tamil letters+2

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

36.

நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும்

குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே.

நெட்டெழுத்து  இம்பரும் =  நெட்டெழுத்தினது பின்னும், தொடர்மொழி ஈற்றும் = இரண்டு எழுத்துகளுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆன சொல்லின் இறுதியிலும், குற்றியலுகரம் = க குறைந்த ஒலியையுடைய உகரம்(ஒரு மாத்திரையில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும் உகரம்), வல்ஆறு ஊர்ந்து = வல்வலின மெய்களாம் க், ச், ட், த், ப், ற் என்பனவற்றின்மீது பொருந்தி வரும்.

குற்றியலுகரம், மொழியிறுதியில் நிற்கும் வல்லின மெய்களைப் பொருந்தி வரும். இரண்டு எழுத்துகள் உள்ள மொழியாய் இருந்தால், முதல் எழுத்து நெடிலாகவே இருக்கும். இரண்டு எழுத்துகளுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆன சொல் ‘தொடர்மொழி’ என்று அழைக்கப்பட்டுள்ளது.

காட்டு :

நாடு : நெட்டெழுத்தின்பின் குற்றியலுகரம்

விறகு  : தொடர்மொழியில் குற்றியலுகரம்

(விரிவு குற்றியலுகரப் புணரியலில் காணலாம்)

37.

இடைப்படிற் குறுகும் இடனுமாருண்டே

கடப்பாடறிந்த புணரியலான.

இடைப்படின் = (மொழியிறுதியில் வல்லினமெய்யின் மீது ஏறிவரும் உகரம்) இரு சொற்களின் நடுவே பொருந்தின்,

குறுகும் இடனுமாருண்டு = குறுகும் இடனும் உண்டு(ஆர்: அசை) ‘தெற்குக்கடல்’ என்று கூறும்போது தெற்கு என்பதின் ஈற்றில் வந்ததுள்ளஉகரம், குறுகிய ஓசையுடையதோ, குறுகாத ஓசையுடையதோ என ஐயம்தோன்றும். ஓசை குறைந்து வருவதும் வராததும் சொல்லுவார் தன்மையைச் சார்ந்துள்ளது. ஆதலின்  ‘குறுகும் இடனும் உண்டு’ என்றார். ‘குறுகாத இடனும் உண்டு’ என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

38.

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.

ஆய்தப்புள்ளி – புள்ளிவடிவமாக எழுதப்படும் ஆய்தம் எனும் எழுத்து, குறியதன்முன்னர் = குற்றெழுத்தின் பின்னர், உயிரொடு புணர்ந்த = உயிர் எழுத்தோடு பொருந்திய , வல்லாறன் = வல்லெழுத்துகள் ஆறின்,  மிசைத்து = மேலது.

ஆய்தம், குறிலின் பின்னும் வல்லின உயிர்மெய்யின் முன்னும் வரும்.

காட்டு : எஃகு, கஃசு

‘ஆய்தம்’, ‘மெய்’ என்று அறியத் துணைபுரியும் வகையில் இங்குப் புள்ளி என்று சுட்டப்பட்டுள்ளது என்பர் உரையாசிரியர் இளம்பூரணர்.

39.

ஈரியல் மருங்கினும் இசைமை தோன்றும்.

ஈறு இயல் மருங்கினும் = நிலைமொழி இறுதி வருமொழி முதலோடு சேர்ந்து ஒலிக்குமிடத்திலும் இசைமை = ஆய்த ஒலி, தோன்றும் = உண்டாகும்.

காட்டு :

கல் + தீது = கஃறீது

முள் + தீது = முஃடீது

40.

உருவினும் இசையினும் அருகித் தோன்றும்

மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா

ஆய்தம் அஃகாக் காலை யான.

உருவினும்  = வடிவத்தைச் சுட்டுமிடத்தும், இசையினும் = ஓசையைச் சுட்டுமிடத்தும், அருகித் தோன்றும் =சிறுபான்மையாய் வரும், மொழிக்குறிப்பு எல்லாம் = குறிப்பு மொழிகள் எல்லாம், எழுத்தின் இயலா = ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டு எழுத்துகள் போன்று நடவா ; ஆய்தம் = அவ்வாய்த எழுத்து, அஃகாக்காலையான = தன்அரைமாத்திரையில் குறைந்து ஒலிக்காது மிகுந்து  ஒலிக்குமிடத்து.

கஃறு என்பது வடிவைச் சுட்டும் குறிப்புமொழி. சுஃறு என்பது ஓசையைச் சுட்டும் குறிப்புமொழி.

இவ்விரண்டு சொற்களையும் ஓசைநீட்டிச் சொல்ல வேண்டும். அவ்வாறு ஆய்த எழுத்தின்ஒலியை மிகுத்துச்  சொன்னாலும் அவ்வொலி மிகுதியைக் குறிப்பதற்கு  ஆய்த எழுத்தை மிகுத்து எழுதுவது இன்று.

“ஆய்த எழுத்து தனக்குள்ள அரைமாத்திரையினும் மிகுந்து ஒலிக்குமிடம் குறிப்பு மொழிகளில் சிறுபான்மைதோன்றும். அவ்வாறு தோன்றுவதை எழுத்தான் எழுதிக்காட்டுவது இன்று” என்பது இந்நூற்பாவால் அறிவிக்கப்பட்டது.

41.

குன்றிசை மொழிவழியின் நின்றுஇசை நிறைக்கும்

நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்தே.

குன்று இசை மொழியின் = போதிய ஒலியில்லாது குறைந்து ஒலிக்கும் சொல்லினிடத்து, நெட்டெழுத்து இம்பர் =  நெடிலெழுத்துகளின் பின்னர், ஒத்த குற்றெழுத்து = நெட்டெழுத்துக்கு இனமான குற்றெழுத்துகள், நின்று இசை நிறைக்கும் = தோன்றி, குறைந்துள்ள ஒலியை நிறைவு செய்யும்.

காட்டு:

மாஅல் :   ‘மால்’ எனும்போது ‘மா’ வுக்குரிய இரண்டு மாத்திரை ஒலி போதவில்லை. ‘ஆ’ வினுக்கு இனமான ‘அ’ தோன்றி அதன் இரண்டு மாத்திரை ஓசையை மூன்று மாத்திரையாக்கியுள்ளது.

(தொடரும்)

குறள்நெறி 01.05.1964