வாழ்வு நெறி – முனைவர் வ.சு.ப.மாணிக்கம்.
1. பலருக்குக் ஆராய நூல் வேண்டும், சொற்பொழிவாற்றக் கருத்து வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றவில்லை. எல்லாரும் வாழ வேண்டும்; எப்படி வாழ்விப்பது என்ற தலையாய நோக்கமே திருக்குறட் பிறப்பிற்குக் காரணம். இந்நோக்கம் எல்லாக் குறள்களிலும் வெளிப்படக் காணலாம். மிகக் கீழானோர்க்கும் உயர்வுண்டு; இயல்பாகவுள்ளவர்க்கும் மேலுயர்வு உண்டு; மிகவுயர்ந்தார்க்கும் மேன்மேலுயுர்ச்சியுண்டு என்ற நம்பிக்கையைத் திருக்குறள் நமக்கு ஊட்டுகின்றது.
தாழ்ந்தாரைப் பார்த்துச் சோர்வடைய வேண்டா எனவும், உயர்ந்தாரைப் பார்த்து அமைதியடைய வேண்டா எனவும் ஊக்கமும் ஆக்கமும் தருவது திருக்குறள். எல்லார்க்கும் பொதுவான அறங்களைக் கூறுவது குறள் என்று சொல்லி வருகின்றோம். இது எவ்வளவு தவறான கருத்து? எவ்வளவு வீழ்வான கருத்து? பொதுவறம் கூறாது அவரவர்க்குப் பொருத்தமான அறங்கூறுவதே குறள். இதுவே குறளின் தனிச்சிறப்பு. பொதுவறம் செயற்படுமா? பொதுமடம் துப்புரவப்படுமா?
‘‘நிதி மிகுத்தவர் பொற்குவை தாரீர், நீதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர் வாய்ச் சொல் அருளீர்’’ என்று பொருள் நிலைக்கு ஏற்ற அறம் பாரதியார் கூறியிருப்பதை அறிவோம். அதுபோல் உலகுபுகழ் வள்ளுவர் ஒவ்வொருவரையும் தனித் தனியாக முன்னேற்ற வேண்டி அவரவர் செய்வதற்கு ஏற்ற அறங் கூறியுள்ளார். அறத்திற்காக அறம் எழுதவில்லை அவர். இவ்வுண்மையை இப்போது நாம் தெளிந்து வருகின்றோம். யாரையும் முன்னேற்றிவிடவல்லது முப்பால் என்பதனை ஊரறிய உலகறியத் தெளிவிக்க வேண்டும். ‘‘என்நிலைக்கு ஏற்ற அறம் இந்நூலில் உண்டு; ஆதலால் எனக்கும் முன்னேற்றம் உண்டு’’ என்னும் மெய்ந்நம்பிக்கையோடு திருக்குறளைப் படியுங்கள்.
2. அறம் எல்லா மக்களும் செய்ய வேண்டிய கடமை. எனினும் இப்படிச் செய்வதுதான் அறம். இவ்வளவு செய்தாற்றான் அறம் என வரம்பு காட்டலாமா? வள்ளுவர் அறம் வலியுறுத்தினாரேயன்றி, அதற்கு ஓர் அரண் கட்டவில்லை.
குறள்நெறி தை 2, 1995 / சனவரி 15, 1964
Leave a Reply