தொல்காப்பியரின் காலத்தை அறிவிக்க வேண்டும்! – ஆரா
தமிழின் தொன்மையை மீட்க ஒரு கோரிக்கை – இலக்குவனார் திருவள்ளுவன்
உலகின் தொன்மையான முதல் மொழியான தமிழில் கிடைத்துள்ள முதல் நூல் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம்.தமிழர்களின் வாழ்வியல், முதல்மொழியாம் தமிழின் இலக்கணம் என்று சொல்லும் தொல்காப்பியரின் காலத்தை முன்னிறுத்தி விவாதங்கள் சூடாகியிருக்கின்றன.
தாவரங்களுக்கு உயிர் உண்டு எனக் கண்டறிந்ததைத் தொல்காப்பியர், தம் முன்னோர் கூறியதாகக் கூறி இருப்பார். தொல்காப்பியருக்கும் முன்னோரே இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் தமிழரின் மதிநுட்பத்திற்கு வேறு சான்று தேவையில்லை.
இப்படிப்பட்ட தொல்காப்பியரை,, தமிழகம் முழுமையான அளவில் முக்கியபத்துவப்படுத்தவில்லை என்பதால் தொல்காப்பியரை இருட்டடிப்பு செய்யும் முயற்சிகள் நடக்கின்றன என்று எச்சரிக்கிறார் தமிழ்க்காப்புகக்கழகத்தலைவரான இலக்குவனார் திருவள்ளுவன்.
அவரிடம் பேசினோம்.
தொல்காப்பியர் காலத்தில் ஆவணிதான் ஆண்டுத் தொடக்கமாக இருந்தது. அதன் அடிப்படையில் ஆவணி முதல்நாளைத் தொல்காப்பியர் நாள் என அறிவித்து மகாவீரர் நாள் கொண்டாடுவதுபோல் இந்தியா முழுமையும் கொண்டாடச் செய்ய வேண்டும்.
தொல்காப்பியர் காலம் குறித்துப் பல அறிஞர்கள் ஆராய்ந்து எழுதி உள்ளனர். தமிழின் காலத்தை வேண்டுமென்றே பின்னுக்குத் தள்ளுபவர்கள், கி.பி. என்று தவறாகக் கூறி வருகின்றனர். க.வெள்ளை வாரணர் கி.மு. 5320, மறைமலையடிகள் கி.மு. 3500, கா.சுப்பிரமணிய பிள்ளை கி.மு. 2000, ச.சோமசுந்தர பாரதியார் கி.மு. 1000, க.நெடுஞ்செழியன் கி.மு. 1400, மா.கந்தசாமி கி.மு.1400 என அறிஞர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இருபதாம் நூற்றாண்டு தொல்காப்பியர் என அழைக்கப் பெறும் பேராசிரியர் இலக்குவனார் தொல்காப்பியர் கி.மு.700 இக்கும் கி.மு.1000 இற்கும் இடைப்பட்டவர் என்கிறார். புத்தரின் காலத்திற்கு முற்பட்டவர், நாணயக் காலத்திற்கு முற்பட்டவர் எனப் பல ஆதாரங்கள் அடிப்படையில் இவர் கூறி உள்ளார். இருப்பினும் இணையக் கல்விக் கழகத்தில் தொல்காப்பியர் காலம் கி.மு.300 என வேண்டுமென்றே எழுதப்பட்டுள்ளது. பாணிணி என்னும் சமசுகிருத இலக்கண அறிஞருக்குப் பிற்பட்டவர் எனக் காட்டுவதற்காக இவ்வாறு தவறாக, தமிழர் வரலாற்றை இருட்டடிப்பு செய்து கூறுகின்றனர். எனவேதான், திருவள்ளுவர் கால ஆராய்ச்சி போல் தொல்காப்பியருக்கும் கால வரையறை செய்ய வேண்டும் எனத் தமிழறிஞர்கள் விரும்புகின்றனர்.
கோவிலூர் திருமடமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கத்தை 2010ஆம் ஆண்டில் நடத்தினர்.
பல்வேறு கருத்துகளை ஆராய்ந்து பேராசிரியர் சி.இலக்குவனார் கூறிய தொல்காப்பியர் காலக் கீழ் எல்லையான கி.மு. 700 என்பதை அடிப்படையாகக் கொண்டு கி. மு. 711 எனக் கருத்தரங்க முடிவில் அதன் முடிவைத் தமிழண்ணல் அறிவித்தார். அதன்படி இன்று 2014 + 711= 2725 தொல்காப்பியர் ஆண்டாகும்.
சித்திரைத் திங்கள் முழுமதி நாளை அவரது நாளாகக் கொண்டாட வேண்டும் என்றும் கருத்தரங்கத்தில் முடிவு எடுத்து அறிவித்தனர். இதை அப்போதைய அரசிற்குத் தெரிவித்தனர்.
கோவை உலகத்தமிழ்மாநாட்டில் அறிவிக்குமாறும் ஆறு.அழகப்பன், சிவமணி முதலான அறிஞர்கள் வேண்டினர். ஆனால், அப்போதைய அரசு அமைதி காத்து இதன் முடிவிற்கான எதிர்ப்பைக் காட்டியது.
இன்றைய முதல்வர் செயலலிதாவின் ஆட்சிக்காலத்தில்
2001-2002 ஆம் ஆண்டு சட்ட மன்றத்தில் அப்போதைய கல்வியமைச்சர் தம்பிதுரை, தொல்காப்பியருக்கு, சென்னையில் புகழரங்கம் அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். இன்றுவரை அறிவிப்பாகவே அது இருக்கிறது.
தலைநகரத்தமிழ்ச்சங்கத்தினர் சென்னையில் தொல்காப்பியர் சிலையை அமைக்க முயன்று வருகின்றனர். இதற்கு அரசு இடம் தந்துதவ வேண்டும். ஆறு.அழகப்பன் கட்ட உள்ள தமிழன்னைக் கோயிலில் தொல்காப்பியர் சிலை நிறுவ நிதியுதவி வழங்க வேண்டும். எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் தொல்காப்பியர் ஆய்விருக்கை அமைக்க வேண்டும். பல்கலைக்கழகம் ஒன்றிற்குத் தொல்காப்பியர் பெயரைச் சூட்ட வேண்டும். தமிழ் இலக்கண அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் தொல்காப்பியர் விருது வழங்க வேண்டும். தொல்காப்பியத்தைப் பிற மொழிகளில் மொழி பெயர்ப்பவர்களுக்கு நிதியுதவி வழங்கவேண்டும்.
இவற்றையெல்லாம் முக்கியமாக . . . . தமிழர்களுக்கு எதிரானோரின் சதியை முறியடிக்க, தொல்காப்பியரின் காலத்தை வரையறை செய்யும் ஒரு குழுவை அமைத்து, தொல்காப்பியரின் காலத்தை வரலாற்றுக் கண்ணோடு ஆய்ந்து அறிவிக்க வேண்டும் என்று முடித்தார் இலக்குவனார் திருவள்ளுவன்.
தமிழருக்கு அடையாளமாக விளங்கும் தொல்காப்பியருக்கு, தமிழகத்தில் குறிப்பிடத்தக்க ஒரு நினைவிடம் இல்லை. மதுரையில் 1981 தமிழ்மாநாட்டின்போது வைக்கப்பட்ட தொல்காப்பியர் சிலைகூட வேப்பமரம் மூடியபடி இருக்கிறது இன்று!
தமிழர்களின் பழந்தகப்பன் தொல்காப்பியரை, தமிழர்களும் தமிழக அரசும் கொண்டாட வேண்டும்.
– படங்கள் : பொன்.சௌபா
– தமிழக அரசியல் தொகுப்பு 6: இதழ்29 நாள் 19.02.2014
மாமூலனாரின் காலம் கி.மு 355 இவர் நந்தர்களையும் மௌரியர்களையும் பாடியுள்ளார் அசோகரை தவிர மஂற்றும் முதலாம் கரிகாலனை பாடியுள்ளார் இவர் திருவள்ளுவரை பெருமையாக பாடுகிறார் ஆக திருவள்ளுவர் அவரை விட வயதில் மூத்தவர் அதாவது கி.மு 5 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றால் தொல்காப்பியர் திருவள்ளுவரை விட 700 வருடமாவது மூத்தவராக இருக்க வேண்டும் (கி.மு 1100 etr)
பேராசிரியர் சி.இலக்குவனார், திருவள்ளுவர் அசோகர் காலத்தவர் என்கிறார். தொல்காப்பியர் காலக் கீழ் வரம்பு கி.மு. 7 ஆம் நூற்றாண்டு, மேல் வரம்பு கி.மு.1000 என்கிறார். உங்கள் கருத்து அவரது கருத்திற்கு ஒத்து வருகிறது.