தலைப்பு-தமிழர்கடவுட்கொள்கை :thalaippu_kadavulkolgai

  ஒரு பெயர் ஓருருவம் ஓன்றுமில்லாக் கடவுளுக்குப் பல பெயர்களிட்டுப் பல வழியாக வழிபடுதல் தமிழர் இயல்பு. பெயர் பலவாயினும் கடவுள் ஒருவரே என்ற உணர்வு தமிழர்க்கு என்றும் உண்டு. இந்நூற்பாவில் கூறப்பட்டுள்ள மாயோன், சேயோன், வேந்தன், வருணன் முதலியனவும் ஒரு கடவுளைச் சுட்டுவனவே. மாயோன் என்றால் அழியாதவன்; சேயோன் என்றால் சேய்மையிலுள்ளவன்; அறிவுக்கு எட்டாதவன்; வேந்தன் என்றால் தலைவன், விரும்புதற்குரியவன். வருணன் என்றால் நிறங்களுக்குரியவன் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் நான்கு பெயர்களும் ஒருவரையே குறிக்கின்றன என்று தெளியலாம். வட மொழியில் உள்ள புராண நூல்களைக் கற்றறிந்த உரையாசிரியர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய காலத்து வடமொழிக் கதைகளை உளத்தில் கொண்டு உரையெழுதி விட்டனர். என்றும் அழியாதவன் என்று கருதப்பட்ட இறைவன் பிறந்து இறக்கும் தொழில்களைக்கொண்ட திருமால் என்று கருதப்பட்டு விட்டான். உண்மைப் பற்றில்லார் அறிவினுக்கு எட்டாதவன் எனப்பட்ட இறைவன் முருகனாகி, சிவனின் புதல்வனாகி, இளையோனாகி, கணபதியின் தம்பியாகி விட்டான். யாவர்க்கும் தலைவனாக விரும்பப்படும் இறைவன் (வேந்தன்) தேவர்கட்கு அரசனாம் இந்திரனாகி விட்டான். பெருநிற வண்ணனாய் எல்லா நிறங்களுக்கும் காரணனாகிய இறைவன் (வருணன்) ஆரிய நூல்களில் கூறப்படும் மழைக் கடவுளாம் வருணன் எனப்பட்டான். உரையாசிரியர்களின் உரைப் பொருள் மாற்றம் உண்மையை உணர முடியாமல் செய்து விட்டது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுகை இயல்பினை விளக்க வந்த ஆசிரியர் பிற நாட்டு மொழியியல்பை உரைத்தனர் என்றால் அறிவொடுபட்ட உரையாகாதன்றோ? ஆகவே இந்நூற்பாவில் கூறப்படும் கடவுட் கொள்கை தமிழர்க்கே உரியதாகும்.

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் :

தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 135-136