Thirukural04

அறிவுக்கும் பொருளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது – அல்லது இருக்க வேண்டும் என்று எண்ணுதல் இயற்கை விதிக்கு மாறுபட்டதாகும்; அவ்வாறே கல்விக்கும் பொருளுக்கும், பணத்திற்கும், பொருந்திய தொடர்பு இருக்க வேண்டும் என்று இயல்பாக எண்ணுதல் கூடாததாகும். உலக இயற்கையில் அறிவும் கல்வியும் நிறையப் பெற்றவர்கள்தான் செல்வமும், நிறைந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அவ்வாறு நினைத்துப் பார்த்தல் தவறு என்றும் சொல்லிவிடலாம்! ஏனெனில் மனித வாழ்க்கையில் அறிவு, கல்வி என்பவை அமைகின்ற – வருகின்ற வழிவேறு; இரண்டும் ஒன்றாகச் சேர்ந்துதான் வருதல் வேண்டும் என்கிறவிதி – நியதி கிடையாது. இதனை ‘திருவேறு – தெள்ளியராதலும் வேறு’ என்று ஆசிரியர் வள்ளுவர் காட்டும் குறிப்பிலிருந்து புரிந்து கொள்ளுதல் வேண்டும். அஃதாவது அறிவும் – செல்வமும் வெவ்வேறு வழிபட்டவையாகும். இரண்டும் சேர்ந்து இருப்பதுமுண்டேயென்று கண்டோமேயானால் அது அரிதாகத்தான் இருக்க முடியும் என்பதாம்!

‘பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை’ என்கிற உண்மை வெளிப்படையானதாகும். பொருள் தேடுதல் வேண்டும். எனவே பொருளில்லாமல் தேடவிரும்பாமல் இவ்வுலகில் நம்மிடையே எப்படியேனும் வாழ்வோம் என்று இருப்பவர்களுக்கு இங்கு வாழ இடமில்லை; அப்படிப்பட்டவர்கள் வாழவும் இடம் தரக்கூடாது.

பொருள் தேடி வாழ்கிறவர்கள் – நிறையப் பெற்றிருப்பவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்கின்ற கருத்தினைச் சிந்திக்கும்போதுதான், அது பெரிய, ‘சிக்கல்’ ஆகிவிடுகிறது. இந்த உலகம் துன்பத்திலும் – மக்கள் தொல்லைகளிலும் இருப்பதற்குக் காரணமே இப்படிப்பட்ட கருத்தினை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளாததும், புரிந்திருந்தும் அவ்வாறு நடந்து கொள்ளாததும், அவ்வாறு நடந்து கொள்ளாதவர்களை மக்கள் நடக்கும்படி செய்யாததுமேயாகும்.

தான் நன்கு துய்க்கத்தான் பொருள் சேர்க்கின்றான். சேர்த்ததை உண்டு, உடுத்தி இன்பமாக துய்க்கத்தான் வாழ்கின்றான். அத்தனைப் பொருளையும் பத்திரமாக வைக்கின்றான்; வைத்தான்; காலம் வந்ததும் செத்தான்! எதைக் கண்டான்? ஏன் இவ்வாறு இருந்து மறைந்தான்? இவன் இவ்வுலகில் இருந்ததால் யாது பயன்? எதைச் செய்தான்? பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொண்டிருந்ததால் சாகாமலா இருந்தான்! இல்லையே! இப்படிப் பட்டவர்களையெல்லாம் ஆசிரியர் திருவள்ளுவனார் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு உலகிற்கு அறவுரைகளைத் தருகின்றார். இப்படிப்பட்டவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த நாட்கள் அத்தனையும் இப்பூமிக்குப் ‘பாரமாக’ இருந்தார்கள் என்று கூறுகின்றார். ‘‘தோற்றம் நிலக்குப் பொறை’, என்ற குறளடிச் சொற்களைச் சிந்திக்க வேண்டும்.

இவ்வளவு அதிகச் செல்வமும் இவனிடம் வந்த காரணம் ஒருவன் மட்டும் வாழ்வதற்காகவா? அல்லவே! எப்படி எப்படியெல்லாமோ ஒருவன் நிறைந்த பொருள் பெற்றவனாகி விடுகின்றான். அவ்வளவும் தான் ஒருவனுடைய சொந்த முயற்சியால்தான் வந்தது என்று அவன் கூறுவது வெறும் பகட்டேயாகும்! இருக்கட்டும்; அவனிடம் இருக்கும் பொருள் அவன் அடைய வேண்டிய இசை(புகழ்) அத்தனையும் அவன் பெறுவதற்காக வல்லவோ துணை இருக்க வேண்டும். புகழ் வாங்க வேண்டியதொன்று அல்லவே! இயல்பாகவே வருமே. இயல்பாக வருகின்ற வழிதான் ‘ஈகை’ என்பதனாலாகும். ஈகை என்பது பலருக்கும் வாரி, வாரி கொடுக்க வேண்டும் என்பதல்ல! நாட்டுக்கும் மக்களுக்கும் அப்பொருள் மிகவும் பயன்படும்படி. செய்தலேயாகுமன்றோ! ‘இசைவேண்டா ஆடவர்’ எதற்கு இவ்வுலகில் வாழவேண்டும் என்பது ஆசிரியருடைய கேள்வியாகும். குறிப்பாகவும் சுருக்கமாகவும் சொல்ல வேண்டுமென்றால் இவ்வுலகில் அதிகத் துன்பம் இருப்பதற்குக் காரணம், யார் யார் இங்கு வாழ்ந்திருக்கத் தேவையில்லையோ, அவர்களெல்லாம் இருந்து கொண்டிருப்பதினாலே யாகும் என்று கூறிவிடலாமன்றோ!

‘‘எல்லாம் பணத்தினாலேதான்’ என்று அடிக்கடி மக்கள் பேசுவதை நாம் கேட்டு வருகின்றோம். எல்லாருக்கும் பொதுவான கருத்தேயாகும். இக்கருத்து செல்வத்தினுடைய சிறப்பான உண்மையினை வெளிப்படுத்துவதாகும். எல்லாம் பணத்தினாலேதான் என்பதைச் சொல்லிக்கொண்டே யாருக்கும் எள்ளளவும், பயனுள்ளவனாக வாழாமல் இருக்கும் செல்வம் பெற்ற ஒருவனை ஆசிரியர் மிக மிகக் கொடுமையாகவும் கண்டித்துப் பேசுகின்றார்.

பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு’.

அப்படிப்பட்டவனுடைய பிறப்பினையே நாம் சந்தேகப்படவேண்டியதாக இருக்கும் என்று சொல்லாவிட்டாலும், அவனை மனிதப் பிறவிக்கு மிகவும் இழிவான பிறவியினைச் சேர்ந்தவன், உலகப் பேச்சில் வைத்துச் சொன்னால், ‘‘ஈன சென்மம் எடுத்தவன்’’ என்றே கூற வேண்டும்.

பயனில்லாத செல்வம் – மனிதப் பண்பாடு அற்றவனிடம் இருக்கும் செல்வம் – என்கிற கருத்தில், ‘நன்றியில் செல்வம்’ என்றொரு பகுதியினை ஆசிரியர் விளக்குகின்றார். இப்பகுதியில் காணப்படும் ஒவ்வொரு குறட்பாவினையும் பலமணி நேரம் சிந்தித்து உலகறியச் செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும். ஒருவனிடம் இருக்கும் நிறைந்த பொருள் அவன் தனி முயற்சியால் வந்துவிட்ட பொருள் என்று அவன் எண்ணுகின்ற எண்ணம் மாற வேண்டும். பல வாய்ப்புக்களாலும் – பலர் சேர்க்கையினாலும் – கால மாறுபாடு முதலியவற்றாலும் வந்ததுதான் அப்பொருள் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாகி உண்மையினை உணருவானேயானால் அவன் பலருக்கும் பயன்பட்டே தீர வேண்டும் என்கின்ற கடமையுணர்ச்சியினை பெரிய சட்டமாகவேக் கொள்ளுவான். தானும் மகிழாமல் பிறரும் பயன்படாமல் வைத்துச் செத்தானே!

‘‘வைத்தான் செயக் கிடந்தது இல்!’’

(இக்கட்டுரையினைக் குறிப்பாக வைத்துக் கொண்டு, குறட்பாக்களை நன்கு சிந்தித்துப் படித்து அறிதல் வேண்டும்.)