடையின்றி யாரையும் பார்க்க இசைவது, குறைகேட்பது முறை காண்பது என்று வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அங்ஙனம் செய்யும் அன்பும் எளிமையும் இருக்குமாயின், ‘‘மக்கட்கு இறையென்று வைக்கப்படும்’’ என்ற வள்ளுவர் பாராட்டு அவர்கட்குக் கிடைக்கும். மக்கள் வாக்கும் மனமாரக் கிடைக்கும். மக்கள் வாக்கும் மனமாரக் கிடைக்கும். வள்ளுவர் நல்லரசுக்கு வேண்டும் நடைமுறையெல்லாம் அறிந்த அரசியல் மேதை ஆதலின் இந்திய அரசியல் வாழ்வில் செல்வார் அனைவர்க்கும் திருக்குறளறிவு இன்றியமையாதது என்பது வெளிப்படை.
4. உலக நலம் என்பது சமுதாய நலம். சமுதாய நலம் என்பது இல்லற நலம். இல்லற நலம் என்பது கணவன் மனைவியின் காதல் நலம். காதல் சிறவாவிட்டால் ஞாலத்தில் எத்துறையிலும் எப்பண்பும் சிறவாது. எம்முயற்சியும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். உலகிடை வேறு வகையால் வரும் இன்பத்தினும் காதலர் தம் இன்பம் சிறந்தது ஐயமில்லை; ஆனால் வேறு வகையால் வரும் துன்பத்திலும் காதலர்களுக்குள் வரும் துன்பம் கொலையனையதன்றோ? காதலர்தம் வேற்றுமை அறத்தைக் கெடுக்கவும். அரசியலைக் கெடுக்கவும் காண்கின்றோம். ஒருவர் பொறை இருவர் நட்பு என்பது குடும்பத்தின் தலையாய பண்பு. உயிரொன்று என இலக்கியம் பாராட்டும் காதலர்களுக்குள்ளும் நீண்ட வாழ்நாளில் நெஞ்சு பொறுக்கமாட்டாச் சில பிணக்குகள் நிகழவே செய்யும். மனப் பூசல்கள் வஞ்சகத்தாலன்றி வாய் வார்த்தையால் வளரவே செய்யும்; சில சமயம் தடிக்கவும் செய்யும். அப்போது காதலின் நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளல் என்பது பொறுத்துக் கொள்ளுதலாகும். பொறுத்துக் கொள்ளாதார் புரியாதவரே, பிணக்கைப் புரிந்து கொண்டார், இன்பப் பெருமை எய்துவர்.
உப்பமைந் தற்றால் புலவி; அது சிறிது
மிக்கற்றால் நீள விடல்
பிணக்கம் அளவாகுக; மிகுதியாக்க வேண்டாம் என்று இல்லறப் பெருமகனாராகிய வள்ளுவர் காதலர்களுக்கு நுண்ணிய நாகரிக முறையில் புலப்படுத்துவர். அறம் பொருள் இன்பம் என்ற முத்திற வாழ்வுக்கும் எத்திறத்தானும் வழிகாட்டுவது திருக்குறள்.
பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழை வாழ்விக்கும் சிறந்த இலக்கு உடையவர். என்றும் நம்பிக்கைக்கு உரிய அன்புத் தமிழர். உலகப் பெருமொழிகளுள் ஒன்றாகிய நந்தமிழைக் காத்து வளர்க்கும் நோக்கத்தால், ‘குறள் நெறி’ என்னும் நல்லிதழைத் தொடங்குகின்றார். அளவு கடந்த விற்பனைப் புகழ் நச்சி இன்று செய்தித் தாள்கள் கீழான செய்திச் சில்லறைகளை மேலாக வெளியிடுகின்றன. தெருச் சண்டையினும் கீழான வசைமாரி பெய்கின்றன. நல்ல எளிய புரியும் தமிழ்ச் சொற்கள் இருக்கவும், வேண்டுமென்றோ கருத்தில்லாமலோ கலப்பு மொழியைப்பரப்புகின்றன. இன்ன குறைபாடுகள் இன்றி ‘குறள் நெறி’ இயங்குமாக. இலக்குவனாரின் ‘குறள் நெறி’யால் வள்ளுவரின் குறள் நெறி எங்கும் பரவுவதாக.
குறள்நெறி, தை 19, 1995 / 01.02.1964
Leave a Reply